“என் திரையுலக வாழ்க்கையில் ‘என்னோடு விளையாடு’ திருப்புமுனையாக அமையும்!” – பரத்

டொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டூடியோஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து  ‘என்னோடு விளையாடு’ படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி, நரேன் கந்தசாமி, படத்தின் நாயகர்கள் பரத், கதிர், நாயகிகள் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி, இசையமைப்பாளர்கள் ஏ மோசஸ் – சுதர்ஷன் எம்.குமார், எடிட்டர் கோபி கிருஷ்ணா, சண்டை பயிற்சி இயக்குநர் ஓம்பிரகாஷ், பாடலாசிரியை கதிர்மொழி மற்றும் படத்தின் அறிமுக இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதில் நடிகர் கதிர் பேசும்போது, “இன்றைக்கு தான் இப்படத்தின் தயாரிப்பாளர்களை நான் நேரில் பார்க்கிறேன். இப்படத்தின் உருவாக்கத்தில் இயக்குநர் அருண் கிருஷ்ணசாமியின் உழைப்பு அபாரமானது. அரங்க வடிவமைப்பிலிருந்து, படப்பிடிப்பு மற்றும் படத்தின் வெளியீடு வரைக்கும் எங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

அவர் என்ன நினைக்கிறார் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும். அதே சமயத்தில் திரைக்கதையிலும், அதனை காட்சிப்படுத்துவதிலும் தனக்கு என்ன தேவை என்பதை துல்லியமாக தெரிந்து வைத்து பணியாற்றி வருகிறார். இப்படத்தின் கதையை நான் கேட்கும்போது இருந்த தரத்தை விட படமாகப் பார்க்கும்போது இன்னும் கூடுதலான தரத்துடன் வந்திருக்கிறது.

இது ஒரு ரொமாண்டிக் திரில்லர். குதிரை பந்தயக் களத்தின் பின்னணியில் தயாராகியிருக்கிறது. நான் நடித்த ‘கிருமி’ படத்திற்கு வழங்கிய அதே ஆதரவை இப்படத்திற்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார் கதிர்.

நடிகர் பரத் பேசும்போது, “ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நான் நடிக்க ஒப்புக்கொண்ட  படம் இது. கதையை இயக்குநர் என்னிடம் விவரித்தபோது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. ஏனெனில் என்னுடைய பதினான்கு ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் குதிரை பந்தயம், குதிரை பந்தய சூதாட்டம் என்ற பின்னணியை வைத்து ஒரு முழுத் திரைக்கதையை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரில்லர் படம் புதிதாக இருக்கும். இப்படம் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து, அதை வெளியிடும்போது, அதன் ஆயுள் என்பது மூன்று நாள் தான் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்வீட்டர், வாட்ஸ்அப் போன்ற சோசியல் மீடியா ஆதிக்கம் செலுத்திவரும் இந்த காலகட்டத்தில் ஒரு படத்தின் கன்டெண்ட் கிளாரிட்டியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதைப்போல் படத்தின் ரீலிஸும் சரியாக அமைய வேண்டும். இதற்கு பின்னர் அப்படம் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும். இதற்கு பின்னர் அந்த படம் இரண்டு வாரங்கள் வரை ஓடினால் தான் வர்த்தக ரீதியாக வெற்றியை அடையும். அத்தகையதொரு வெற்றியை இந்த படம் பெறும். ஏனெனில் ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரொமாண்டிக் திரில்லர் படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பதால் இப்படம் வெற்றி பெறும்.

என்னுடைய திரையுலக அனுபவத்தில் சொல்கிறேன், இயக்குநர் அருண் கிருஷ்ணசாமியின் நீட் மேக்கிங் காரணமாக அவர் ஒரு வெற்றிக்கரமான இயக்குனராக வலம் வருவார். ஏனெனில் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியைப் பார்த்தவுடன் என்னுடைய நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது. படத்தின் திரைக்கதையை முழுமையான தேர்ச்சிப் பெற்ற படைப்பாளி போன்று கையாண்டிருந்தார். படத்தின் பலமே திரைக்கதைதான். எடிட்டர் கோபி கிருஷ்ணா எனக்கு போன் செய்து, படம் ‘தனி ஒருவன்’ போல் கிரிஸ்ப்பாக இருக்கிறது என்ற பாசிட்டீவ்வான கருத்தை பகிர்ந்துகொண்டார்.

என்னுடைய திரையுலக பயணத்தில் நான் விஷால் (செல்லமே), பசுபதி (வெயில்),சிம்பு (வானம்), ஆர்யா (பட்டியல்) ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்த படத்தில் கதிர் (கிருமி)உடன் நடித்திருக்கிறேன். இது போன்ற இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட்டில் நடிக்கும்போது, படத்தின் திரைக்கதையை சுமப்பதற்கு மற்றொரு தோளும் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சி எப்போதும் எனக்கு இருக்கிறது. இதிலும் இருந்தது. அதேபோல் படத்தில் நல்ல தமிழ் பேசும் நடிகைகள் (சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி)உடன் பணியாற்றியதும் மறக்க இயலாதது.

இப்படத்தில் ஒரு மெசேஜும் இருக்கிறது. குதிரைப் பந்தய சூதாட்டத்தில் யாரும் ஈடுபடக்கூடாது. இது தவறு தான். அதையும் மீறி ஆடுபவர்களுக்கு சொந்தம், பந்தம், நண்பர்கள், உறவு என்று யாருமே இருக்கக் கூடாது. மீறி இருந்தால் அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை இப்படம் சொல்கிறது.’ என்றார் பரத்.

படத்தின் இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி பேசும்போது,‘ முதலில் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படத்திற்கு ‘என்னோடு விளையாடு’ என்று பெயர் வைத்ததால் தானோ என்னவோ, என்னுடன் ஏராளமானவர்கள் விளையாடியிருக்கிறார்கள். அவர்களின் மறைமுக ஊக்கத்தால் இப்படம் வருகின்ற 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. இதற்காக என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’. என்றார்.

 

Read previous post:
e6
Ennodu Vilayadu Press Meet Photo Gallery

Ennodu Vilayadu is a Tamil Movie Starring Bharath, Kathir, Chandini, Sanchitha Shetty, Radha Ravi, Yog Japee among others.This Romantic Thriller

Close