பா.ரஞ்சித் தயாரிக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக் கொண்டார். மூன்றாவது படமாக ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மூலம் உலகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் ரஜினியின் அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளார்.

இவர் இப்பொழுது திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘நீலம்’ புரொடக்சன்  என்று பெயரிட்டுள்ள இந்நிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ (PARIYERUM PERUMAL) என்ற படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் ‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. காதல், ஆக்ஷன் என எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதில் நாயகனாக, நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நடிக்கிறார். ‘கிருமி’ படம் மூலம் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்த இவர், ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்காக சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். இந்த (ஜனவரி) மாத இறுதியில் இதன் படபிடிப்பு ஆரம்பமாகிறது.

இசை – சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு – ஸ்ரீதர்

கலை – ராமு