சூரரைப் போற்றுகிறேன், ஏனெனில்…

மாறுபட்ட ஆசைகள் பலருக்கும் இருக்கும். சிலரது ஆசைகள் மிகவும் அசாதாரண்மானதாக இருக்கும், அசாத்தியமானதாகவும் தெரியும். தூங்கி எழுவதும், சாப்பிடுவதும், வேலை செய்வதும், மறுபடி உறங்குவதுமாக என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று கருதப்படும் பெரும்பகுதி மக்களின் மனங்களில் என்னென்ன மாறுபட்ட அல்லது அசாதாரணமான ஆசைகள் இருந்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டனவோ?

நெடுமாறன் ராஜாங்கம் பெரிதினும் பெரிதுகேள் வகையைச் சேர்ந்தவன். அவனுடைய ஆசை வானளாவியது – எளிய மக்களும் விமானப் பயணம் மேற்கொள்ள முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்துவது அவனுடைய லட்சியம். சாதாரணமான ஆசைகள் நிறைவேறுவதற்கே ஏகப்பட்ட தடைகளைப் போடும் அரசியல்/சமூகக் கட்டமைப்பில் இப்படியொரு ஆசை ‘டேக் ஆஃப்’ ஆவது எளிதா என்ன?

…எதிரிகள் வருகிறார்கள். காதலி “என்னை விட உனக்கு உன் லட்சியம்தான் பெரிதாகிவிட்டதா” என்று கூறி ஒதுங்குகிறாள். உடனிருப்போர் துரோகம் செய்கிறார்கள். கூலிப்படையினர் தாக்குகிறார்கள். கடைசியில் காதலியையும் அம்மாவையும் தங்கையின் குழந்தையையும் கடத்திச் சென்று ஒரு கிடங்கில் கட்டி வைத்திருக்கும் அடியாட்களையும் அவர்களின் தலைவனையும் உடம்பெல்லாம் ரணமாக இருக்கும் நாயகன் நொறுக்கித்தள்ள ரத்தச் சிதறல்களுக்கிடையே கனவு நனவாகிறது…

இப்படியான சங்கதிகளிலிருந்து மாறுபட்ட, அசாதாரணமான, அசாத்தியமுமான கதையைத் தேர்வு செய்ததற்காகவே இயக்குநர் சுதா கொங்கரா, நாயக நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா உள்ளிட்ட இந்தப் படக்குழு சூரர்கள் போற்றுதலுக்குரியவர்கள். சூரர் லட்சியத்தை வதம் செய்ய இதிலும் கார்ப்பரேட் அவதாரங்கள் வருகிறார்கள் என்றாலும், அதிகாரத் தொடர்புகளோடு கூடிய அவர்களது சூழ்ச்சிகளும் மாறுபட்டவைதான். சூழ்ச்சிகளை முறியடிக்க விரும்புகிற மாறுபட்டவர்களும் அதே அதிகார வட்டாரத்திலேயே இருக்கிறார்கள்.

முறையான ஓடிடி ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு அப்பால் படம் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. விமர்சனங்களில் முழுக்கதையையும் அப்படியே சொல்கிற ஆர்வக்குலைப்புக் கைங்கரியங்கள் நடந்திருக்கின்றன. ஆகவே கடைசிக் காட்சி வருவதற்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்ற கதையை இங்கே மறுபடி சொல்ல வேண்டியதில்லை.

முக்கியமான ஒன்றைச் சொல்லிவிடலாம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை என்று தொடக்கத்தில் சொன்னாலும், இறுதியில் யாருடைய புத்தகத்தைத் தழுவி எழுதப்பட்ட திரைக்கதை என்று அறிவித்திருக்கிறார்கள். இப்படியொரு ஆசையை உண்மையாகவே நிறைவேற்றிக் காட்டிய, ஓரளவுக்கான நடுத்தர வருவாய் மக்களேனும் மேலேறிக்கொண்ட வகுப்பினரைப் போல அவசரத் தேவைகளுக்காகவாவது விமானத்தில் சென்றுவர முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியவருமான ஜி.ஆர். கோபிநாத் எழுதிய ‘சிம்பிள் ஃபிளை’ புத்தகத்திலிருந்து மூலக்கதை எடுக்கப்பட்டிருக்கிறது. புத்தக அத்தியாயங்களை அப்படியப்படியே காட்சிப்படுத்தாமல், புதிய புனைவுகளுடன் ஆக்கப்பட்டிருப்பதால் திரைக்கதை மேலும் புத்துணர்ச்சியோடு பறக்கிறது.

