புரியாத புதிர் – விமர்சனம்

இசையமைப்பாளராகும் லட்சியத்தோடு வலம்வரும் நாயகன் விஜய் சேதுபதியும், இசை ஆசிரியையாக பணிபுரியும் நாயகி காயத்ரியும், சில சந்திப்புகளில் காதலர்கள் ஆகின்றனர். பிறகு, விஜய் சேதுபதியின் செல்பேசிக்கு காதலி காயத்ரியின் அந்தரங்க புகைப்படம் ஒன்று வருகிறது. அதிர்ச்சியடையும் அவர், அந்த எண் யாருடையது எனக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இதற்குள், ஜவுளிக்கடையின் உடை மாற்றும் அறையில் காயத்ரி புதிய சல்வாரை போட்டுப் பார்க்கும் காட்சியும் வீடியோவாக அவரது செல்பேசிக்கு வருகிறது. இதை அறிந்து தற்கொலைக்கு முயலும் காயத்ரியைக் காப்பாற்றி தன்னுடன் தங்கவைத்துக் கொள்கிறார்.

அடுத்து விஜய் சேதுபதியின் நெருங்கிய 2 நண்பர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, மற்றொருவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறை செல்கிறார். காதலி மற்றும் நண்பர்களைக் குறிவைத்துத் தாக்கும் அந்த மர்ம நபரை விஜய் சேதுபதியால் கண்டறிய முடிந்ததா? அவர் யார்? எதற்காக இப்படிச் செய்கிறார்? என்பதற்கான பதில்தான் ‘புரியாத புதிர்’.

குற்ற உணர்ச்சியால் உந்தப்படும் முதன்மைக் கதாபாத்திரம் ஒன்றின் பழிவாங்கும் கதை. வழக்கமான பழிவாங்கல் கதை என்றாலும், அதற்கு திரைக்கதை அமைத்த விதத்தில் கவர்கிறார் அறிமுக இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி. ஆனால், பார்வையாளர்களை திசைதிருப்ப திலக் கதாபாத்திரத்தை நுழைத்திருப்பது, மர்ம ஆண்குரலைப் பயன்படுத்தியிருப்பது போன்றவை பலவீனமான பழைய உத்திகள்.

‘மெல்லிசை’ என பெயரிட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பு முடித்து, நீண்ட போராட்டத்துக்குப் பின்பு பெயர் மாறி வந்துள்ள திரைப்படம். அதனால், விஜய்சேதுபதி வழக்கமான துறுதுறுப்போடு, மிக இளமையாகவும் தெரிகிறார். இப்போதைய சூழலுக்கு கதை மிகச் சரியாகப் பொருந்துவதால், 3 ஆண்டு இடைவெளிகூட உறுத்தலாக இல்லை.

காதலியின் அந்தரங்க புகைப்படத்தை சைபர் கிரைம் போலீஸாரிடம் ஆதாரமாகக் கொடுக்க முடியாமல் தவிப்பதிலும், காதலியை எப்படியாவது இந்த இக்கட்டில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று துடிப்பதிலும் தனித்து மிளிர்கிறார் விஜய் சேதுபதி. ‘‘கிஸ் பண்ணா கோவிச்சுப்பியா?’’, ‘‘காதலை சொல்லாத! சொல்லாம இருக்கறதுதான் அழகு’’ என வசனம் பேசும்போது கைதட்டல் அள்ளுகிறார்.

சிறிது நேரமே வரும் மஹிமா நம்பியார் அழகு. நடிப்பதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நாயகி காயத்ரியும் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உழைப்பு தெரிகிறது; த்ரில்லர் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. நாயகன், நாயகி இசைத்துறை கதாபாத்திரங்கள் என்பதால், பாடல்கள் இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். கேமரா நகர்வுகளை ஒரு உத்தியாகக் கையாண்டு, த்ரில்லர் உணர்வை அதிகப்படுத்த முடியும் என்பதில் வெற்றி பெற்றுவிடுகிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

சிறந்த தகவல் தொடர்பு சாதனங்களான ஸ்மார்ட்போன்கள், சமூக வலைதளங்களை அடுத்தவர் அந்தரங்கத்தைப் பதியவும், பகிரவும் பயன்படுத்துபவர்களின் பொறுப்பற்ற அணுகுமுறையை, நேர்த்தியான திரைக்கதை மூலமாகச் சாடியதன் மூலம், தரமான த்ரில்லர் படமாக ஈர்க்கிறது ‘புரியாத புதிர்’.

Read previous post:
k5
குரங்கு பொம்மை – விமர்சனம்

 ‘குரங்கு பொம்மை’... “சூப்பர் ஸ்டார்”கள் நடிக்கவில்லை. கிராஃபிக்ஸ் என்ற பெயரில் கண்கட்டி வித்தை காட்டும் “பிரமாண்ட இயக்குனர்”கள் இயக்கவில்லை. விமானத்தில் “விளம்பர வடை சுடும் தயாரிப்பாளர்”கள் தயாரிக்கவில்லை.

Close