குரங்கு பொம்மை – விமர்சனம்

 ‘குரங்கு பொம்மை’…

“சூப்பர் ஸ்டார்”கள் நடிக்கவில்லை. கிராஃபிக்ஸ் என்ற பெயரில் கண்கட்டி வித்தை காட்டும் “பிரமாண்ட இயக்குனர்”கள் இயக்கவில்லை. விமானத்தில் “விளம்பர வடை சுடும் தயாரிப்பாளர்”கள் தயாரிக்கவில்லை. சமூகத்துக்கு பெரிதாய் எந்த சீர்திருத்தக் கருத்தும் சொல்லவில்லை. இத்தனை “இல்லை”கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டின் மிகச் சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது ‘குரங்கு பொம்மை’.

எளிமையான ஸ்டோரி லைன்; கதாபாத்திரங்களின் தனித்துவமான வடிவமைப்பு, ‘நான் லீனியர்’ முறையில் முன்-பின்னாக காட்சிகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளபோதிலும், நீண்ட ஃபிளாஷ்பேக்குகள் இல்லாத, எரிச்சலூட்டாத, சுவாரஸ்யமான திரைக்கதை; எந்த மாய்மாலமும் இல்லாமல் பார்வையாளர்களை சதா பதட்டத்திலேயே வைத்திருக்கும் அறிமுக இயக்குனர் நித்திலன் என்ற கதை சொல்லியின் கதை சொல்லும் ஆற்றல்… இவை தான் ‘குரங்கு பொம்மை’யை வியப்புடன் அண்ணாந்து பார்க்க வைத்திருக்கின்றன…

‘கூடா நட்பு கேடாய் விளையும்’. சாதாரண மனிதர்களின் உரையாடல்களில் மட்டும் அல்ல, அரசியல் அரங்கிலும் அவ்வப்போது ஒலிக்கும் இந்த முதுமொழி தான் ப்டக்கதையின் கரு.

தஞ்சாவூரில் மரக்கடை வைத்திருக்கும் பி.எல்.தேனப்பன், கோயில் சிலைகளைத் திருடி, சென்னைக்குக் கடத்தி, அங்குள்ள தனது ஏஜெண்ட் குமரவேல் மூலம் மார்வாடியிடம் விற்று, கோடி கோடியாய் பணம் சம்பாதிப்பவர். இதற்காக போலீசையும் கொல்லத் தயங்காதவர்.

தேனப்பனுடைய மரக்கடையில், அவரது நீண்டகால நண்பரான முதியவர் பாரதிராஜா கூலி வேலை பார்க்கிறார். அவருடைய விசுவாசத்தையும், சார்ந்திருத்தலையும், அப்பாவித்தனத்தையும் சிலை கடத்தலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார் தேனப்பன். ரூ.5கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை ஒன்றை, குரங்குப்படம் (குரங்கு பொம்மை) பொறிக்கப்பட்ட ஒரு ‘பயணப் பை’க்குள் வைத்து, பூட்டுப்போட்டு பூட்டி, அதை பாரதிராஜாவிடம் கொடுத்து, அவரை சென்னைக்கு அனுப்புகிறார்.

பைக்குள் என்ன இருக்கிறது என்றே தெரியாத பாரதிராஜா, அதை சென்னைக்குக் கொண்டுவந்து, ஏஜெண்ட் குமரவேலிடம் ஒப்படைக்கிறார். விலையுயர்ந்த சிலையை பார்த்ததும் குமரவேலின் கிரிமினல் மூளை அதிபயங்கர முடிவை எடுக்கிறது. பாரதிராஜாவை அவர் படுகொலை செய்துவிட்டு, “நீங்க அனுப்புன ஆள் இங்கு வரவே இல்லை. சிலையுடன் அவர் தலைமறைவாகி விட்டார்” என்று தேனப்பனுக்கு தகவல் கொடுக்கிறார் குமரவேல்.

