ஓ மணப்பெண்ணே – விமர்சனம்

நடிப்பு: ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், அஸ்வின்குமார், வேணு அரவிந்த்

இயக்கம்: கார்த்திக் சுந்தர்

இசை: விஷால் சந்திரசேகர்

ஓ.டி.டி: டிஸ்னி ஹாட்ஸ்டார்

தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா – ரீத்து வர்மா நடிப்பில் உருவாகி 2016-ல் வெளியான படம் ‘பெல்லி சூப்புலு’. சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், 30கோடி வசூலை வாரிக்கொடுத்ததோடு, அந்த ஆண்டின் சிறந்தபடத்துக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்று சூப்பர்ஹிட் ஆனது. அப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் ‘ஓ மணப்பெண்ணே’. விஜய் தேவரகொண்டா கேரக்டரில் ஹரீஷ் கல்யாணும், ரீத்து வர்மா கேரக்டரில் பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளார்கள்.

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு கர்ணம் அடித்து படித்து முடித்த நாயகன் கார்த்திக் (ஹரீஷ் கல்யாண்), திருமணத்தின்போது பெண்வீட்டார் தனக்கு வரதட்சணையாக பணம் கொடுப்பார்களே, அதை வைத்து நோகாமல் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கிறான்.

எம்.பி.ஏ. படித்திருக்கும் நாயகி சுருதி (பிரியா பவானி சங்கர்), ஆஸ்திரேலியாவுக்குப் போய் மேல்படிப்பு படித்து, பெரிய கம்பெனியில் பெரிய வேலையில் அமர்ந்த பின்னர் தான் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கிறாள்.

இப்படி முரண்பட்ட நினைப்புகள் கொண்ட கார்த்திக்கும், சுருதியும், பெற்றோர்கள் ஏற்பாடு செய்த பெண்பார்க்கும் படலத்தின்போது சந்திக்கிறார்கள். அப்போது இருவரும் தத்தமது கடந்தகால நிகழ்வுகளையும், எதிர்கால கனவுகளையும் சுவாரஸ்யமான காட்சிகளாய் சொல்லி பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், கார்த்திக் பார்க்க வந்த பெண் சுருதி இல்லை, முகவரி மாறி வந்துவிட்டான் என்ற தர்மசங்கடமான விஷயம் இடைவேளை நெருங்கும்போது தான் தெரியவருகிறது..

எனினும், இந்த சந்திப்பின்போது கார்த்திக்கிற்கு சுவையாக உணவு சமைக்கத் தெரியும் என்பதை சுருதியும், அவளுக்கு வாகன உணவகம் (ஃபுட் ட்ரக் / ஃபுட் ஆன் வீல்ஸ்) தொடங்கும் எண்ணம் இருக்கிறது என்பதை கார்த்திக்கும் தெரிந்துகொண்டதால், இருவரும் சேர்ந்து அந்த தொழிலில் இறங்க முடிவு செய்கிறார்கள்.

இதனிடையே, கார்த்திக்கை தன் மகளுக்கு திருமணம் செய்துவைக்க முன்வருகிறார் ஒரு பெரிய தொழிலதிபர். வரதட்சணை மற்றும் சொத்துக்கு ஆசைப்பட்டு, அந்த பணக்காரப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள கார்த்திக்கும் ஒப்புக்கொள்கிறான்.

கார்த்திக்குக்கு யாருடன் திருமணம் நடந்தது? அவனும் சுருதியும் சேர்ந்து செய்துவந்த ‘வாகன உணவகம்’ தொழில் என்ன ஆனது? சுருதி ஆஸ்திரேலியா சென்றாளா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளிக்கிறது மீதிக்கதை.

ஹரிஷ் கல்யாண், நாயகன் கார்த்திக் கதாபாத்திரத்தில் லவ்வர்பாய்க்கு உரிய ஈர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இயல்பாக சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி சுருதியாக வரும் பிரியா பவானி சங்கர்  நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த அஸ்வின்குமார் நாயகியின் முதல் காதலனாக சிறிது நேரமே வந்தாலும் பார்வையாளர்களின் மனதில் நிற்கிறார்.

நாயகனின் அப்பாவாக வரும் வேணு அரவிந்த் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக வருபவர் அடிக்கடி தனது கணவரை கலாய்க்கும் காட்சிகள் அருமை. நாயகனின் நண்பர்களாக வருபவர்கள் நம்மை அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.

இது ரீமேக் என்றாலும் தெலுங்குப்படத்தை அப்படியே காட்சிக்குக் காட்சி நகல் எடுக்காமல், தமிழ் ஆடியன்ஸூக்கு ஏற்ப ஆங்காங்கே கொஞ்சம் மாற்றம் செய்து, படத்தை காப்பாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர். எனினும் படத்தின் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைவதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் இளசுகளுக்குப் பிடிக்கிற விதமாய் அமைந்திருக்கிறது.

‘ஓ மணப்பெண்ணே’ – யதார்த்தத்துக்கு நெருக்கமான, விரசமில்லாத இனிய காதல் படம்.