திருமணம் – விமர்சனம்

வானொலியில் ஆர்ஜேவாக இருக்கும் உமாபதியும், பர்னிச்சர் ஸ்டோர்ஸில் பணிபுரியும் காவ்யா சுரேஷும் காதலர்கள். இருவீட்டார் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் இருவரும் தெளிவாக இருக்கின்றனர். காவ்யா சுரேஷின் அண்ணன் சேரன். வருமானவரித் துறையில் அலுவலராக பணியாற்றுகிறார். பொது விஷயம் தொடங்கி சொந்த விஷயம் வரைக்கும் நேர்மை, சிக்கனம், எளிமை என கறார் மனிதர்.

நாயகன் உமாபதியின் அக்கா சுகன்யா. ஜமீன் பரம்பரை என்பதால் எதிலும் எப்போதும் எங்கேயும் அவர் ஆடம்பரப் பிரியராக இருக்கிறார். உமாபதியும், காவ்யா சுரேஷும் தங்களது காதல் விஷயத்தை வீட்டில் தெரிவிக்கின்றனர். தங்கைக்கு கணவராக வருபவர் என்பதால் உமாபதியின் குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள் பற்றிய விசாரணையில் இறங்குகிறார், சேரன். தன் தம்பி தேர்வு செய்திருக்கும் வாழ்க்கைத் துணை சரியாக இருக்குமா என்று காவ்யா சுரேஷை சந்திக்கிறார், சுகன்யா. முடிவில் இருவீட்டாருக்கும் பிடித்துப்போக திருமண ஏற்பாடுகளில் இறங்குகின்றனர்.

ஜமீன் பரம்பரை வீட்டு திருமணம் என்பதால் பிரம்மாண்டமாக இந்த திருமணத்தை தடபுடலாக நடத்த நினைக்கிறார் சுகன்யா. ஆனால், திருமணம் என்கிற பெயரில் எதற்கு வீண் செலவு என்று மணமகன் வீட்டார் முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் கொஞ்சமும் இடம் கொடுக்காதவராக இருக்கிறார் சேரன். இதனால் சுகன்யாவுக்கு கோபம் வருகிறது. அந்தக் கோபம் ஒருகட்டத்தில் சேரன் குடும்பத்தினர் மீது வெறுப்பாக மாறி, தன் தம்பிக்கு வேறொரு இடத்தில் மணப்பெண் பார்க்கும் முடிவுக்கு வருகிறார்.

இதை மணமகள் வீட்டுக்காரரான சேரன் எப்படி எதிர்கொள்கிறார்? மற்றொரு பெண்ணுடன் திருமணம் என்று அக்கா சுகன்யாவின் பேச்சுக்கு உமாபதியின் பதில் என்ன? இந்த மாதிரியான சூழலில் நாயகி காவ்யா சுரேஷ் எடுக்கும் முடிவு என்ன? இதுதான் ’திருமணம் சில திருத்தங்களுடன்’ படத்தின் மீதிக் கதை.

‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்துக்குப் பிறகு சேரன் இயக்கியுள்ள திரைப்படம் இது. காதல், பாசம், சமூகப் பொறுப்பு என ஒவ்வொரு முறையும் தான் கையில் எடுக்கும் விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிற ஒரு படைப்பாளி. இம்முறை திருமணம் தொடர்பான முன் ஏற்பாடுகள், திட்டமிடல், அது ஏற்படுத்தும் பின் விளைவுகள் ஆகியவற்றை சார்ந்த களத்தில் நின்று படமாக்கியுள்ளார்.

அழைப்பிதழ், பட்டுப் புடவை, மண்டபம், உணவு உபசரிப்பு என ஒரு திருமணத்தின் மைய அங்கமாக உள்ள பல விஷயங்களில் எதற்கு வீண் செலவு என்கிற கருத்தை அடிப்படையாக தாங்கி நிற்கும் திரைக்கதை. அதற்குள் லஞ்சம், இயற்கை விவசாயம், குடும்ப பாசம் என கிளை பிரிந்து கதை செல்கிறது.

ஒரு திருமண நிகழ்வு ஏற்பாடு நடக்கும்போது மணமக்கள் வீட்டார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியாக பதிவு செய்த விதம் நன்று.

சேரன், சுகன்யா இருவரும் தங்களுடைய கதாபாத்திர அமைப்புக்கேற்ப நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, கோபத்தை வெளிப்படுத்துவதாகட்டும், ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு மனம் மாறும்போதும் சுகன்யா கவனிக்க வைக்கிறார். அதுவே உமாபதி, காவ்யா சுரேஷ் இருவரது நடிப்பில் இன்னும் சற்று முன்னேற்றம் தேவை.

ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான கருத்தை முன் வைத்து நகரும் கதையின் போக்கை தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், பாலசரவணன் மூவரது கதாபாத்திரமும் மென்மையாக்குகின்றன. ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்டோரின் நடிப்பு கதைத் தேவையைப் பூர்த்திசெய்வதாக அமைந்துள்ளது.

திருமணப் பேச்சு, அது தொடர்பான ஏற்பாடுகள் உள்ளிட்ட சில இடங்களில் சபேஷ் முரளியின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. படத்தின் பாடல்களுக்கான இசை சித்தார்த் விபின். அவரது பங்களிப்பில் பெரிதாக தனித்தன்மை இல்லை. இந்தத் திருமணத்தில் இன்னும் நிறைய திருத்தங்களை சேரன் செய்திருக்கலாம்.