“இந்த மண்டைகள் உடைபடுவது உங்களுக்காகத் தான்…!”

டாஸ்மாக்கை எதிர்த்து அதிகம் உடைபட்டது அவர்களின் மண்டைகள்தான். இப்போது பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து உடைபட்டிருப்பதும் அந்த மண்டைகள்தான்.

அந்த மண்டைகள் கொழுப்பு எடுத்தவைதான். எதற்கு வெட்டியாய் இப்படி உடைபடுகின்றன? பதவி ஆதாயம் கிடையாது. ஒவ்வொரு மண்டைக்கும் இன்ன தொகை என பெட்டி பேரமும் கிடையாது.

அந்த மண்டைகளில் பேன் இருக்காது. முடி கூட இருக்காது. தையல்கள் நிறைய இருக்கும். வேண்டுமானால் மூளை வளர்ச்சியால் சற்று வீங்கி இருக்கலாம்.

அரசுக்கும் காவல்துறைக்கும் அந்த மண்டைகள் ரொம்ப பிடிக்கும். புரட்சி மண்டைகள். கேட்பதற்கும் நாதி கிடையாது. நீங்கள் பார்த்தாலும் ‘இவர்களுக்கு வேறு வேலை இல்லை’ என சொல்லி கடந்து விடுவீர்கள்.

என்ன ஒன்று, இப்போது மண்டைகளில் இருந்து, மார்பகங்களுக்கு பேச்சு மாறியிருக்கிறது. ஆனால், ஆண் என்னும் கோழைத்தனத்துக்கு அந்த மார்பகங்கள் அஞ்சாது. மனிதம் என்னும் பேருன்னதத்தை தாங்குபவை அவை. அந்த மார்பகங்களுக்குள் சுரண்டலுக்கு எதிரான கொடுஞ்சினம் கனன்று கொண்டிருக்கிறது.

அவை அநீதியை பொசுக்க வல்லவை. அப்படி ஒரு சினந்த மார்பகம்தான் மதுரையை எரித்தது. அப்படிப்பட்ட மார்பகங்கள் நிறைய இருக்கின்றன. உடைபடும் மண்டைகளும் வைத்திருக்கிறோம்.

எத்தனை கைகள் நீண்டாலும் கவலை இல்லை. அடுத்து அந்த கைகள் உயிர்களுக்கு பாயும். அதற்கும் கவலை கொள்ள மாட்டார்கள். அப்படி நிறைய உயிர்கள் அங்கே இருக்கின்றன. நீட்டும் அத்தனை கைகளுக்கு எங்கே போவீர்கள்?

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. இந்தியாவில் எங்கும் சென்று கணக்கெடுத்து பாருங்கள். உடைக்கப்பட்ட மண்டைகளில் அவர்கள் மண்டைகள்தான் அதிகம் இருக்கும். பறிக்கப்பட்ட உயிர்களில் அவர்களதுதான் அதிகம் இருக்கும்.

அந்த மண்டைகள் உடைபடுவது உங்களுக்காகத்தான். அந்த மார்பகங்கள் கசக்கப்படுவது உங்கள் மார்பகங்களை காப்பாற்றத்தான். அவர்கள் உயிர்களை கொடுப்பது நீங்கள் எல்லாம் உயிர்வாழத்தான்.

ஒரே ஒரு ‘உச்’சாவது கொட்டிவிட்டு கடந்து போங்கள். அவர்களின் தியாகங்களுக்கு ஒரு சதவிகிதமேனும் நன்றியுணர்ச்சி காட்டுகிறீர்கள் என நினைத்து கொள்வோம். இல்லையென்றாலும் பரவாயில்லை.

ஏனெனில் அவர்கள் உங்கள் எதையும் எதிர்பார்க்காதவர்கள். உங்களோடு நீங்கள் சேர்த்து கொள்ளாத உங்களவர்கள். அவர்கள் வாழ்க்கை சிவப்பானது. அழகானது. வீரம் செறிந்தது.

அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்!

எளிதில் உடைக்க முடியாத மண்டைகள்!

RAJASANGEETHAN JOHN

 

Read previous post:
0a1d
“டம்மி பீஸ்” ஓ.பி.எஸ். – “நிழல் தாரகை” சசிகலாவின் போலீஸ் அராஜகத்துக்கு சி.பி.எம். கண்டனம்!

தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு  துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் -

Close