தனுஷ் – திரிஷா உங்கள் ஊருக்கு நேரில் வருகிறார்கள்!

திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏதாவதொரு மாவட்டத்தைச் சேர்ந்தவரா நீங்கள்? “ஆம்” எனில், வருகிற 25, 26 ஆகிய இரு தேதிகளில் ஒருநாள் நடிகர் தனுஷூம், நடிகை திரிஷாவும் உங்கள் மாவட்டத்துக்கு நேரில் வர இருக்கிறார்கள்.

கிராஸ் ரூட் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்க, எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் மதன் வழங்கும் திரைப்படம் ‘கொடி’. தனுஷ் முதன்முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷாவும், முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட்டும் நடித்திருக்கிறார்கள்.

நிகழ்கால அரசியலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ‘எதிர்நீச்சல், ‘காக்கி சட்டை’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

வருகிற தீபாவளியை முன்னிட்டு திரைக்கும்வரும் இப்படத்தை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் கண்டுகளிக்கும் வகையில், தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் விளம்பரப்படுத்துவதற்காக தனுஷ், திரிஷா, காளி வெங்கட், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா உள்ளிட்ட படக்குழுவினர் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற (அக்டோபர்) 25 , 26 ஆகிய தேதிகளில் நேரில் செல்கிறார்கள்.

இதை ‘கொடி’ படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.