சசிகலா வழக்கில் நாளை தீர்ப்பு: “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்!” – கமல்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நாளை (செவ்வாய் கிழமை) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது

தமிழக முதல்வர் ஆவதற்காக கடும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் அ.தி.மு.க. நியமன பொதுச்செயலாளர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தையே இந்த தீர்ப்பு தீர்மானிக்கப் போவதால், இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்று நாடே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்” என்று கூறியுள்ளார் கமல்.

முன்னதாக, சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பதாலேயே, சசிகலா அவசர அவசரமாக முதல்வர் பதவியில் அமர துடிக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த கமல், “அதிகாரம் இரண்டு வகையானது. ஒன்று தண்டனை பயத்தால் பெறுவது, மற்றொன்று, அன்பின் செய்கையால் பெறுவது. இது என் மானசீக ஹீரோ காந்தி சொன்னது” என ட்வீட் செய்திருந்தார்.

சசிகலா முதல்வர் ஆவது தனக்கு பிடிக்கவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என்றும் கமல் பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.