பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம்

நடிப்பு: விதார்த், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கருணாகரன், மசூம் சங்கர், சரித்திரன், பிரேம் மற்றும் பலர்

இயக்கம்: எஸ்.பி.சக்திவேல்

தயாரிப்பு: ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா

இசை: சுமந்த் நாக்

ஒளிப்பதிவு: பாண்டிகுமார்

ஓடிடி: ஆஹா டிஜிட்டல் தளம்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

கேரளாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைக் கதைக்கருவாக வைத்து மலையாளத்தில் எடுக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்து, பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவையும், பிரமாண்ட வசூலையும் வாரிக் குவித்த படம் ‘விக்ருதி’. இதன் தமிழ் மறுஉருவாக்கமே (ரீமேக்) ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற நேரடி ஓ.டி.டி. திரைப்படம் என்பதால் தமிழ்த்திரையுலகிலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0a1c

கல்லூரி ஒன்றில் நூலகராக பணிபுரியும் எழிலன் (விதார்த்) காது கேளாத, வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளி. அவரது அன்பான மனைவி தமிழ்ச்செல்வியும் (லட்சுமி பிரியா சந்திரமௌலி) வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி தான். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.

வாடகை வீட்டில் குடியிருக்கும் நடுத்தர வர்க்கத் தம்பதியினராக எழிலனும் தமிழ்ச்செல்வியும் ஒரு பூங்காவில் அமர்ந்துகொண்டு, ரூ.2500 விலை சொல்லப்படும் காய்கறி நறுக்கும் கட்டரை, தங்களுக்குள்ளும், சேல்ஸ்மேனிடமும் சைகையிலேயே உரையாடி, சாமர்த்தியமாக வெறும் 500 ரூபாய்க்கு வாங்கும் கலகலப்பான சுவாரஸ்யமான காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. இந்த ஒரு காட்சியே அவர்களின் அன்னியோன்யத்தையும், வாழ்க்கைத் தரத்தையும், வாழ்க்கை முறையையும் சொல்லிவிடுகிறது.

இதன்பின் மகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட, அவளை கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். எழிலன் இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து, தூங்காமல் இரவு பகலாக மகளை கவனித்துக்கொள்கிறார். பின்னர் மெட்ரோ ரெயிலில் அவர் வீடு திரும்பும்போது, அசதியில் கை-காலை நீட்டிப் படுத்து, தன்னை மறந்து தூங்கி விடுகிறார். அவரை பார்க்கும் சக பயணியான ஆண்டனி (கருணாகரன்), குடிபோதையில் எழிலன் மயங்கிக் கிடப்பதாக நினைத்துக்கொண்டு, அவரை படம் பிடித்து, கிண்டல் செய்யும் வாசகத்துடன் முகநூலில் பதிவிடுகிறார். அது வைரலாகப் பரவுகிறது.

இதனால் ‘பொறுப்பற்ற மொடாக்குடியனாக’ சமூகத்தால் பார்க்கப்படும் எழிலனுக்கு அவமானமும், வேலையில் சிக்கலும் ஏற்படுகிறது. ஏளனத்துக்கு ஆளாகும் அவரது டீன்-ஏஜ் மகன், அவரை சுடுசொற்களால் சுட்டெரிக்கிறான்.

ஒரு கட்டத்தில் காவல்துறையில் புகார் செய்கிறார் எழிலன். ஒரு நபரை தவறாக சித்தரிக்கும் வகையில் சமூகவலைத் தளங்களில் தகவல் பரப்புவது சைபர் கிரைம் என்பதால், எழிலனை படம் எடுத்து பதிவேற்றியது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறது காவல்துறை. சிக்கினால் 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்பதால் பயந்து நடுங்கும் ஆண்டனி, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயலுகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? அல்லது எழிலனுக்கு நீதி கிடைத்ததா? என்பது கிளைமாக்ஸ்.

‘விக்ருதி’ மலையாளப் படம் போலவே, அதன் தமிழ் மறுஉருவாக்கமான இந்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படமும் வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொருத்தமான நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பயன்படுத்தி, அழகான மேக்கிங் மூலம் ஒரிஜினல் திரைக்கதைக்கு நியாயம் செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல்.

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விதார்த், இதில் வாய்பேச இயலாத, காது கேளாத குடும்பத்தலைவன் எழிலன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அவரது மனைவி தமிழ்ச்செல்வியாக வரும் லட்சுமி பிரியா சந்திரமௌலியும் அவருக்கு ஈடுகொடுத்து யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

ஆண்டனி கதாபாத்திரத்தில் வரும் கருணாகரன், ஆரம்ப காட்சிகளில் நகைச்சுவையாகவும், அறியாமல் குற்றம் செய்தபின் அஞ்சி நடுங்குபவராகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஏனைய உறுதுணைப் பாத்திரங்களை ஏற்றவர்களும் அளவாய் நடித்து சிறப்பு செய்திருக்கிறார்கள்.

சுமந்த் நாக் இசையும், பாண்டிகுமார் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவசியம் குடும்பத்தோடமர்ந்து பார்த்து பாடம் கற்க வேண்டிய படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.

 

Read previous post:
0a1b
காத்துவாக்குல ரெண்டு காதல் – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, மாறன், கிங்ஸ்லி மற்றும் பலர் இயக்கம்: விக்னேஷ் சிவன் தயாரிப்பு: ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ சார்பில் லலித்குமார் இசை: அனிருத்

Close