லாந்தர் – விமர்சனம்

நடிப்பு: விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதிராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சாஜி சலீம்

ஒளிப்பதிவு: ஞான சௌந்தர்

படத்தொகுப்பு: பரத் விக்ரமன்

இசை: எம்.எஸ்.பிரவின்

தயாரிப்பு: ‘எம் சினிமா புரொடக்‌ஷன்’ ஸ்ரீவிஷ்ணு

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

இப்படக்கதையின் பெரும்பகுதி கோவையிலும், ஒரு சிறுபகுதி பட்டுக்கோட்டையிலும் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. “ஒரே இரவில் நடக்கும் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் கதை” என்ற அறிவிப்புடன் வெளிவந்திருக்கும் இந்த படம் பார்வையாளர்களுக்கு நிறைவைத் தருகிறதா? பார்ப்போம்…

கோவையில் உள்ள சாய்பாபா காலனி காவல் நிலையத்தில், காவல்துறை உதவி ஆணையராக இருக்கிறார் நாயகன் அரவிந்த் (விதார்த்). நேர்மைத் திறனும், மனிதநேயமும் ஒருங்கே கொண்டவர். அவரது மனைவி ஜானு என்ற ஜானகி (ஸ்வேதா டோரத்தி) பயங்கர இருட்டைப் பார்த்தால், பயங்கர சத்தத்தைக் கேட்டால், சட்டென பயந்து மூர்ச்சையாகி விழுந்துவிடும் சுபாவம் கொண்டவர். அவரது இந்த பயந்த சுபாவம் நீங்கி, தைரியமானவராக இருக்கப் பழக வேண்டும் என்பதற்காக, கோவை நகருக்கு வெளியே, புறநகரில், ஒதுக்குப்புறமான தனி இடத்தில் உள்ள வீடு ஒன்றில் அரவிந்த் தன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

அதே கோவையில், ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர் நகுல் (விபின்), தனது இளம் மனைவி மஞ்சுவை (சஹானா) வீட்டில் தனியாக விட்டுவிட்டு, வேலைக்குச் செல்கிறார். மஞ்சு தன் வீட்டில் இருக்கும் மருத்துவ அறிக்கை ஒன்றை தற்செயலாகப் பார்க்கிறார். படித்துப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதை எடுத்துக்கொண்டு, அவசரமாக ஆட்டோவில் ஏறி விரைகிறார். அந்நேரம் வீடு திரும்பும் கணவர் நகுல், மஞ்சு ஆட்டோவில் செல்வதைப் பார்த்து குழப்பமடைகிறார். மஞ்சு செல்லும் ஆட்டோவை பைக்கில் பின்தொடர்கிறார். ஒரு மருத்துவமனைக்குள் நுழையும் மஞ்சு, அங்குள்ள மருத்துவர் மாத்யூஸிடம் (கஜராஜ்) மருத்துவ அறிக்கையைக் காட்டி விசாரிக்கிறார். மருத்துவர் சொல்லும் விளக்கத்தைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைகிறார். அவசர அவசரமாக வீடு திரும்புகிறார். அவருக்குத் தெரியாமல் அவரைப் பின்தொடரும் கணவர் நகுலும் மிகுந்த பதட்டத்துடன் வீட்டுக்குள் செல்கிறார்…

இதற்கிடையே, கோவை நகர சாலைகளில், இரவு வேளையில், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அடையாளம் தெரியாதவாறு மழைக்கோட்டு அணிந்து தன்னை மறைத்துக்கொண்ட ஒரு மர்ம நபர், ஒரு கையில் கனமான இரும்புத்தடி சகிதம் ஒரு காலை இழுத்து இழுத்து நடந்து செல்கிறார். அவர் தன் பார்வையில் படும் மனிதர்களையெல்லாம் இரும்புத் தடியால் கொடூரமாகத் தாக்குகிறார். இத்தாக்குதலில் சிலர் உயிரிழக்கிறார்கள்; சிலர் படுகாயம் அடைகிறார்கள். இது குறித்து காவல்துறைக்கு புகார் வருகிறது. அவரை பிடிக்கச் செல்லும் காவலர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயம் அடைகிறார்கள்.

