ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமாருக்கு ‘மேற்கு தொடர்ச்சி மலை’ இயக்குனர் கேள்வி!

மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தை நடிகர் சிவகுமார் மற்றும் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். ரிப்பன் கட் பண்ணுவதற்கு சிவகுமார் அருகில் வந்தபோது, ஓரமாக நின்றுகொண்டிருந்த  ரசிகர் ஒருவர் தனது செல்போனை உயர்த்தி செல்ஃபி எடுக்க தயாரானார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிவகுமார் செல்ஃபி எடுக்கும் ரசிகர் கையிலிருந்த செல்போனை திடீரென தட்டிவிட்டார். அந்த ரசிகர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

இந்த வீடியோ பதிவு பெரும் வைரலாகப் பரவியது. இதை வைத்து மீம்ஸ் எல்லாம் உருவாக்கி வெளியிட்டார்கள். “சிவகுமார் ஒரு பெரிய மனிதர், தவறாது யோகாசனம் செய்பவர், மகாபாரத சொற்பொழிவு ஆற்றுபவர், மேடைகள் தோறும் மனித உறவுகள் பற்றி உருக்கமாக உபதேசம் செய்பவர். அப்படிப்பட்டவர் தனக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த ரசிகரிடம் ‘செல்ஃபி எடுக்காதே’ என்று கண்டிப்புடன் வார்த்தைகளில் சொல்லியிருக்கலாமே? வன்முறை வெறியாட்டமாய் செல்போனை ஏன் மூர்க்கத்தனமாக தட்டிவிட வேண்டும்?” என்கிற ரீதியில் பலரும் விமர்சித்தனர். இதை தொடர்ந்து, ரசிகரின் செல்போனைத் தட்டி விட்டது ஏன் என்று சிவகுமார் விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் வருமாறு:

செல்ஃபி எடுப்பது என்பது நீங்கள், உங்கள் குடும்பம் கொடைக்கானல் லேக், ஊட்டி தொட்டபெட்டா போய் அதை கம்போஸ் செய்து எடுக்கும் விவகாரம். அது பர்சனல் சமாச்சாரம். அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஒரு பொது இடத்தில் ஒரு 200, 300 பேர் கலந்துகொள்ளும் விழாவுக்குப் போகும்போது காரிலிருந்து இறங்கி மண்டபத்துக்கு போகும் முன்பு பாதுகாப்புக்குச் செல்லும் ஆட்களைக்கூட ஓரம் தள்ளிவிட்டு ஒரு 25 பேர் செல்போனைக் கையில் வைத்துக் கொண்டு செல்ஃபி எடுக்கிறேன் சார் என்று நடக்கவே விடாமல் செய்வது எப்படி நியாயமாக இருக்கும்?

உங்களைப் படம் எடுக்கிறேன் சார் என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டீர்களா? விஐபி என்பவன் நாம சொன்னபடி கேக்கணும், நில்லுனா நிக்கணும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? எத்தனையோ ஆயிரம் பேருடன் ஏர்போர்ட்டிலும் திருமண விழாக்களிலும் செல்போனில் போஸ் கொடுத்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா?.

நான் புத்தன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. நானும் மனிதன்தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில் ஹீரோதான். அதே சமயம் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு சிவகுமார் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, சிவகுமாரின் செயலை வன்மையாக கண்டித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் லெனின் பாரதி வெளியிட்ட பதிவில், ”செல்ஃபி எடுத்தவரின் கையைத் தட்டிவிட்ட நடிகர் சிவகுமாரின் கை, குறைந்தபட்சம் தன் மகன்கள் கட் அவுட்களுக்கு பால் அபிசேகம் பண்ணுகிற, வாழ்த்துப் போஸ்டர் ஒட்டுகிற மற்றும் தன் மகன்கள் நடித்த படங்களை லைக் செய்கிற கைகளைத் தட்டி விடுமா…?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.