கண்ணே கலைமானே – விமர்சனம்

மனிதர்களின் மேம்பட்ட மென்மையான உணர்வுகளை அழகாகவும், அழுத்தமாகவும் சித்தரிக்கும் ‘ஃபீல்குட் மூவி’ ரக படங்களை எடுப்பதில் பெயர் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. தென்மேற்கு பருவக் காற்று, நீர்ப்பறவை, ‘தர்மதுரை’ போன்ற படங்களை இயக்கிய இவரின் புதிய படைப்பு ‘கண்ணே கலைமானே’. நீர்நிலை, மனித வாழ்வியல் என ஒவ்வொரு முறையும் சமூக பொறுப்புமிக்க களத்தில் நின்று திரைக்கதை அமைக்கும் இயக்குநர், இந்த முறை வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையும் என்ற களத்தில் பயணித்திருக்கிறார்.

விவசாயக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தன் சொந்த ஊரான மதுரை அருகே சோழவந்தானில் மண்புழு உரத் தொழிற்சாலை நடத்தி வருகிறார் கமலக்கண்ணன் (உதயநிதி ஸ்டாலின்). இயற்கை விவசாயம் மீது பெருவிருப்பம் கொண்ட அவர், அன்றாட வாழ்க்கையை நகர்த்த சிரமப்படும் ஊர்க்காரர்களுக்கு மதுரை கிராம வங்கியில் கால்நடை வளர்ப்புக்காக கடன் வாங்கிக் கொடுத்து, அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்கிறார். மேலும் மருத்துவ மாணவிக்கு கல்விக் கடன் வாங்கித் தருவது என கிராமத்தில் ஒரு உபகார மனிதராக உலவுகிறார்.

அந்த ஊருக்கு கிராம வங்கி மேலாளராக வருகிறார் பாரதி (தமன்னா). மிக நேர்மையான அதிகாரியான அவர், வங்கியில் கடன் வாங்கிவிட்டு, அதைக் கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்களைத் தேடித் தேடிப் பிடித்து வசூல் செய்கிறார்.

வங்கியில் வழங்கும் விவசாயக் கடனில் அதிக அளவுக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் கமலக்கண்ணனிடம் கெடுபிடி காட்டி பணத்தைக் கட்ட வைக்கிறார் பாரதி.

ஊருக்குள் வசதியாக இருக்கும் கமலக்கண்ணன் எதற்காக விவசாயக் கடன் வாங்குகிறார் என்பதை கண்டறிகிறார் பாரதி. மேலும் ஊர்க்காரர்கள் மீது கமலக்கண்ணனின் பாசத்தையும் அறிந்துகொண்டு அவர் மீது விருப்பம் கொள்கிறார்.

முதலில் மோதல் சில எதிர்ப்புகளுக்குப் பிறகு, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி எளிமையான திருமணத்தில் முடிகிறது அந்த விருப்பம். பிறகு, அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பம். அதில் இருந்து பாரதியும், கமலக்கண்ணனும் மீண்டார்களா என்பது மீதிக் கதை.

சந்தானத்துடன் சேர்ந்து காமெடி படங்களில் நடித்துக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின், சமூகத்தின் ஜீவாதாரப் பிரச்சினைகளைப் பேசும் படத்தில் நடித்ததற்காக அவருக்கு பாராட்டுகள்.

பல காட்சிகளில் அவருடைய ஒரே மாதிரியான முகபாவனைகள் கொஞ்சம் அலுப்பூட்டினாலும், அவர் ஏற்றிருந்த கமலக்கண்ணன் கதாபாத்திரத்தை ரசிக்க முடிகிறது. தமன்னாவுடன் அவரது நட்பு, காதலாக மாறுவது மேலோட்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

காட்டன் புடவைகளில் விரைப்பாக வலம் வரும் தமன்னா, தனது அனுபவ நடிப்பால் சில காட்சிகளில் உதயநிதியை விட ஸ்கோர் செய்கிறார். தான் ஏற்ற கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி, அப்பாவாக நடிக்கும் பூ ‘ராம்’, கமலக்கண்ணனின் நண்பர்கள், பள்ளிக்காலத் தோழி வசுந்தரா என அனைவரும் மிகையில்லாமல் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

படம் தொடங்கியது முதல் பெரிதாக திருப்பங்களோ, எதிர்பார்ப்புகளோ இல்லாமல் இயல்பான வாழ்வியல் பாதையில் படம் நகர்ந்து செல்கிறது. அதில் சற்றும் தொய்வோ, சோர்வோ இல்லாமல் செய்து இருப்பதுதான் திரைக்கதையின் சிறப்பு. இந்தப் பயணத்துக்கு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை பெரிய பலம். ‘நீண்ட மலரே’ உள்ளிட்ட பாடல்களில் வைரமுத்துவின் வரிகளும் இதற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

‘ஒரு புடவை நெய்யறதுக்கு, ஒரு நெசவாளி 20 ஆயிரம் தடவை கை, காலை ஆட்டணும்’ போன்ற கூர்மையான வசனங்கள் படத்துக்கு பலம்.

மண்புழு உரத் தொழில் நடக்கும் தென்னந்தோப்பு, அதற்குள் படர்ந்த ஒரு வீடு, விவசாயிகளின் வறுமை, தேவையை ஒளி வழியே காட்டிய கடமை என ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன் தன் பங்களிப்பை கவனத்துடன் கையாண்டிருக்கிறார்.

படத்தில் விளைநிலத்தை மலடாக்கும் செயற்கை உரம், திறமையான மாணவர்களின் மருத்துவக் கனவைக் கலைக்கும் ‘நீட்’ தேர்வு பிரச்சினை, விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கும் வங்கிக் கடன் சுமைகள், பயன் தரும் இயற்கை விவசாயம் என அத்தனை பிரச்சினை களையும் கொஞ்சம் கொஞ்சம் தொட்டிருக்கிறார்கள்.

‘கண்ணே கலைமானே’ சீனு ராமசாமியின் நேர்த்தியான இயக்கத்துக்காக பார்க்கலாம்.

 

Read previous post:
0a1a
தேர்தல் குறித்து கமலுடன் பேச பிரகாஷ் காரத் மறுப்பு!

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை டெல்லி சென்றார். அங்கு அவர் கலந்துகொள்ள இருந்த செய்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி இன்று கடைசி நேரத்தில் திடீர் என ரத்தானது. எனினும்,

Close