“மரணத்தின் சபையில் நீதி இல்லை”: கவிஞர் வைரமுத்து வேதனை
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:-
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதில்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர்.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழை மட்டுமா அழகு; வெயில்கூடத் தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம்கூடத் தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்து விட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன்.
‘உன் சொந்த ஊர் எது தம்பி’ என்று ஒருமுறை கேட்டேன். “காஞ்சி அண்ணா” என்று சொன்னார். “அண்ணாவே காஞ்சிதான்” என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையில் கவிதை பாட வந்தார். “சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு” என்று அவரை அறிமுகம் செய்தேன்.
இன்று மரணம் அவர் மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும். நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.