தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம்

டுபாக்கூர் தொழில் முனைவோரின் ஏமாற்று வேலைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனராக அறிமுகமான வினோத், ஒரு போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட மயிர் கூச்செரியும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கியுள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மூலம் பாராட்டும் வகையில் அடுத்த உச்சம் தொட்டிருக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் வீடுகளைக் குறி வைக்கிறது ஒரு கொள்ளைக் கும்பல். அந்த வீடுகளில் இருக்கும் மனிதர்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு, நகைகளையும், பணத்தையும் அபேஸ் செய்துகொண்டு தப்பிச் சென்று விடுகிறது. அது தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தனது கைவரிசையைக் காட்டுகிறது. கொள்ளையர்களின் கைரேகை தவிர வேறு எந்த தடயமும் சிக்காததால் அவர்களை பிடிக்க முடியாமல் விழி பிதுங்குகிறது போலீஸ். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொலை, கொள்ளையில் ஈடுபட்டு அட்டகாசம் செய்யும் இந்த கும்பலால் 18 அப்பாவிகள் கொலை செய்யப்படுகிறார்கள். 63 அப்பாவிகள் படுகாயம் அடைந்து மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தக் கும்பலைக் கண்டுபிடித்து அதன் கொட்டத்தை அடக்கும் பெரும் பொறுப்பு டிஎஸ்பி தீரன் திருமாறனிடம் (கார்த்தியிடம்) ஒப்படைக்கப்படுகிறது. சாட்சியங்கள் மற்றும் தடயங்கள் இல்லாத நிலையில், அந்த கிரிமினல் கும்பலைப் பிடிக்க தீரன் திருமாறன் மேற்கொள்ளும் பெருமுயற்சிகளும், அதன் விளைவுகளும் தான் இப்படத்தின் பரபரப்பான கதை.

‘சிறுத்தை’ படத்துக்குப் பிறகு கார்த்தி இந்த படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். டிஎஸ்பி தீரன் திருமாறனாக கார்த்தி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நிமிடத்துக்கு நிமிடம் பஞ்ச் வசனம் வாரி இறைப்பது, குரல் உயர்த்தி காட்டுத்தனமாக சத்தம் போட்டு பேசுவது, வரம்பு மீறி அதிகாரம் செலுத்துவது என்ற வழக்கமான ‘ஹரி’த்தனமான போலீஸ் நாயகனுக்கான மசாலா அம்சங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மையான போலீஸ் அதிகாரியின் இயல்பை, குணநலனைப் பிரதிபலித்திருக்கிறார். பிரச்சனையின் ஆணிவேர் தெரிந்து கண்டுபிடிக்கப் புறப்படுவது, எதற்கும் சளைக்காமல் பயணம் மேற்கொள்வது, தன் குழுவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என எச்சரிக்கையுடன் இருப்பது, பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பதால் யாருக்கும் எதுவும் தப்பாக நடந்துவிடக் கூடாது என பதறுவது, இழப்புகளைத் தாண்டி நடக்கும் விளைவுகளை இயல்பாய் எதிர்கொள்வது என ஒரு ஐடியலான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார். மறுபக்கம், நாயகி ரகுல் ப்ரீத் சிங் உடனான காட்சிகளில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அதிலும் ரகுலை ‘ஐ லவ் யூ’ சொல்லச் சொல்லி அவர் அடிக்கும் கூத்து… செம்ம!

நாயகி ரகுல் ப்ரீத் சிங் கொஞ்சல், குறும்பு, நகைச்சுவை என அசத்தியிருக்கிறார். சில காட்சிகளில் குழந்தைத்தனமான பெண்ணாக தன்னை முன்னிலைப்படுத்தி இருக்கிறார். “எத்தனை டிரான்ஸ்ஃபர்…! ஒழுங்கா லஞ்சம் வாங்கிட்டு வேலை பார்க்க மாட்டியா?” என்று பொய்க் கோபத்தில் கொஞ்சும் விதம் ரகளை.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் போஸ் வெங்கட், பனே சிங் கதாபாத்திரத்தில் வரும் ரோஹித் பத்தாக், ஓமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிமன்யு சிங் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சத்யன், மனோபாலா, கல்யாணி நடராஜன், சோனியா, பிரவீணா, அபிராமி உள்ளிட்ட பலரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

