‘பவர் பாண்டி’யில் தனுஷூக்கு ஜோடி மடோனா செபஸ்டின்!

ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். அவரது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

அதிரடிக் காட்சி கலைஞர் (ஸ்டண்ட்மேன்) ஒருவரைப் பற்றிய கதை இது. அதிரடி காட்சி கலைஞராக ராஜ்கிரண் நடிக்கிறார். ராஜ்கிரணின் சிறுவயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். அவர் தனது கதாபாத்திரம் சுமார் 30 நிமிடங்கள் வருவது போன்று திரைக்கதை அமைத்திருக்கிறார்.

அதில், தனுஷூக்கு ஜோடியாக நடிக்க மடோனா செபஸ்டின் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தனுஷ் – மடோனா செபஸ்டின் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்பட இருக்கின்றன.