ஒத்த செருப்பு சைஸ் 7 – விமர்சனம்

ஒருவன் தனியொரு ஆளாக இருந்து, தான் செய்த கொலைகளை போலீஸிடம் விவரிப்பதே ‘ஒத்த செருப்பு சைஸ்7’. இந்தப் படத்தை இயக்கி, நடித்து, தயாரித்திருக்கிறார் பார்த்திபன்.

க்ளப் ஒன்றின் செகரட்டரி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சந்தேகத்தின் பேரில் அந்த க்ளப்பில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் பார்த்திபனை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கின்றனர். முக்கியமான விவகாரம் என்பதால், துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரே நேரில் வந்து விசாரணை நடத்துகின்றனர்.

முதலில் கொலை செய்யவில்லை என மறுக்கும் பார்த்திபன், பின்னர் ஒப்புக் கொள்கிறார். வழக்கை முடிக்கலாம் என்று அவர்கள் நினைக்கும் நேரத்தில், மதுரையில் நடந்த ஒரு கொலையையும் தானே செய்ததாகச் சொல்கிறார். அதிர்ச்சியடையும் போலீஸார், அடுத்தடுத்து பார்த்திபன் சொல்லும் விஷயங்களால் மேலும் மேலும் அதிர்ச்சிக்கு ஆளாகின்றனர்.

பார்த்திபன் எத்தனைக் கொலைகள் செய்தார்? ஏன் செய்தார்? எப்படிச் செய்தார்? என்பதுதான் படத்தின் கதை.

பார்த்திபன் ஒருவர்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளார், மற்றவர்களின் குரல்கள் மட்டுமே கேட்கும் என்பது இந்தப் படத்தின் தனிச்சிறப்பு. தனி ஒரு மனிதனாக இரண்டு மணி நேரப் படத்தை சுவாரசியம் குன்றாமல் நகர்த்திச் செல்ல முடியும் என நிரூபித்திருக்கிறார் பார்த்திபன்.

மற்றவர்களின் குரல்கள் மட்டுமே கேட்க, பார்த்திபன் எனும் 61 வயது ஆணின் முகத்தையும், உடல் மொழியையும் மட்டுமே இரண்டு மணி நேரம் பொறுமையாகப் பார்க்க, திரைக்கதை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதற்கு, மாசிலாமணி எனும் கதாபாத்திரத்தை நம்முள் கடத்திய பார்த்திபனின் நடிப்பும் மிக முக்கியக் காரணம்.

காவல் நிலையத்தில் உள்ள ஒற்றை அறைதான் படத்தின் கதை நிகழுமிடம். ஆனால், பார்த்திபன் ஒவ்வொரு சம்பவங்களாக விவரிக்க விவரிக்க, நம்முடைய மனமும் அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த இடத்துக்குச் சென்று திரும்புகிறது. எதற்கெடுத்தாலும் கோபப்படும் உதவி ஆணையர், அதற்கு நேர்மாறாகப் பொறுமையுடன் கையாளும் துணை ஆணையர், மனோதத்துவ நிபுணருக்கே உரிய சாந்தத்துடன் அன்பொழுகப் பேசும் மருத்துவர், பாசம் – பேராசை என இரண்டு விதங்களிலும் மாறி மாறி பேசும் பார்த்திபன் மனைவி கதாபாத்திரம், தந்தையையே ‘மாசி’ எனப் பெயர் சொல்லி அழைக்கும் பார்த்திபன் மகன்… இவர்கள் எல்லோரும் நடிக்காத குறையைக் குரல்கள் மூலமாகவே சமன் செய்து விடுகின்றனர்.

மேஜை மீது சிந்திய தண்ணீரில் தோன்றும் பார்த்திபன் முகம், மனநல மருத்துவராக வரும் பெண்ணின் செருப்பும் கைப்பையும் காண்பிக்கப்படும் காட்சி, பார்த்திபன் தன் மனைவியுடன் ரொமான்ஸ் செய்வதாகக் கூறுமிடத்தில் பின்னணியில் ஒலிக்கும் இளையராஜாவின் ‘ஏதோ மோகம்’ பாடலின் இசை… இப்படி ஆங்காங்கா அழகியல் காட்சிகள் படம் முழுமைக்கும் நிறைந்து காணப்படுகின்றன.

