நம்ம வீட்டுப் பிள்ளை – விமர்சனம்

குடும்ப உறவுகளையும், அண்ணன் – தங்கை பாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.

சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் சிவகார்த்திகேயன். அம்மா அர்ச்சனா, தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ், தாத்தா பாரதிராஜா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்

சிவகார்த்திகேயனுடன் இருக்கும் முன்பகையை மனதில் வைத்து ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து பழிவாங்க நினைக்கிறார் நட்டி. அது என்ன பகை, சிவகார்த்திகேயன் தன் குடும்பப் பிரச்சினைகளை எப்படிச் சரி செய்கிறார், தங்கைக்குப் பிரச்சினை என்றவுடன் சிவகார்த்திகேயன் எடுக்கும் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்துக்குச் சரியாக பொருந்தியுள்ளார் சிவகார்த்திகேயன். அப்பா இல்லாததால் குடும்பத்தை கவனித்துக் கொள்வது, அம்மாவின் மனம் நோகாமல் எடுத்துச் சொல்வது, தங்கையின் மீதிருக்கும் அளவு கடந்த பாசம், பெரியப்பா சித்தப்பா உறவுகளுக்காக ஏங்குவது, மாமன் மகள் மீது காதல், தங்கையை அடித்த அவர் கணவரிடம் கோபம் கொள்வது, தங்கை கணவர் செய்த தவறுக்காக எடுக்கும் முடிவு என சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

தங்கையாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது முக்கியமான படம். அண்ணன் மீது பாசம், கணவரை நம்பி ஏமாறுவது, அண்ணனுக்காகக் கணவரிடம் சண்டையிடுவது என நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். வழக்கமாகத் தமிழ் சினிமாவில் உள்ள அண்ணன் – தங்கை காட்சிகள் தான் இந்தப் படத்திலும் உள்ளது. ஆனால், சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா ராஜேஷின் எதார்த்தமான நடிப்பு நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக பாரதிராஜா. பேரனுக்காக ஏங்குவது, மகன் திட்டியவுடன் பேரனுடன் கோபமாகக் கிளம்புவது என பொருத்தமான தேர்வு. ‘சொந்தத்துகிட்டயே தோத்து போகணும்னு நினைக்கிறவனை யாராலயும் ஜெயிக்க முடியாது’ என்ற பேரனுக்காக பேசும் வசனம் எதார்த்தம்.

அம்மாவாக அர்ச்சனா, காதலியாக அனு இம்மானுவேல், பெரியப்பாவாக வேலராமமூர்த்தி, சித்தப்பாவாக சுப்பு பஞ்சு, மாமாவாக சண்முகராஜன், வில்லனாக நட்டி, ‘ஆடுகளம்’ நரேன், ஷீலா, அருந்ததி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. அனைவருமே தங்களது கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு அண்ணனாக சூரி, சூரியின் மகனாக நடித்துள்ள பாண்டிராஜின் மகன் அன்புக்கரசு இருவருமே காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் – சூரி இருவருடனே பயணிக்கும் அன்புக்கரசு அடிக்கும் ஒன்லைனுக்கு தியேட்டரில் அவ்வளவு சிரிப்பு.

அண்ணன் – தங்கை பாசம், பெரியப்பா, சித்தப்பா குடும்ப உறவுகளுக்குள் வரும் சிக்கல்கள், தங்கை கணவருக்கு வரும் சிக்கல் என கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகைக் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது. இமான் இசையில் ‘எங்க அண்ணன்’, ‘உன் கூடவே பிறக்கணும்’ ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

படத்தில் சில குறைகள் இருந்தாலும், அதனை மறந்து போராடிக்காமல் பார்க்க வைத்த விதத்தில் சபாஷ் பெறுகிறது ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.