கள்ளம் கபடம் இல்லாத கலகலப்பான குழந்தைகளின் படம் ‘வானரப்படை’!

ஸ்ரீ ருக்மணி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘வானரப்படை’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர் – கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

அவந்திகா  என்ற சிறுமி முத்தையா கண்ணதாசனின் மகளாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் இந்தியாவில் பிரபல நடிகைகள் நடித்த விளம்பரப் படங்களில் உடன் நடித்து உள்ளார். குறிப்பாக,ஜோதிகா நடித்த பல விளம்பரப் படங்களில் அவந்திகாவும் உடன் நடித்துள்ளார்

அவந்திகாவுடன் அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் ஆகிய 6 சிறுவர் – சிறுமியர் வானரப்படையாக நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர் – சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக இந்த சிறுவர் – சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.ஜெயபிரகாஷ். இவர் கே.ஆர். இயக்கிய பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்ததுடன் ‘நேர் எதிர்’ என்ற படத்தை இயக்கியவர்.

‘வானரப்படை’ பற்றி இயக்குனர் எம்.ஜெயபிரகாஷ் கூறுகையில், “பெற்றோருக்கும்  அவர்களது  குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தான் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடுகிறது. அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மனப் போராட்டங்களை சொல்லும் திரைப்படமாக உருவாக உள்ளது ‘வானரப்படை” என்றார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது…ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு நடைபெறுகிறது…

ஒளிப்பதிவு – லோகி

படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்

கலை – ஏ.சண்முகம்

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி