“டம்மி பீஸ்” ஓ.பி.எஸ். – “நிழல் தாரகை” சசிகலாவின் போலீஸ் அராஜகத்துக்கு சி.பி.எம். கண்டனம்!

தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு  துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் – “தங்க தாரகை” ஜெயலலிதாவின் “நிழல் தாரகை” சசிகலா ஆகியோரின் தமிழக அரசிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில கிளை கூறியிருப்பதாவது:

நரேந்திர மோடியின் மத்திய பாஜக அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சொல்லொண துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சிறு-குறுந்தொழில், வணிகம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய மோடி அரசின் தவறான நடவடிக்கைகளை கண்டித்து வாலிபர், மாணவர் இயக்கங்கள் சார்பில் டிசம்பர் 31 அன்று சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்ற கண்டன இயக்கத்தின்போது, பள்ளிக்கரணை காவல்துறையினர் கண்டன இயக்கத்தில் பங்கெடுத்தவர்கள் மீது தொடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். இளம் பெண்கள் மீது பாலியல் ரீதியான சீண்டல்களோடு வன்முறை தாக்குதலும் தொடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு காவலில் இருந்தவர்கள் கொடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பொய் வழக்கு புனையப்பட்டு மருத்துவ சிகிச்சையின்றி படுகாயமடைந்த நிலையில் 14 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அத்துமீறலையும், மனித உரிமை மீறலையும் கண்டித்தும், மத்திய அரசின் செல்லா நோட்டு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை கண்டித்தும் மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கண்டன இயக்கம் நடைபெற்றுள்ளது. அமைதியாக இயக்கம் நடத்திய இந்த இளைஞர்களையும், பெண்களையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து, ஆண் – பெண் என பாராது போலீஸ் வாகனத்தில் அனைவரையும் தூக்கியெறிந்துள்ளனர். காவல்துறையின் இந்த அநாகரீக அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சென்னை பள்ளிக்கரணையில் நடந்தது போல், மதுரையிலும் போலீஸ் காவலில் இருந்த இளைஞர்கள் மீதும், பெண்கள் மீதும் குண்டாந்தடிகளைப் பயன்படுத்தி கொடுந்தாக்குதல் வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். மயங்கி விழும் நிலையிலும் பெண்களின் உடைகளை களைந்து, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளனர். இதில் மாதர் சங்கத் தலைவர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், ஈஸ்வரி, மலர்விழி மற்றும் சில இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாகப் பாதித்துள்ளனர். சார்லஸ் எனும் இளைஞனை காவல்துறையினர் குண்டாந்தடிகளால் சுற்றி நின்று வெறியாட்டம் போட்டுள்ளனர். போலீஸ் காவலில் இருந்தவர்களை சுற்றி வளைத்து நான்கு சுவர்களுக்குள் காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனம் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல – மனித உரிமைகளுக்கே எதிரானதாகும்.

இத்தனையையும் அரங்கேற்றிய காவல்துறையினர் சார்லஸ் மீது பொய்யான வழக்கை புனைந்து சிறையிட்டுள்ளனர். பாஜக அரசின் செல்லா நோட்டு அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முன்னிறுத்தி கண்டன இயக்கம் நடத்துவதற்கு கூட தமிழகத்தில் காவல்துறை அனுமதி மறுக்கப்படும் நிலையும், கண்டன இயக்கம் நடத்துவோர் மீது மனிதத்தன்மையற்ற வகையில் மிருகத்தனமான தாக்குதல் தொடுத்து சிறையிடும் நடவடிக்கையும் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. இது தமிழக அரசின் காவல்துறை கொள்கை சார்ந்த அம்சமாக தெரிகிறது. மக்களுக்கான பாதிப்புகளை முன்னிறுத்தி நடைபெறும் ஜனநாயக ரீதியான இயக்கங்கள் மீது தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்களை கைவிட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

சென்னையிலும், மதுரையிலும் பொய் வழக்கு புனைந்து சிறையிடப்பட்டுள்ள இளைஞர்களையும், மாணவர்களையும் அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று, நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும்; குண்டாந்தடிகளைப் பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான வழிமுறைகளில் கொடுந்தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும்; மனித உரிமைகளை மீறி இளம் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீதும், காவலில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வெறியாட்டத்திற்கு காரணமான காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.