மாலை நேரத்து மயக்கம்’ விமர்சனம்

கணவனேயானாலும் மனைவியின் சம்மதம் இல்லாமல் அவளை பலவந்தமாக புணர்ந்தால் அது குற்றம் என்ற சமீபத்திய விழிப்புணர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.

நாயகன் பாலகிருஷ்ணா தந்தை அழகம் பெருமாளின் அரவணைப்பிலேயே வளர்கிறார். இவர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். இவருக்கு நேர் எதிராக நாயகி வாமிகா சுதந்திரமாக வளர்ந்தவர். ஆண், பெண் நட்பு பாகுபாடு இல்லாமல் இருப்பவர். இவருடைய அம்மாவுக்கு கேன்சர் என்பதால் வாமிகாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆனால், வாமிகாவோ திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் பெற்றோர்களின் வற்புறுத்தலின் காரணமாக பாலகிருஷ்ணாவை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் இவர்கள் திருமணமாகியும் கணவன், மனைவி என்ற உறவு இல்லாமல் இருந்து வருகிறார்கள். நாட்கள் வாரங்களாக, வாரம் மாதங்களாக, மாதம் வருடமாக மாறியும் இவர்களிடையே நெருக்கம் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஒருநாள் வாமிகாவின் விரும்பம் இல்லாமல், அவரை பாலகிருஷ்ணா பலாத்காரம் செய்துவிடுகிறார். வலுக்கட்டாயமாக தன்னை அடைந்ததால் பாலகிருஷ்ணா மீது கோபப்பட்டு அவரை பிரிய நினைக்கிறார் வாமிகா. விவாகரத்தும் கேட்கிறார். ஆனால், பாலகிருஷ்ணவோ தெரியாமல் செய்த தவறுக்காக மிகவும் வருந்துகிறார்.

இறுதியில் பாலகிருஷ்ணாவின் தவறை மன்னித்து அவருடன் வாமிகா இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் பாலகிருஷ்ணா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பாவியாக இவர் செய்யும் காட்சிகள் ரசிக்க வைத்திருக்கின்றன. மனைவி மேல் உள்ள ஆசையால் அரக்க குணத்தை காட்டும்போது மிரட்டியிருக்கிறார். வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் நாயகி வாமிகா. பாலகிருஷ்ணாவை வெறுத்து ஒதுக்கும் காட்சிகளிலும், பிறகு அவரை பிரிந்து அன்பிற்காக ஏங்கும் காட்சிகளிலும் நடிப்பு திறன் பளிச்சிடுகிறது.

பொதுவாக செல்வராகவன் கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இப்படமும் விதிவிலக்கல்ல. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். கணவராக இருந்தாலும் விருப்பமில்லாமல் தன் மனைவியை அடைந்தால் அது கலவியல் வன்முறை தான் என்பதை மிக அழுத்தமாக கூறியிருக்கிறார். இந்த கதையை செல்வராகவன் இயக்கினால் எப்படி இருக்குமோ அதேபோல் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அவரது மனைவி கீதாஞ்சலி.

அம்ரித் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

‘மாலை நேரத்து மயக்கம்’ – வாலிப நெஞ்சங்களை மயக்கும்!

Read previous post:
karaiooram - review
கரையோரம் – விமர்சனம்

மனித மனத்தின் பேராசைகளையும், அவற்றை அடைய அது நாடும் குறுக்கு வழிகளையும் விறுவிறுப்பாகச் சொல்லும் படம் ‘கரையோரம்’. அழகிய நாயகியை மையமாக வைத்து, சஸ்பென்ஸ், கிரைம், திகில்,

Close