தொடரி – விமர்சனம்

“தேங்க் யூ ஜீசஸ்” என வழக்கம் போல் “இயேசுவுக்கு நன்றி” கார்டு போட்டுவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். ஆனால் இயேசுவை விட கிராபிக்ஸ் ஜாலங்களையே அதிகம் நம்பி இப்படத்தை எடுத்திருக்கிறார் என்பதை காட்சிக்குக் காட்சி நிரூபித்திருத்திருக்கிறார். “தேங்க் யூ ப்ளூமேட்!”

மலையும் மலை சார்ந்த காதலும் (‘மைனா’), வனமும் வனம் சார்ந்த காதலும் (‘கும்கி’), கடலும் கடல் சார்ந்த காதலும் (‘கயல்’) என படங்கள் இயக்கிய பிரபுசாலமன், இந்த முறை ரயிலும் ரயில் சார்ந்த காதலும் என களம் இறங்கியிருக்கிறார். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

டெல்லியிலிருந்து சென்னை நோக்கி புறப்படுகிறது ‘ஜிடி’ எனப்படும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில். அந்த ரயிலுக்குள் இருக்கும் கேண்டீனில் சப்ளையராக பணியாற்றுகிறான் பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீஷா, அவரது ‘டச்சப் கேர்ள்’ சரோஜா (கீர்த்தி சுரேஷ்), மத்திய அமைச்சர் ரங்கராஜ் (ராதாரவி), அவரது பி.ஏ, அவர்களது பாதுகாப்பு கமாண்டோ நந்தகுமார் (ஹரீஷ் உத்தமன்) என எழுநூற்றுச் சொச்சம் பேர் பயணிக்கிறார்கள்.

தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதையே தனது வாழ்வின் லட்சியமாக கொண்டிருக்கும் சாமானியனான பூச்சியப்பன், டச்சப் கேர்ள் சரோஜாவை கண்டதும் காதல் கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கும், அமைச்சரின் பாதுகாப்பு கமாண்டோவான நந்தகுமாருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. இதில் வன்மம் கொள்ளும் கமாண்டோ, பூச்சியப்பனை பழி தீர்க்க தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறான்.

இதற்கிடையில், ரயில் உத்தரப்பிரதேசத்தை கடக்கும்போது, வழியில் ஒரு மாடு ரயிலில் மோதி இறந்துவிட, எஞ்சின் டிரைவர் (ஆர்.வி.உதயகுமார்), உதவி டிரைவர் (போஸ் வெங்கட்), ரயில்வே கார்டு ஆகியோருக்கு இடையில் சச்சரவும் மோதலும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் உதவி டிரைவரும், ரயில்வே கார்டும் இல்லாமலேயே ரயிலை கிளப்பிக்கொண்டு போகிறார் டிரைவர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் எஞ்சினுக்குள்ளேயே உயிரிழந்து சரிந்துவிட, ரயில் கட்டுப்பாடின்றி 120 கி.மீ. வேகத்தில் தறிகெட்டு ஓட ஆரம்பிக்கிறது. அதன்பின் ‘தொடரி’ என்ன ஆனது? அதனுள் இருந்த எழுநூற்றுச் சொச்சம் பேரின் கதி என்ன? என்பதை மீதிக்கதையில் சொல்லி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் படத்தை முடிக்கிறார்கள்.

ரயில் கேண்டீன் சப்ளையர் பூச்சியப்பனாக வரும் தனுஷ், படத்தின் கதை நகர்த்தலுக்கு உதவியாய் இருக்கிறார். வழக்கம்போல நாயகனுக்கான அம்சங்களை குறைவில்லாமல் செய்யும் தனுஷ், கீர்த்தி சுரேஷை காதலுடன் பார்க்கும்போது மட்டும் கூடுதல் பிரகாசம்.

டச்சப் கேர்ள் சரோஜாவாக வரும் கீர்த்தி சுரேஷ் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாகக் கையாண்டிருக்கிறார். வெகுளியும், வெள்ளந்தித்தனமான மனமும் கொண்டவர் என்பதைக் காட்சிக்கு காட்சி பதிவு செய்யும் விதம் ரசிக்க வைக்கிறது. எமோஷன் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.

சக சப்ளையராக வரும் கருணாகரனின் கவிதை காமெடி, மத்திய அமைச்சராக வரும் ராதாரவியின் அரசியல் பஞ்ச் டயலாக், அவரது பாதுகாப்பு கமாண்டோவாக வரும் ஹரிஷ் உத்தமனின் முறைப்பு, படத்தை சுவாரஸ்யம் ஆக்குகின்றன.

ரயில் கேண்டீன் மேனேஜராக வரும் தம்பி ராமையா ஓரிரு இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். தேசிய பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே அதிகாரிகளாக வரும் கணேஷ் வெங்கட்ராம், சின்னி ஜெயந்த், இயக்குனர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கும்பலுக்கு நடுவே வந்து போகிறார்கள்.

ஒரு படத்தை ஓடும் ரயிலிலேயே எடுக்கலாம் என்ற சிந்தனைக்கும், தமிழில் பெயர் வைத்ததற்கும் இயக்குனர் பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள். ரயில் கொள்ளை உட்பட ஓடும் ரயிலில் என்னென்ன நடக்குமோ எல்லாவற்றையும் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார். ரயில் இயக்கம் பற்றிய பல அரிய தொழில்நுட்ப விவரங்களை போரடிக்காமல் பார்வையாளர்களுக்கு பாந்தமாக கடத்தியிருக்கிறார். இந்திய அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் இருக்கும் ‘தீவிரவாத போஃபியா’ எனப்படும் மனநோயை நக்கலடித்து நார் நாராய் கிழித்திருக்கிறார். டிவி சேனல்கள் நடத்தும் ‘விவாத நிகழ்ச்சி’கள் மீது தனக்கு இருக்கும் கடுப்பையெல்லாம் மொத்தமாக கொட்டித் தீர்த்திருக்கிறார். இந்த விவாதங்களில் கலந்துகொள்வோரை வசனங்களால் கிழித்து, கேள்வி கேட்டிருப்பது சபாஷ்.

ஊடகங்களை நம்பி ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முடிவுக்கு வருவது, அவ்சர சூழலிலும் அதிகாரிகள் மாய்ந்து மாய்ந்து பேசிக்கொண்டிருப்பது, வெகுவேகமாக ஓடும் ரயிலை ஊடகங்கள் காட்சிப்படுத்துவது, தீயணைப்பு வாகனங்கள் சரியாக தீப்பிடித்த ரயிலில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது, அந்த அவசர அபாய சூழலில் நிகழும் காமெடி- காதல் காட்சிகள் என பல அம்சங்கள் படத்தின் நேர்த்தியை, நம்பகத்தன்மையை குறைக்கின்றன. இயக்குனர் பிரபு சாலமன் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால், கிராபிக்ஸ் வடிவமைப்புக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்பது நிச்சயம்.

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு ஓ.கே. ரகம். டி.இமானின் இசை படத்தை தூக்கி நிறுத்த பயன்படுகிறது. “போன உசுரு வந்துடுச்சு…” என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் படத்துடன் பொருந்திப் போகிறது.

‘தொடரி’ – வரவேற்கத் தக்க புதிய முயற்சி! பார்க்கலாம்!