தகவல் அறியும் உதவி ஆணையர் அரவிந்த், அந்த சைக்கோ கொலையாளியைப் பிடிக்க தானே களத்தில் இறங்குகிறார். அவருக்கு பட்டுக்கோட்டையில் இருந்து ஒரு துப்புக் கிடைக்கிறது. அந்த லீடை வைத்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் அவரது மனைவி ஜானு சைக்கோ கொலையாளியிடம் மாட்டிக்கொள்கிறார்.

உதவி ஆணையர் அரவிந்த் அந்த சைக்கோ கொலையாளியைப் பிடித்தாரா? தன் மனைவியைக் காப்பாற்றினாரா? யார் அந்த சைக்கோ கொலையாளி? அவர் ஏன் சைக்கோ கொலையாளி ஆனார்? அவருடைய பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘லாந்தர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, காவல் துறை உதவி ஆணையர் அரவிந்தாக விதார்த் நடித்திருக்கிறார். கம்பீரம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு சதா சர்வகாலமும் செயற்கையாக நெஞ்சை திமிர்த்தித் திரியும் மசாலா சினிமா போலீஸ் அதிகாரி போல் இல்லாமல், ரொம்பவும் இயல்பான தோற்றம் காட்டியிருக்கிறார். அரசியல்வாதிக்குப் பணியாமல், கள்ளச்சாராய வியாபாரியை கைது செய்வது, தன் வீட்டு பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது, சைக்கோ கொலையாளியைப் பிடிக்க முனைப்புடன் செயல்படுவது என நேர்மையும், மனிதநேயமும், கடமை உணர்ச்சியும் மிக்க அதிகாரியாக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அன்பான கணவராகவும் மனதில் நிற்கிறார்.

நாயகியாக, நாயகன் அரவிந்தின் மனைவி ஜானு என்ற ஜானகியாக ஸ்வேதா டோரத்தி நடித்திருக்கிறார். கணவர் மீது மிகுந்த காதல் கொண்டவராகவும், அதே நேரத்தில் இருட்டுக்கும், சத்தத்துக்கும் பயந்தவராகவும் குறையின்றி நிறைவாக நடித்திருக்கிறார். சைக்கோ கொலையாளியிடம் மாட்டிக்கொண்டு, பார்வையாளர்களை பதட்டத்தில் ஆழ்த்தி விடுகிறார்.

இளம் தம்பதி நகுல் – மஞ்சுவாக விபின் – சஹானா வருகிறார்கள். விபின் காதல் கணவனாக ரொமான்ஸில் ஸ்கோர் செய்திருக்கிறார். மஞ்சுவாக வரும் சஹானா  காதல், மன அழுத்தம், கோபம் என பல உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி, கதையை முக்கியத் தூணாகத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

மருத்துவர் மாத்யூஸாக வரும் கஜராஜ், சிதம்பரமாக வரும் புஷ்பராஜ், அவரது மனைவி நீலவேணியாக வரும் மீனா புஷ்பராஜ், முத்துவாக வரும் மதன் அர்ஜுன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து அதற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒரே இரவில் நடக்கும் கதையை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சாஜி சலீம். ‘சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்’ ஜானரில் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து, அவர்களை வேலை வாங்கி, படத்தை தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். எனினும், கிளைமாக்ஸ் சீக்வன்ஸ் காட்சிகளை வளர்த்தெடுப்பதில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.

முழுக்கதையும் இரவில் நடந்தாலும், பார்வையாளர்களுக்கு அது தொடர்பான சோர்வு ஏற்படாதவாறு காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஞானசௌந்தர்.

எம்.எஸ்.பிரவினின் இசையும், பரத் விக்ரமனின் படத்தொகுப்பும் படத்துக்கு படம்.

‘லாந்தர்’ – சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் பிரியர்களுக்கு செம விருந்து!