எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்

நடிப்பு: சூர்யா, பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி, சூரி, புகழ் மற்றும் பலர்

இயக்கம்: பாண்டிராஜ்

தயாரிப்பு: ’சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன்

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு: ரத்தினவேலு

“அண்ணே… விட்ருங்கண்ணே…” என்ற இளம்பெண்ணின் கதறல் சில ஆண்டுகளுக்குமுன் சமூக ஊடகங்களில் வைரலாகி, மனிதாபிமானம் உள்ள மக்களின் மனங்களை பதறச்செய்ததே… நினைவிருக்கிறதா…? “பொள்ளாச்சி பாலியல் கொடூரம்” என்ற தலைப்பில் பத்திரிகைகளும், செய்திச் சேனல்களும் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு குலை நடுங்கச் செய்தனவே… ஞாபகம் இருக்கிறதா…? அந்த சம்பவத்தைத் தழுவி, கொஞ்சம் உண்மையும், நிறைய கற்பனைகளும் கலந்து ‘எதற்கும் துணிந்தவன்’ படக்கதையை கட்டமைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ’ஒரத்த நாடு’, ‘வருச நாடு’ என்றெல்லாம் ஊர்கள் இருக்கின்றன அல்லவா? அதுபோல ‘தென்னாடு’, ‘வடநாடு’ என்ற பெயர்களில் அக்கம்பக்கமாய் இரண்டு ஊர்கள் இருப்பதாக கதை துவங்குகிறது. (ஊர்ப்பெயர்களை இப்படி வைத்ததற்கு வேறு உள்நோக்கம் இருப்பதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல!)

இந்த இரண்டு ஊர்க்காரர்களும் பெண் கொடுத்து – பெண் எடுத்து மணவழி உறவினர்களாக வாழ்ந்து வந்தவர்கள். சில ஆண்டுகளுக்குமுன், வடநாட்டுக்கு ‘வாக்கப்பட்டுப்போன’ தென்னாட்டுப் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள, இதனால் இரண்டு ஊர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, பகைமை வளர்ந்து, கொள்வினை – கொடுப்பினை அற்றுப்போய் விடுகிறது.

தென்னாட்டில் எம்.ஏ.பி.எல். படித்துவிட்டு வக்கீலாக இருக்கும் கண்ணபிரான் (சூர்யா), தனது தந்தை ஆதிராயர் (சத்யராஜ்), தாய் கோசலை (சரண்யா பொன்வண்ணன்) ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார். ஒருநாள் வடநாட்டில் நடக்கும் ஆடல் – பாடல் (’ரெக்கார்டு டான்ஸ்’) நிகழ்ச்சியைப் பார்க்கப்போன கண்ணபிரான், அந்த ஊரைச் சேர்ந்த ஆதினியை (பிரியங்கா மோகன்) சந்தித்து, காதல் கொள்கிறார். பின்னர் பகைமையை மீறி ட்ரமெட்டிக்காக அவரை திருமணமும் செய்துகொள்கிறார்.

வடநாட்டில் இந்திய ஒன்றிய அமைச்சரின் மகனான இன்பா (வினய்) மிகுந்த செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். அவர் தனது ஆட்களைக் கொண்டு, பெண்களை, அவர்களுக்கே தெரியாமல் ஆபாசப் படங்கள் எடுத்து, அவற்றை காட்டி மிரட்டி, அடி பணிய வைத்து, பாலியல் வன்கொடுமை செய்கிறார். அடிபணிய மறுக்கும் பெண்களை படுகொலை செய்கிறார்.

இன்பாவின் கொடூர பாலியல் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் கண்ணபிரான், அவரையும், அவரது ஆட்களையும் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க முயலுகிறார். ஆனால் இன்பாவின் செல்வாக்கு காரணமாக நிலைமை தலைகீழாகி, கண்ணபிரானும், அவரது தந்தையும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இரண்டு மாத சிறைவாசத்துக்குப்பின் ஜாமீனில் வெளியே வரும் கண்ணபிரான், பாலியல் கொடூரர்களான இன்பாவையும், அவரது ஆட்களையும் பிடித்துக்கொண்டுபோய் அடைத்து வைத்து, அவர்களுக்கு விசித்திரமான முறையில் கடும் தண்டனை பெற்றுத் தருகிறார். அது என்ன தண்டனை என்பது க்ளைமாக்ஸ்.

