காத்துவாக்குல ரெண்டு காதல் – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, மாறன், கிங்ஸ்லி மற்றும் பலர்

இயக்கம்: விக்னேஷ் சிவன்

தயாரிப்பு: ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ சார்பில் லலித்குமார்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: கதிர், விஜய் கார்த்திக்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

பிறந்தது முதல் துரதிர்ஷ்டசாலியாக இருக்கும் இளைஞன் ஒருவனுக்கு, ஒரே நேரத்தில் இரண்டு அழகான பெண்களைக் காதலிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதை கதைக்கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி – நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்துள்ள படம் என்பதாலும், கூடுதலாக கவர்ச்சி ஹீரோயின் சமந்தாவும் இணைந்திருப்பதாலும், அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே சூப்பர் ஹிட் என்பதாலும் இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்.

கதையின் நாயகன் ராம்போ (விஜய் சேதுபதி) பிறந்தவுடனே அவரது தந்தை இறந்துவிடுகிறார். அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார்.  ராம்போ தன் அம்மாவைப் பார்க்கப் போனால் அவரது உடல் மேலும் மோசமடைகிறது என்பதால், அம்மாவை பார்ப்பதையே தவிர்த்துவிடுகிறார் ராம்போ.

இப்படி துரதிஷ்டசாலியாக இருக்கும் ராம்போ, பகலில் ஓலா டாக்ஸி  டிரைவராகவும், இரவில் பாரில் பவுன்சராகவும் வேலை பார்க்கிறார்..

இவர் டாக்ஸி டிரைவராக வேலை செய்யும்போது கண்மணி கங்குலி  (நயன்தாரா) இவர் மீது காதல் கொள்கிறார். பவுன்சராக வேலை செய்யும்போது கதீஜா (சமந்தா) இவர் மீது ஈர்ப்புக் கொள்கிறார். ஒரே சமயத்தில் இருவரது காதலையும் ராம்போ ஏற்றுக்கொள்கிறார். இறுதியில் இந்த காதல்கள் என்ன ஆனது? ராம்போ யாரை கரம் பிடிக்கிறார்? என்பது மீதிக்கதை.

0a1c

எந்த கதாபாத்திரத்தில் வந்தாலும் சிறப்பாக நடித்து பெயரைத் தக்க வைத்துக்கொள்ளும் விஜய் சேதுபதி, ராம்போ கதாபாத்திரத்திலும் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். பாசம், வெறுப்பு, சின்ன சின்ன அசைவுகள் மற்றும் முக பாவனைகள் என அனைத்திலும் பிரமாதமாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

கண்மணி கங்குலி கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா, குடும்பக் குத்துவிளக்காக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தம்பி, தங்கையை வளர்க்கும் பொறுப்புள்ளவராகவும், கடன் நெருக்கடியில் தவிப்பவராகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

கதீஜா என்ற மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் வரும் சமந்தா நடிப்பிலும், கவர்ச்சியிலும் இளைஞர்களை வசீகரித்திருக்கிறார். மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

இரண்டு காதல்களை மையமாக வைத்து ‘காதல்காமெடி’ ஜானரில் படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் போட்டி போட்டு நடிப்பதற்குத் தேவையான ஸ்கோப் கொடுத்திருப்பதற்காகவும், போரடிக்காமல் சுவாரஸ்யமாக படத்தைக் கொண்டு சென்றதற்காகவும் இயக்குனரை பாராட்டலாம்.

பாடல்களைப் போலவே பின்னணி இசையிலும் அனிருத் கலக்கியிருக்கிறார். கதிர், விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ – பொழுதுபோக்காக பார்த்து ரசிக்கலாம்!