எச்சரிக்கை: மலையாள நடிகர்களின் உயிரை குடிக்கிறது மது!

பிரபல நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் இயற்கையானதல்ல என்றும், அந்த துயர மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் அளித்ததின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணியின் மரணத்துக்கான காரணம் எதுவாக இருப்பினும், அவரது குடிப்பழக்கமும் இந்த மரணத்துக்கு ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது.

அவர் நிறைய குடிப்பார் என்பதை நானே நன்கறிவேன். சுமார் 13 ஆண்டுகளுக்குமுன் மணி நடித்த ஒரு தமிழ்ப்படத்துக்கு நான் எழுதிய சில காட்சிகளும், அவற்றில் இடம் பெற்ற வசனங்களும் அவரது மனதை மிகவும் நெகிழச் செய்துவிட்டன. படப்பிடிப்பில் கிளிசரின் போடாமலே இயற்கையாக கண்கலங்கி உருக்கமாக வசனம் பேசி நடித்த அவர், ஷாட் முடிந்தவுடன், “கொஞ்சம் வா சார்…” என்று என்னிடம் சொல்லிவிட்டு தன் வாகனத்துக்குள் போய் அமர்ந்தார். ஏதாவது குறை சொல்லுவாரோ? அல்லது எதையாவது மாற்றச் சொல்லுவாரோ? என்ற அச்சத்துடன் நானும் அவரது வாகனத்துக்குள் போய் அமர்ந்தேன். அப்போது மணி என் கையை பற்றிக்கொண்டு, நான் எழுதிய காட்சிகளையும், வசனங்களையும் நெக்குருகி உணர்ச்சிகரமாக பாராட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.

இங்கு விஷயம் அதுவல்ல. என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பாட்டிலை எடுத்தார் மணி. அதில் சுத்தமான தண்ணீர் போல் ஒரு திரவம் இருந்தது. அதை ஒரு கிளாஸில் ஊற்றி என்னிடம் நீட்டினார். “என்ன இது?” என்று நான் கேட்க, “ஒயின் சார்” என்றார். “எனக்கு பழக்கமில்ல சார்” என்று நான் சொல்ல, “பரவாயில்ல, குடி சார். இது கடையில் வாங்கின சரக்கு இல்லே. வீட்டில் நானே தயார் பண்ணிய ஒயின்” என்றார். அவர் எவ்வளவோ சொல்லியும் நான் பிடிவாதமாக மறுக்கவே, அவர் மட்டும் குடித்தார். அவர் குடித்த அளவைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ‘ரொம்ப குடிக்கிறீங்க சார். உடம்புக்கு ஏதாவது ஆயிடப் போகுது” என்றேன் நான். அவர் சிரித்தார்: “இது முரட்டு உடம்பு சார். ஆட்டோ ஓட்டியிருக்கேன். விறகு உடைஞ்சிருக்கேன். இந்த உடம்பை இது ஒண்ணும் செய்யாது சார்” என்றார். ஆனால், அந்த வைரம் பாய்ந்த உடம்பையே சோளத்தட்டையை உடைப்பது போல் இன்று உடைத்துப் போட்டுவிட்டது குடி.

மணியை மட்டும் அல்ல, கடந்த சில வருடங்களில் பல மகத்தான திரைக்கலைஞர்களை மலையாள திரையுலகம் இழந்திருக்கிறது. அந்த மரணங்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் குடிப்பழக்கத்துடன் தொடர்பு கொண்டவையாகவே இருந்திருக்கின்றன. கொச்சின் ஹனீபா, ராஜன் பி.தேவ், முரளி போன்ற பல கலைஞர்களின் அகால மரணத்துக்குப் பின்னால், அவர்களின் குடிப்பழக்கம் முக்கிய காரணமாக இருந்துள்ளது.