சிரிப்புச் சத்தம் போன்று குழாயில் தண்ணீர் வருவது, பாத்ரூமில் யூரின் அடித்துக்கொண்டே பார்த்திபன் பேசுவது, வாக்குமூலம் எழுதிக் கொடுக்கும் எல்லா பேப்பரிலும் பெருமாள் துணை என எழுதுவது, வாக்குமூலத்தையே கார்பன் பேப்பர் வைத்து எழுதி பிரதி எடுத்துக் கொள்வது, தலைக்கு மேலே சுழலும் மின்விசிறியின் நிறுவனப் பெயரில் இருந்து தன் மனைவி பெயர் உஷா என்று லீட் எடுப்பது என பார்த்திபன் ‘டச்’களால் நிரம்பி வழிகிறது படம்.

‘அவன் சின்ன வீட்டுக்கு ஒரு பெரிய வீடு வாங்கிக் கொடுத்திருந்தான்’, ‘பிரியாணியில பீஸ் எங்கேனு போலீஸை வைத்துத்தான் தேடணும்’, ‘என்னைப் பார்க்காம பேனர்ல இருந்த ஓவியாவைப் பார்த்துக்கிட்டு இருந்தான்’, ‘குரங்கு குல்லாவ இப்ப எப்படிய்யா பண்ணிக் காட்டுறது’ என எள்ளல் வசனங்களால் ரசிக்க வைக்கும் பார்த்திபன், ‘உங்களுக்கெல்லாம் காத்தடிக்கிற காலம், காத்து அடிக்காத காலம்தான் தெரியும். ஆனா, காத்தாடி காலம்னு ஒண்ணு இருக்கு’, ‘எல்லாரும் அம்மணமா பொறக்கும்போது, சில பேரு மட்டும் கோமணத்தோட ஏன் பொறக்கணும்’ என சிந்திக்கவும் வைக்கிறார்.

ஒற்றை அறையை உலகம் மாதிரி சுற்றிக்காட்டி அப்ளாஸ் அள்ளுகிறது ராம்ஜியின் கேமரா. வெளிச்சத்தின் நிதானத்தையும், இருளின் பதைபதைப்பையும் ஒளிப்பதிவின் மூலம் உணர்த்தியிருக்கிறார். தேவையான இடங்களில் நிசப்தம் கூட்டி, விறுவிறுப்பான இடங்களில் இசையின் மூலம் அதை அதிகப்படுத்தியிருக்கிறார் சி.சத்யா. ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவை, இந்தப் படத்துக்குப் பக்கவாத்தியமாய் பலம் சேர்த்திருக்கிறது.

இருள் கவிழ்ந்த அறைக்குள் வெளியில் இருந்த பூனையைப் பிடித்து ட்ரம்முக்குள் பார்த்திபன் எப்படி அடைத்தார்; என்னதான் வெகுளியாக இருந்தாலும் போலீஸை இவ்வளவு அலட்சியமாகவா டீல் செய்வார்; தமிழகம் முழுக்கக் குற்றவாளிகள் பாத்ரூமில் அடிக்கடி வழுக்கிவிழும் இந்தக் காலத்தில், குற்றவாளி எனத் தெரிந்தும் பார்த்திபனை அவர் வழிக்கே விடுவது என ஏராளமான லாஜிக் மீறல்களும் படத்தில் உள்ளன.

பார்த்திபனைத் தவிர மற்றவர்களின் குரல்கள் மட்டுமே கேட்கும் நிலையில், கண்ணை மூடிக்கொண்டு பார்த்திபனின் குரலையும் கேட்கலாமே என படத்தின் இரண்டாம் பாதி லேசாகக் கொட்டாவி விடவைக்கிறது. ஆனால், அடுத்த ட்விஸ்ட் எனும் சூடான டீயைக் கொடுத்து நம்மை எழுப்பி விட்டுவிடுகிறார் பார்த்திபன்.

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ – புதுமையை விரும்பும் ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டிய படம்!

 

Read previous post:
0a1a
“கீழடி அகழாய்வை இன்னும் விரிவுபடுத்த வேண்டும்”: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கீழடி அகழாய்வின் நான்காம் கட்ட ஆய்வறிக்கையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் கீழடியின் வயது கி.மு.

Close