பாரதிராஜாவின் மகன் விதார்த் சென்னையில் கால் டாக்ஸி டிரைவராக இருக்கிறார். சென்னைக்கு வந்த தன் அப்பா காணாமல் போய்விட்டார் என்ற விஷ்யம் விதார்த்துக்கு தெரிய வருகிறது. அப்பாவை தேடி அலையும் விதார்த், அப்பா மாயமானதற்கு ஏஜெண்ட் குமரவேல் தான் காரணம் என்பதை கண்டுபிடிக்கிறார். அவர் குமாரவேலை எப்படி தண்டிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

“இத்தனை நாளும் எங்கே அய்யா ஒளிச்சு வச்சிருந்தே இந்த நடிப்பாற்றலை…?” என்று பாரதிராஜாவை வியப்புடன் திட்டிக்கொண்டே, அவரது நடிப்பை ரசிப்பதற்காகவாவது இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். மனிதர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் தன்னை கொல்லப் போகிறான் என தெரிந்தும், தன் வாழ்க்கைக் கதையை – பிறக்கும்போதே சூம்பிப் பிறந்த குழந்தையான தன்னை உடன்பிறந்தவர்கள் உதறிவிட்டதை, ஒரு திருடனுடனான நட்பு காரணமாகவே தான் சமூகத்தில் மனிதனாக மதிக்கப்படுவதை – பாரதிராஜா தனது தழுதழுக்கும் குரலில் உருக்கமாக விவரிக்கும்போது நம்மை கண் கலங்கச் செய்து விடுகிறார். “என்னை கொல்லப் போறே. அதுக்கு முன்னாடி என் பையனைப் போய் பார்த்துட்டு வந்துடறேன்’ என்று அவர் கலங்குகிற இடத்தில் நெகிழ வைத்துவிடுகிறார்.

பாரதிராஜாவுக்கு இணையான நடிப்பை, மரக்கடை உரிமையாளராக வரும் தயாரிப்பாளர் தேனப்பனும் வெளிப்படுத்தியிருக்கிறார். சென்னை ஏஜெண்டாக வரும் குமாரவேல் கதாபாத்திரமும் பிரதான இடம் வகிக்கிறது. விதார்த், அறிமுக நாயகி டெல்னா டேவிஸ், அறிமுக காமெடியன் கல்கி போன்றவர்களும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாகத் திரையில் கொண்டு வந்திருக்கின்றனர். பாலா சிங், கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பும், அவர்களது கதாபாத்திரங்களும் மனதை நிறைக்கின்றன.

எதார்த்தமான கதாபாத்திரங்கள், இயல்பான நடிப்பு, நன்கு படமாக்கப்பட்ட பின்னணி இடங்கள் என்று ஆரம்பம் முதலே படம் சுவாரசியமாக நகர்கிறது. பொதுவாக இதுமாதிரி க்ரைம், த்ரில்லர் படங்களைக் கையாளும்போது படத்தின் விறுவிறுப்புக்காக கதை சிதைவதும், கதைக்காக வேகம் குறைவதும் நடக்கும். அப்படி தொய்வு ஏற்படாதவாறு நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். ‘புதிர்’ என்ற அவரது முதல் குறும்படத்தின் தாக்கத்தில் உருவாகியுள்ள குரங்கு பொம்மை படத்தில், மடோன் அஸ்வினின் வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.

பெரியவர் தவறவிட்ட பணப்பையை ஒப்படைப்பதற்காக விதார்த் செல்லும் காவல் நிலையம், கஞ்சா கருப்பு வீட்டில் மாட்டப்பட்டுள்ள உடைந்த கடிகாரம், குமரவேல் வீட்டில் மீன் தொட்டியில் அமர்ந்து அவரது மகன் விளையாடுவது உள்ளிட்ட பல இடங்களில் சூழலும், பின்னணியும் கவனமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தனது முதல் படத்தை மிகவும் நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்து இயக்கியிருப்பதன் மூலம், தனது அடுத்தடுத்த படங்கள் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அறிமுக இயக்குனர் நித்திலனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு, அபிநவ் சுந்தர் நாயக்கின் எடிட்டிங், அஜனீஷ் லோக்நாத் இசை ஆகியவை படத்துக்கு கூடுதல் பலம்.

‘குரங்கு பொம்மை’ – தரம் தேடும் ரசிகர்களுக்கு செம விருந்து!

Read previous post:
0a1e
ஒரு கனவு போல – விமர்சனம்

நாயகன் ராமகிருஷ்ணனும் - சவுந்தர ராஜாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தாய், தந்தையை இழந்த சவுந்தரராஜா படிப்பை முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலைக்காக காத்திருக்கிறார்.

Close