மலையாளத்தின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் ஜான்சனின் மரணத்துக்கும் அவரது அபரிமிதமான குடியே காரணமாக இருந்தது. தேசிய விருது பெற்ற ‘அக்ரஹாரத்தில் கழுதை’ என்ற தமிழ் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜான் ஆபிரகாமின் கோர முடிவும் குடியால் விளைந்ததே.

இன்று மலையாளத்தில் சிறந்த நகைச்சுவை நடிகராக திகழும், தேசிய விருது பெற்ற சலீம் குமாரின் தற்போதைய சுகவீனத்துக்கும் குடியே காரணம் என்று கூறப்படுகிறது.

மணியின் குடி சமீபகாலமாக மேலும் அதிகரித்திருந்தது. அளவுக்கு மீறிய குடியில் அவரது கட்டுமஸ்தான உடல் உருக்குலைய ஆரம்பித்தது. ‘பாபநாசம்’ படத்தில் பலவீனமான அவரது உடலை பார்த்திருக்கலாம். சோர்வு, கவலை என்று பலவித சங்கடங்களை குடி அவரிடம் சேர்த்திருந்தது.

மலையாளிகளின் குடிப்பழக்கம் பிரசித்தமானது. மது விற்பனை செய்யும் கேரள அரசின் பிவரேஜ் கடைகள், தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகமிக குறைவு. பத்துக்கு ஒன்று என்ற விகிதம்கூட இல்லை. பார்களின் எண்ணிக்கையும் அப்படியே. இருந்தும் தமிழர்களைவிட குடியில் முன் நிற்கிறார்கள் மலையாளிகள்.

“கேரள சாகித்யகாரர்கள் (இலக்கியவாதிகள்) பாருக்கு சென்றால், பைண்ட் (ஆஃப் பாட்டில்) ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், தமிழ் இலக்கியவாதிகள் குவார்டருக்கே தள்ளாடுகிறார்கள்” என்ற ரீதியில், மலையாள இலக்கியவாதிகளின் குடியை சிலாகித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒருமுறை எழுதினார். மலையாள இலக்கியவாதிகளின் குடிக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை மலையாள திரையுலகினரின் குடி.

மலையாள சினிமாக்கள் குடியை கொண்டாடுகின்றன. குடியை மட்டுமே கதையாகக் கொண்டு ‘சேட்டாயிஸ்’, ‘ஹனி பீ’ போன்ற பல திரைப்படங்கள் வந்துள்ளன. கேரளாவில் குடி ஒரு சாதாரண நிகழ்வு, வீட்டில் குடிப்பதும், கொண்டாடுவதும் அங்கு இயல்பானது என்ற மனப்பதிவை தருபவையாகவே உள்ளன மலையாள திரைப்படங்கள். ஒரு படத்தில் மோகன்லாலும், அவரது மகளும் ஒன்றாக சேர்ந்து குடிப்பதுபோல் வரும் காட்சியை பெரிதாக சிலாகித்த சில தமிழ் சினிமாக்காரர்களையும், பத்திரிகையாளர்களையும் நான் அறிவேன்.

உம்மன் சாண்டி தலைமையிலான கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் இன்று கேரளாவில் பார்கள் அடைக்கப்பட்டுள்ளன. பிவரேஜ் கடைகளும், மிலிட்டரி மதுபானங்களும், கள்ளுக்கடைகளும் மட்டுமே நடப்பில் உள்ளன. குடி குறைந்திருக்கிறது. ஆனால், இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்பதை மணியின் மரணம் அறிவுறுத்தியிருக்கிறது.

தமிழ்த்திரையுலகமும், தமிழகமும், மணியின் மரணத்தை ஒரு அபாய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, குடியை திரையிலும், திரைக்கு வெளியிலும் வெகுவாக குறைக்க வேண்டியதன் அவசர அவசியத்தை உணர்ந்து, உடனடி நடவடிக்கைகளில் இறங்குவது நல்லது.

– அமரகீதன்