7 – விமர்சனம்

ஹவிஷும் நந்திதாவும் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்போது காதலர்கள் ஆகிறார்கள். இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் திடீர் என்று ஹவிஷ் காணாமல் போகிறார். ரகுமான் உதவி கமி‌ஷனராக இருக்கும் போலீஸ் ஸ்டே‌ஷனுக்கு தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார் நந்திதா. இதை கேட்கும் ரகுமான் அதேபோல் இன்னும் ஒரு பெண் ஹவிஷை தன் கணவர் என்றும் கண்டுபிடித்து தருமாறும் புகார் கொடுத்துள்ளதை கூறுகிறார். அடுத்து இன்னொரு பெண்ணும் அதே போல் புகார் கொடுக்கிறார்.

ஹவிஷை போலீஸ் தேடுகிறது. ஒரு கட்டத்தில் போலீசிடம் சிக்கும் ஹவிஷ் இந்த 3 பெண்களையுமே யார் என்றே தெரியாது என்கிறார். இதற்கிடையே ஹவிஷின் பெயர் கார்த்திக் அல்ல கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லும் பைத்தியத்தை யாரோ கொடூரமாக கொலை செய்கிறார்கள். அந்த பழியும் ஹவிஷ் மீது விழுகிறது. உண்மையில் ஹவிஷ் யார்? அவர் 3 பெண்களை ஏமாற்றியது உண்மையா? அவர் கார்த்திக்கா? கிருஷ்ணமூர்த்தியா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.

டைட்டிலுக்கு முன்பே ஒரு குடும்பம் கொல்லப்படுகிறது. அந்த காட்சியில் தொடங்கும் சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. முக்கியமாக இரண்டாம் பாதி முழுக்கவே திருப்பங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி இயக்கி இருக்கிறார் நிசார் சபி.

கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி என 2 மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஹவிஷ். தமிழுக்கு நல்ல அறிமுகம். காதல் காட்சிகளிலும் தன் மீது விழுந்த பழிகளுக்கு காரணம் தெரியாமல் தவிக்கும்போதும் கவர்கிறார். நந்திதா, அனிஷா, அதிதி, திரிதா சவுத்ரி ஆகிய நால்வருமே போட்டி போட்டு கவர்ச்சி விருந்து படைக்கிறார்கள். இவர்களது உண்மையான பின்னணி தெரிய வரும்போது ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்கிறார்கள்.

ரெஜினா கசண்ட்ராவுக்கு ஆச்சர்யமான வேடம். சைக்கோ வில்லி வேடத்தில் மிரட்டி இருக்கிறார். விரும்பியவனை அடைவதற்காக அவர் செய்யும் செயல்கள் பதற வைக்கின்றன.

ரகுமானுக்கு வழக்கமான போலீஸ் வேடம்தான். அவர் வேலை நேரத்தில் குடிக்கும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

ரமேஷ் வர்மாவின் கதை, திரைக்கதை ஒரு நாவலை படிப்பது போல் விறுவிறுப்பாக இருக்கிறது. அதை சுவாரசியமான படமாக நிசார் சபி இயக்கி இருக்கிறார். ஒவ்வொரு மர்மமாக அவிழும் காட்சிகள் திகில் கூட்டுகின்றன.

நிசாரின் ஒளிப்பதிவும் சைத்தன் பரத்வாஜின் இசையும் படத்துக்கு விறுவிறுப்பை கூட்டுகின்றன. கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு கச்சிதம். தெலுங்கு நாயகன் என்பதும் பிற மொழி நடிகர்களும் ஆங்காங்கே வருவதும் படத்தின் பலவீனம்.

மொத்தத்தில் ‘7’ சஸ்பென்ஸ் திரில்லர்.