பூமராங் – விமர்சனம்

வனநடை மேற்கொள்ளச் சென்ற சிவா என்ற இளைஞர் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டுவிடுகிறார். தீயினால் ஏற்பட்ட வடு அவரது முகத் தோற்றத்தை குலைத்துவிடுகிறது. இச்சமயத்தில் மூளைச் சாவு அடைந்த சக்தி என்ற இளைஞரின் முகத்தை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிவாவுக்கு பொருத்துகிறார்கள்.

குணமடைந்து வீடு திரும்பும் சிவா, ஒரு கால்பந்து வீரனாக உற்சாகத்துடன் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். ஆனால் முகம் மாறிய சிவாவை கொலை செய்ய ஒரு கூட்டம் துரத்துகிறது. முதலில் அதிர்ந்துபோகும் சிவா, தனக்கு முகம் கொடுத்தவரின் பின்னணியைத் தேடித் துணிவுடன் புறப்படுகிறார். யார் அந்த சக்தி? அவரது கதை என்ன என்பதைச் சிவாவால் கண்டுபிடிக்க முடிந்ததா? தனக்கு முகம் கொடுத்த சக்திக்காகச் சிவா என்ன செய்தார் என்பதுதான் ’பூமராங்’ கதை.

திரைக்கதைக்காக முக மாற்று அறுவை சிகிச்சை எனும் தொழில் நுட்பத்தைத் தேர்வு செய்த இயக்குநர் ஆர்.கண்ணனைப் பாராட்டலாம். நதிநீர் இணைப்பு, தண்ணீரின்றி பாழ்படும் விவசாயம் போன்ற சமூகக் கருத்துகளைப் படத்தில் சொல்ல இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பக்கபலமாகச் சம கால கார்ப்பரேட் மூளைகள் செய்யும் தில்லாலங்கடிகளையும் துணைக்கு சேர்த்திருக்கிறார். இன்றைய அரசியலை கிண்டலடிக்கும் நையாண்டி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

முகம் மாற்றிக்கொண்ட சிவாவை கொல்ல நடக்கும் முயற்சிகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை முதல் பாகத்தில் கூட்டி விடுகிறது. ஆனால், இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு படத்தை வேறொரு தளத்துக்கு அழைத்து சென்றுவிடுகிறது. ஒருபுறம் காய்ந்த பூமி, இன்னொரு புறம் வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீர், அதைக் கிராமத்துக்கு திருப்பும் இளைஞரின் போராட்டம், அதை முறியடிக்க கார்ப்பரேட் கிரிமினலின் சதி எனத் திரைக்கதை நகர்கிறது.

சிவா சக்தி என இரண்டு பரிமாணங்கள் கொண்ட வேடங்களை ஏற்று தன் உழைப்பை கொடுத்திருக்கிறார் அதர்வா.

சென்னையிலும் பின்னர் வறண்ட புதுக்கோட்டையிலும் அந்தந்த பகுதிகளின் வாழ்வையும் வறட்சி யையும் நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறது பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு. டைட்டில் இசையில் தொடங்கி, வறண்ட பூமி, போராட் டம் என எல்லாவற்றிலும் நம்மை இணைத்து விடுகிறது ரதனின் பின்னணி இசையும் பாடல்களும்.

போதிய காரணம் இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் கதாநாயகனை ஒரு சாமானிய இளைஞனாக அடக்கி வாசிக்க வைத்திருப்பது, அந்தக் கதாபாத்திரம் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியிருக்கிறது. இந்துஜா, ஆர்.ஜே..பாலாஜி இருவரும் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். முதல்பாதி படம் முழுவதும் நல்ல நகைச்சுவையைத் தந்திருக்கிறார் சதீஷ்.

ஆங்கிலம் தொடங்கி, தமிழின் ‘புதிய முகம்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் முகமாற்று சிகிச்சையால், ஒருவன் வேண்டாத சிக்கல்களுக்கு ஆளாகிற கதை என்ற வகையில் மறுபடி திரைக்குத் திரும்பி வந்திருக்கும் ‘பூமராங்’, காலத்துக்கேற்ற திரைக்கதையால் சமாளித்து நிற்கிறது!