கதிர் – விமர்சனம்

நடிப்பு: வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பாவ்யா ட்ரிக்கா மற்றும் பலர்

இயக்கம்: தினேஷ் பழனிவேல்

தயாரிப்பு: துவாரகா ஸ்டூடியோஸ்

இசை: பிரசாந்த் பிள்ளை

ஒளிப்பதிவு: ஜெயந்த் சேது

மக்கள் தொடர்பு: சதீஷ்

நாயகன் வெங்கடேஷும், நாயகி பாவ்யா ட்ரிக்காவும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் தோழர்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட அறிமுகம் காதலாக பரிணாமம் அடைகிறது. படிப்பு முடிந்து பிரியும் வேளை வரும்போது, வெங்கடேஷின் குடிப்பழக்கமும், குடித்துவிட்டால் அவர் பண்ணும் அலப்பரைகளும் பிரச்சனையாய் மாற, பாவ்யா தன் காதலை முறித்துக்கொண்டு, நிரந்தரமாக அவரைவிட்டு பிரிந்துபோய் விடுகிறார்.

சொந்த ஊரில் நண்பர்களோடு சேர்ந்து குடியும், அரட்டையுமாகப் பொழுதைக் கழித்துத் திரியும் வெங்கடேஷை, அவரது தந்தை திட்டுகிறார். இதனால் கடுப்பாகும் வெங்கடேஷ், வேலை தேடி சென்னைக்குப் புறப்படுகிறார்.

சென்னையில் தன் நண்பன் வாடகைக்குத் தங்கியிருக்கும் மேல் மாடியில் தங்கிக்கொண்டு, வேலை தேடுகிறார் வெங்கடேஷ். பல நேர்காணல்களில் கலந்துகொண்டபோதிலும் வேலை கிடைக்கவில்லை. விரக்தியடைகிறார்.

இதற்கிடையே, அவர் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரும் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியையுமான ரஜினி சாண்டிக்கும் வெங்கடேஷுக்கும் இடையே தொடக்கத்தில் அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது. பின்னர் பரஸ்பர புரிதலுடன் பாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான அழகிய உறவாக அது மாறுகிறது. பயனற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் வெங்கடேஷை நல்வழிப்படுத்தி, சமூகத்துக்கு பயனுள்ள ஆளாக மாற்றுகிறார் ரஜினி சாண்டி. அது என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

’கதிர்’ என்ற நாயக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ், முதலில் கல்லூரி மாணவனாகவும், பின்னர் வேலை தேடுபவராகவும், அதன்பின்னர் விவசாயிகளின் நண்பனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகன் சென்னையில் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளராக வரும் ரஜினி சாண்டிக்கு கலகலப்பான, அதே நேரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரம். பாத்திரத்தின் வலு உணர்ந்து நடித்து அப்ளாஸ் பெறுகிறார்.

0a1c

பிளாஷ்பேக்கில் பொதுவுடைமைப் போராளியாக வரும் சந்தோஷ் பிரதாப், கீழ்வெண்மணித் துயரத்தை நினைவூட்டும் ட்ராக்கில் அநியாயத்தை தட்டிக் கேட்பவராகவும், அநியாயமாக வீரமரணம் அடைபவராகவும் நடித்து நம் மனதில் நிற்கிறார். அவரை “தோழர்… தோழர்…” என்று அழைத்தபடி காதலில் உருகும் இளம்வயது ரஜினி சாண்டியாக வரும் நடிகை, நம் கண்களைவிட்டு அகல மறுக்கிறார்.

நாயகனின் கல்லூரிக் காதலியாக நடித்திருக்கும் பாவ்யா ட்ரிக்கா குறைவான காட்சிகளே வந்தாலும், தன் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நாயகனின் நண்பர்களாக வருபவர்களும் யதார்த்தமாக  நடித்து, கலகலப்பூட்டி இருக்கிறார்கள்.

தினேஷ் பழனிவேலின் கதை, திரைக்கதை, இயக்கம் நன்றாக உள்ளது.  மக்களுக்குத் தேவையான ஒரு கருத்தை வலிந்து திணிக்காமல், அதை இனிமையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். பாராட்டுகள்.

பிரசாந்த் பிள்ளையின் இசையும், ஜெயந்த் சேதுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.

‘கதிர்’ – திரைக்கதையின் திருப்பங்களுக்காக பார்க்கலாம்!