திருவாரூரில் கருணாநிதி, கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 234 தொகுதிகளுக்கும் 5,648 விருப்ப மனுக்கள் வந்துள்ளன. இதன்மூலம் ரூ.12 கோடியே 97 லட்சத்து 77 ஆயிரம் வசூலானது.

விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர்காணலை நடத்தினர்.

இன்றுடன் நேர்காணல் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் திமுக சார்பில் விண்ணப்பித்திருந்த 4,362 பேரும், புதுவை – காரைக்காலில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விண்ணப்பித்த 71 பேரும் ஆக மொத்தம் 4,433 பேர் நேர்காணலில் கலந்து கொண்டார்கள்.

இறுதி நாளான இன்று மு.க.ஸ்டாலினுக்கும் நேர்காணல் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் கருணாநிதி புன்னகையுடன் கேட்கும் கேள்விகளுக்கு ஸ்டாலினும் சிரித்தபடி பதிலளிக்கிறார்.

இதனிடையே, திருவாரூர் தொகுதியில் கருணாநிதிக்கும், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே திமுகவினர் விருப்ப மனு அளித்துள்ளனர். இங்கு வேறு யாரும் போட்டியிட மனு அளிக்கவில்லை. அதேபோல காட்பாடி தொகுதிக்கு முதன்மைச் செயலாளர் துரை முருகன், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு துணைப் பொதுச்செயலார் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் அர.சக்கரபாணி, தளி தொகுதிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஒய்.பிரகாஷ் என தொகுதிக்கு ஒருவர் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளனர். திருச்சி மேற்கு தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சையது இப்ராகிம் ஆகிய இருவர் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளனர்.

விருப்பமனு அடிப்படையில் மட்டுமே தி.முக. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் படசத்தில், கீழ்க்கண்ட 7 தொகுதிகளுக்கான தி.மு.க வேட்பாளர்கள் வருமாறு:-

திருவாரூர் – மு.கருணாநிதி

கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்

காட்பாடி – துரைமுருகன்

ஆத்தூர் – ஐ.பெரியசாமி

ஒட்டன்சத்திரம் – அர.சக்கரபாணி

தளி – ஒய்.பிரகாஷ்

திருச்சி மேற்கு – கே.என்.நேரு (அல்லது) சையது இப்ராகிம்

Read previous post:
0a51
எச்சரிக்கை: மலையாள நடிகர்களின் உயிரை குடிக்கிறது மது!

பிரபல நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் இயற்கையானதல்ல என்றும், அந்த துயர மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் அளித்ததின் பேரில், போலீஸார்

Close