சத்யன் சூரியனின் காமிரா வறண்ட மண்ணையும், மழையையும், வெயிலையும், புதை மணலையும், தேசிய நெடுஞ்சாலையையும் அற்புதமாக படம் பிடித்து பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்குப் பலம் சேர்க்கிறது. படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் காதல் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். திலீப் சுப்பராயனின் ஆக்‌ஷன் காட்சிகளில் நம்பகத்தன்மை மேலோங்குகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் தனித்த கவனம் பெறுகின்றன.

0a1e

ஒரு உண்மைச் சம்பவத்தை விரிவாகவும், ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சினிமாவாக உருவாக்குவது பெரிய கலை. அந்தக் கலையை இயக்குனர் வினோத் எளிதாக கைவரப் பெற்றிருக்கிறார். கொள்ளைக் கும்பலின் வரலாறு, அவர்கள் கொள்ளையடிக்கும் விதத்தை வரலாற்றுப்பூர்வமாக ஆய்வு செய்து விளக்கும் விதம் துல்லியத்தன்மைக்கு மிகச் சிறந்த உதாரணம். காவல்துறை அதிகாரிகளின் உழைப்பு, அவர்களின் பணிநேரம், அவர்களுக்குள் இருக்கும் பாகுபாடு, அவர்கள் சந்திக்கும் தடைகள், பிரச்சினைகள், சக அதிகாரிகளே மட்டம் தட்டுவது என எல்லாவற்றையும் போகிற போக்கில் சாதுர்யமாகப் பதிவு செய்கிறார். போலீஸ் கேஸ் எடுக்கும் விதம், அதை விசாரிக்கும் விதம், கைதிகளுக்கு பிரியாணி தரப்படும் விதம், குதிரை சவாரிப் பயிற்சி பயன்படும் விதம், புதைமணலில் மறைந்திருந்து தாக்கும் விதம் ஆகியவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

போலீஸ் வர்றார் எட்டிப் பார்க்கிறார் இந்த மக்களை யார் காப்பாற்றுவது என்று பொதுஜனம் கேட்க, அதற்கு பதில்சொல்லும் விதமாக ஸ்டேஷன்ல இருக்கிற 10 பேர் எப்படி எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று போலீஸ் தரப்பின் யதார்த்தம் பேசுகிறது.

அதேசமயத்தில், ”பவர்ல இருக்குறவன் உயிருக்குத் தர்ற மரியாதையை பப்ளிக் உயிருக்கு ஏன் சார் கொடுக்க மாட்டேங்குறீங்க”, ”நாம கெட்டவங்ககிட்ட இருந்து நல்லவங்களை காப்பாத்துற போலீஸ் வேலையை விட்டுட்டு, நல்லவங்ககிட்ட இருந்து கெட்டவங்களைக் காப்பாத்துற அடியாள் வேலைதானே சார் பார்த்துக்கிட்டு இருக்கோம்?” என்று போலீஸ் அதிகாரியைப் பேச வைத்து ஒருதலைப்பட்சமாக போலீஸ் படம் எடுக்கவில்லை என்று தன் படைப்பின் நேர்மையைப் பதிவு செய்கிறார் இயக்குனர்.

இரண்டாம் பாதியில் இடம்பெறும் அந்தக் குத்துப்பாட்டு திரைக்கதையின் விறுவிறுப்புக்கு தடங்கலை ஏற்படுத்துகிறது.

படத்தில் நுணுக்கமான யுக்திகளைக் கையாண்ட இயக்குநர் போலீஸுக்கு யூனியன் இல்லை என்பதையும் சொல்லி தன் சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கும் விதம் வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் உண்மையும் உயிர்ப்புமாய் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையைச் சொன்ன விதத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ நேர்த்தியான போலீஸ் சினிமாவாக நிமிர்ந்து நிற்கிறது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ – வெற்றி அதிகாரம்!