டி.டி.வி. தினகரனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்!

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸூக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த இருக்கிறது டெல்லி போலீஸ்.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட தினகரன், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் தினகரனிடம் விசாரணை நடத்த அனுமதி வேண்டி டெல்லி காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதே சமயம் விசாரணைக்கு தினகரன் ஒத்துழைப்பு தந்து வரும் நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தினகரன் தரப்பு வழக்கறிஞரும் தனது வாதத்தை முன்வைத்தார்.

ஆனால் தினகரன் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த திஸ் ஹாசாரா நீதிமன்றம், தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

மேலும் சென்னை பெங்களூரு கொச்சின் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் தினகரன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என தெரிகிறது.