0a1d

வக்கீல் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் வரும் சூர்யா, காதல், காமெடி, டான்ஸ், செண்டிமெண்ட், ஆக்சன் என அனைத்திலும் தூள் பரத்தி மாஸ் அவதாரம் எடுத்திருக்கிறார். குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் ஆவேச சிங்கமாக, முரட்டுக் காளையாக ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி திரையரங்கை அலற விட்டிருக்கிறார். பாராட்டுகள்.

காதலித்து நாயகனை கைப்பிடிக்கும் ஆதினி கதாபாத்திரத்தில் வரும் பிரியங்கா மோகன், படத்தின் முதல் பாதியில் தனது அழகாலும், வெகுளித்தனமான நடிப்பாலும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் அதிக முக்கியத்துவம் பெறும் இந்த கதாபாத்திரத்தை பிரமாதமாக செய்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்பா கதாபாத்திரத்தில் வரும் வினய், ஆடம்பரமான, அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாத ஸ்டைலிஷ் வில்லனாக அசத்தலாக நடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் அழுத்தமான முகபாவம் மூலம் தனது கதாபாத்திரத்தின் கொடூர குணத்தை பார்வையாளர்களுக்கு அவர் கடத்தியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

நாயகனின் தாய் – தந்தையாக வரும் சரண்யா பொன்வண்ணன் – சத்யராஜும், நாயகியின் தாய் – தந்தையாக வரும் தேவதர்ஷனி – இளவரசும், நாயகியின் உறவுக்காரர்களாக வரும் சூரி – குக் வித் கோமாளி புகழும் நகைச்சுவையை வாரி இறைத்து, பார்வையாளர்களை ஆரவாரமாய் கைதட்டி சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

நாயகியின் தோழியாகவும், இடைவேளைக்கான திருப்புமுனையை ஏற்படுத்துபவராகவும் வரும் திவ்யா துரைசாமி யதார்த்தமான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார்.

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றம் புரியும் சமூக விரோதிகளை நீதிமன்றம் மூலம் தண்டிக்க இயலாதபோது, அவர்களுக்கு உரிய கடும் தண்டனையைப் பெற்றுத்தர, நீதிமானான ஒரு வக்கீல் எந்த எல்லை வரை செல்லலாம் என சிந்தித்து இப்படத்தின் உள்ளடக்கத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். அந்த உள்ளடக்கத்தை ’காமெடி, குடும்ப செண்டிமெண்ட், கிராமம்’ என்ற தனது வெற்றிகரமான பார்முலா வழியே திரையில் நகர்த்திச் சென்றிருக்கிறார். இதனால் நாகரிகமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு வலிமையான சமூகக்கருத்தை பார்வையாளர்களுக்குச் சொல்லுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் பாண்டிராஜ். ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும்; பாலியல் கொடூரங்களை எதிர்கொள்ளும் பெண்கள் எப்படி துணிச்சலாக இருக்க வேண்டும் என்று எடுத்துச சொல்லுகையில் இயக்குனர் கோபுரமாய் உயர்ந்து நிற்கிறார்.

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓ.கே. ரகம். பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்துக்கு பெரிதும் உதவியிருக்கிறது.

ரத்தினவேலு ஒளிப்பதிவு கச்சிதம்.

’எதற்கும் துணிந்தவன்’ – குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய படம்!

 

Read previous post:
0a1a
கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்: ‘லாக்கப்’ இயக்குனர் இயக்குகிறார்!

'கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி' என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விருது -  விருந்து இரண்டையும் படைக்கும் வித்தியாசமான  கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். பல திருப்பங்கள்  நகைச்சுவை, சண்டை

Close