ஜோதி – விமர்சனம்

நடிப்பு: வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், இளங்கோ குமரவேல், மைம் கோபி, நான் சரவணன், சாய் பிரியங்கா, எஸ்.பி.ராஜா சேதுபதி, பூஜிதா தேவராஜ் மற்றும் பலர்

இயக்கம்: ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா

தயாரிப்பு: எஸ்.பி.ராஜா சேதுபதி

இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்

ஒளிப்பதிவு: செசி ஜெயா

படத்தொகுப்பு: சத்யமூர்த்தி

மக்கள் தொடர்பு: வின்சன்.சி.எம்

அடிக்கடி செய்திகளில் அடிபடும் ‘குழந்தைகள் கடத்தல்’ என்ற மிக முக்கியப் பிரச்சனையை கதைக்கருவாக எடுத்துக்கொண்டு, அதற்கு பொருந்திவரக்கூடிய பரபரப்பான உண்மைச் சம்பவங்களை தமிழ்நாட்டிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் மட்டுமல்ல, அமெரிக்காவிலிருந்தும் கூட தேர்ந்தெடுத்து, கதையாகத் தொகுத்து, கற்பனையைக் கலந்து திரைக்கதை அமைத்து, ‘ஜோதி’ என்ற தலைப்பில் விறுவிறுப்பான படமாக படைத்தளித்திருக்கிறார்கள்.

கதை என்னவென்றால், ஜோதி (எ) அருள்ஜோதி (ஷீலா ராஜ்குமார்) நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இன்னும் நான்கு நாட்களில் இயற்கையாக சுகப் பிரசவம் ஆகிவிடும் என்ற நிலையில், ஜோதியின் வீட்டுக்குள் நுழையும் ஒரு மர்மநபர், ஜோதியின் வயிற்றை கத்தியால் கிழித்து, குழந்தையை வெளியே எடுத்துக்கொண்டு, கிழிக்கப்பட்ட ஜோதியின் வயிற்றைத் தைத்து, அவரை அப்படியே ரத்த வெள்ளத்தில் போட்டுவிட்டுப் போய்விடுகிறார்.

அந்த மர்ம நபர் யார்? குழந்தையின் கதி என்ன? என்பதைக் கண்டுபிடிக்க நேர்மையும், சுறுசுறுப்பும் மிக்க போலீஸ் அதிகாரி சக்தி சிவபாலன் (வெற்றி) புலனாய்வை மேற்கொள்கிறார். அதிர்ச்சியூட்டும் அடுக்கடுக்கான பல திருப்பங்கள் ஏற்பட்டபோதிலும், சஸ்பென்ஸ் மட்டும் நீடித்துக்கொண்டே செல்கிறது.

இறுதியில் மர்ம நபரை போலீஸ் அதிகாரி சக்தி சிவபாலன் எப்படி கண்டுபிடிக்கிறார்? மர்ம நபர் ஜோதியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்து கடத்த என்ன காரணம்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது படத்தின் மீதிக்கதை.

போலீஸ் அதிகாரியாக வரும் சக்தி சிவபாலன், போலீசுக்குரிய மிடுக்குடனும், கம்பீரத்துடனும் வலம் வருகிறார். எந்நேரமும் வழக்கு பற்றிய சிந்தனையிலேயே இருப்பது போன்ற முகத் தோற்றம் பார்வையாளர்களை ஒருவித பரபரப்புக்குள் ஆழ்த்துகிறது.

ஜோதி (எ) அருள்ஜோதியாக, நிறைமாத கர்ப்பிணியாக வரும் ஷீலா ராஜ்குமார் சிறப்பான, பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். துக்கத்திலும் தாய்மை உணர்வை துல்லியமாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். குழந்தைகளைக் கடத்தும் கயவனுக்கு பாடம் கற்பிக்க அவர் எடுக்கும் ரிஸ்க்கான முடிவு புல்லரிக்க வைக்கிறது. தலை வணங்கச் செய்கிறது.

தயாரிப்பாளர் ராஜா சேதுபதி, மிக முக்கியமான ’ரங்கா’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றி, திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, கதை ஓட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகிறார். ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது பாத்திரங்களுக்கு ஏற்ற நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

‘குழந்தைகள் கடத்தல்’ என்ற இன்றைய பிரதான பிரச்சனைகளில் ஒன்றை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா, இப்பிரச்சனையின் வலியை பார்வையாளர்கள் உணரும் வகையில் படத்தை சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார். கிளைமாக்ஸ் வரை மர்ம நபர் பற்றிய சஸ்பென்ஸை பேணிக் காப்பதில் உறுதியாக இருந்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இயக்குனருக்கு பாராட்டுகள்.

ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசையும், செசி ஜெயாவின் ஒளிப்பதிவும் படத்துக்கு மிகப் பெரிய பலம்.

‘ஜோதி’ படக்குழு, கோலிவுட்டுக்கு நம்பிக்கையூட்டும் வரவு!

தாய்மையைக் கொண்டாடும் தமிழ் ரசிகர்கள், ’ஜோதி’ படத்தையும் நிச்சயம் கொண்டாடுவார்கள்!