வசனம், நடிப்பு, இசை, பாட்டு, ஒளிப்பதிவு, தொகுப்பு, கதையின் காலகட்டத்தை அடையாளப்படுத்தும் பொருள்கள் சேகரிப்பு, இடங்கள் தேர்வு என சக கலைஞர்களின், தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்பும் உழைப்பும் இந்த விமானத்தின் இறக்கைகள், சக்கரங்கள், எரிபொருள்.

“மாறா… ஏரோப்புலேன்ல பறக்கணும்னு எம்பூட்டு ஆசைப்பட்டேன் தெரியுமா…’” என்று கடைசியில் விமானத்திலிருந்து இறங்கிவந்த அந்த மூதாட்டி நெகிழ்ச்சியோடு சொல்வதில், எளியோர் ஏறாப்பிளேனாக இருந்தது அவர்களுக்குமான ஏரோப்பினேனாக ஆக்கப்பட்டதற்கான நன்றியறிதல் இருக்கிறது. இப்படியான வேறு பல முற்போக்கான சமூக லட்சியங்களோடு பயணிக்கிறவர்களுக்கான ஊக்குவிப்புத் தூண்டுதலும் இருக்கிறது.

“நான் காஸ்ட் பேரியர்களை (கட்டணத் தடைகள்) மட்டுமல்ல, கேஸ்ட் பேரியர்களையும் (சாதித் தடைகள்) அகற்றப் போராடுகிறேன்”, “(செல்வந்தர்களுக்குச் சமமாக) எளியவர்கள் விமானத்தில் ஏறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு விலை வைத்திருக்கிறீர்களா சார்?…”, “(வசதிகளை) வாங்கியவர்கள்தான் நீ ஏன் அதற்கெல்லாம் ஆசைப்படுகிறாய் என்று கேட்கிறார்கள்” -விஜயகுமாரின் வசனங்கள் உறியடிகள்தான்.

“நாம கல்யாணம் பண்ணிக்கிடணும்னா மூணு கண்டிசன் இருக்கு” என்று பொம்மி நிபந்தனை விதிப்பது உள்பட, வார்த்தைகளால் சொல்லாமலே பெண்ணுரிமையும் பாலின சமத்துவமும் முன்னிறுத்தப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு. காதலோடும் கறுப்புச் சட்டையோடும் சூரியா, அபர்ணா இருவரும் போடுகிற அந்த பறையடியாட்டத்தில் கூட பெண்ணை வெறும் கவர்ச்சிப் பொருளாக்காத ஒரு நுட்பம் இருக்கிறது.

நடிகர்கள் ஊர்வசி, பரேஷ் ராவல், கருணாஸ், பூ ராமு, காளி வெங்கட், விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார், மோகன் பாபு, பேராசிரியர் ஞானசம்பந்தன், ஆர்.எஸ்.சிவாஜி, ராமச்சந்திரன் துரைராஜ், அச்யுத் குமார், ஒளிப்பதிவாளர் நிகேத், கவிஞர் ஏகாதசி, இசைஞர் ஜி.வி.பிரகாஷ்… யாரைச் சொல்வது, யாரை விடுவது? இத்தனை பேரின் கூட்டுக்கும் நியாயப் பங்களிக்கப்பட்டிருப்பது விமானத்தின் எல்லாப் பாகங்களும் போல முக்கியமானது.

கவர்ச்சிக் கழிதல்கள், வன்முறை அழிதல்கள் இல்லாமலே கதையோட்டத்திலும் காட்சிப்பதிவுகளிலும் உரையாடல் செறிவிலும் நல்ல நடிப்பிலுமே ஒரு படத்தை, குடும்பத்தினர் எல்லோரையும் ஈர்த்து சேர்ந்து உட்கார வைக்கிற வகையில் விறுவிறுப்பாகக் கொண்டு செல்ல முடியும் என்று வழி காட்டியிருக்கிறார்கள். அதற்காக மற்றுமொரு முறை இந்தச் சூரர்களைப் போற்றலாம்.

KUMARESAN ASAK