சாதி பார்த்து நடிகர்களை கொண்டாடும் இழிமனங்கள்!

‘வாட்ஸ் அப்’ என்பது அதிநவீன தொழில்நுட்ப சாதனம். நம் பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும் கிடைக்காத அதியற்புத தகவல் தொடர்பு சாதனம். இந்த நவயுக சாதனத்தை இழிமனம் கொண்ட சிலர், படுகேவலமாக பயன்படுத்தி வருவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

அமரர் சிவாஜி கணேசனின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு “சாதிப்பெருமிதம்” உலா வந்துகொண்டிருக்கிறது. “திரைக்கடலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பல குவித்த வீர ‘மறவன்’, கோடிக்கணக்கான ரசிக உள்ளங்களைக் களவாடிய ‘கள்ளன்’, உலக அரங்கத்தில் தமிழனை தலை நிமிர வைத்த ‘அகமுடையான்’, நடிப்பு பல்கலைக்கழகமாய் திகழும் ‘தேவர் மகன்’, எக்குலமும் போற்றும் முக்குலத்து மாமணி நடிகர் திலகத்தின் பிறந்தநாள் இன்று” என்பது தான் அது.

உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் “பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது விதியாக இருக்கும்போது, தெற்காசிய சமூகங்களில் மட்டும் “புதியன புகுதலும் பழையன நிலைத்தலும்” என்பது மரபாக இருந்துவருகிறது என்ற சாபக்கேட்டின் மற்றுமொரு உதாரணம் தான் இன்று சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்டு, பகிரப்பட்டு வரும் மேற்கண்ட “சாதிப்பெருமிதம்”.

சாதி பார்த்து கொண்டாடப்படும் நடிகர், சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே அல்ல. அத்தகைய நடிகர்களின் பட்டியல் மிக நீளமானது. தென்தமிழகத்தில், குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் அழுகி நாறிக்கொண்டிருக்கும் சாதிபேதம் குறித்து, பாரதி தம்பி எழுதிய ‘சாதி சூழ் உலகு’ என்ற கட்டுரையில், இது குறித்து மிக விரிவாக எழுதியிருக்கிறார். அக்கட்டுரையின் அந்த பகுதி இதோ…

                                                            # # #

ங்கு கிட்டத்தட்ட யாவரிடத்திலும் சாதி நீக்கமற நிறைந்திருக்கிறது. தன் சொந்த சாதியினர் நடத்தும் கடையில் பொருள் வாங்குவது, தன் சாதியைச் சேர்ந்த வக்கீலிடம் வழக்கு நடத்துவது என்று சாத்தியப்படும் இடங்கள் அனைத்திலும் சாதியை முன்னிலைப்படுத்துகின்றனர். திருமணம் போன்ற விழாக்களுக்கு ஒட்டப்படும் வாழ்த்துப் போஸ்டர்களிலும் சாதியே துருத்திக்கொண்டு நிற்கும். ‘தேவர் வீட்டுக் கல்யாணம்’, ‘நாடார் கோட்டையில் கொடைவிழா’ என்றுதான் அந்த போஸ்டரின் வாசகங்கள் சொல்லும்.

அத்தகையை போஸ்டர்களில் தவறாமல் ஏதாவது ஒரு நடிகரின் புகைப்படம் இடம் பிடித்திருக்கும். விக்ரம், பிரசாந்த், கார்த்திக் போன்றவர்களின் புகைப்படங்களை இம்மாதிரியான போஸ்டர்களில் பார்த்தபோது முதலில் ஒன்றும் தோன்றவில்லை. பின்னொரு நாளில் சந்தேகம் வந்து விசாரித்தபோதுதான், ஒவ்வொருவரும் தங்கள் சாதியைச் சேர்ந்த நடிகரின் புகைப்படத்தைப் போட்டுக்கொள்ளும் விஷயமே தெரிந்தது.

0a1u

முதலில் போஸ்டரில் தங்கள் சாதி நடிகரின் புகைப்படம் போடும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் தேவர்கள். முத்துராமன், கார்த்திக் ஆகியவர்களின் புகைப்படங்களோடு தொடங்கிய இது, பிற்பாடு பிரபு, அருண்பாண்டியன் என்று வளர்ந்து, இப்போது எஸ்.ஜே.சூர்யாவின் புகைப்படம் கூட சில இடங்களில் எட்டிப்பார்க்கின்றன. ‘தேவர் மகன்’, ‘விருமாண்டி’ ஆகிய படங்களில் நடித்ததால் கமல்ஹாசனையும் கூட சில நேரங்களில் தேவராக்கிவிடுகின்றனர். இதன்பிறகு நாடார்கள் தங்களின் போஸ்டர்களில் சரத்குமாரை கொண்டுவந்தார்கள்.

தென் மாவட்ட கலவரத்திற்குப் பிறகு தலித்துகளின் போஸ்டர்களில் பிரசாந்த் சிரிக்கத் தொடங்கினார். பிற்பாடு அதில் விக்ரமும் இணைந்துகொண்டார். இதேபோல ரெட்டியார்கள் நெப்போலியனையும், பிள்ளைமார்கள் இயக்குனர் விக்ரமனையும், விஸ்வகர்மா இனத்தவர்கள் தியாகராஜ பாகவதர், பார்த்திபன் மற்றும் கவிஞர் பழனிபாரதியையும், நாயக்கர்கள் விஜயகாந்த்தையும் தங்களின் போஸ்டர்களில் கொண்டு வந்தார்கள்.

இதில் பெரிய காமெடி ஒன்றும் நடந்தது. முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், இப்போது தி.மு.க.வில் இருப்பவருமான மு.கண்ணப்பன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், ‘நடிகை சுகன்யாவுக்கும், கண்ணப்பனுக்கும் தொடர்பு’ என்று பத்திரிகைகள் அனைத்தும் கிசுகிசு எழுதின. உடனே தென் மாவட்ட யாதவர்கள், தங்களின் விழாவுக்கான போஸ்டர்களில் சுகன்யாவின் படத்தை அச்சிட்டு மகிழ்ந்தார்கள். (உண்மையில் சுகன்யா என்ன சாதி..?)

இங்கு அனைத்து சாதியினரும் தங்களுக்கான இருப்பை உறுதிசெய்துகொண்டே இருக்கின்றனர். அது பெரும்பான்மையோ, சிறுபான்மையோ.. தான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவும், மற்றவனை விட நான் ஒன்றும் சளைத்தவனில்லை என்று காட்டவும் எல்லோரும் பிரயத்தனப்படுகின்றனர். ‘பார்த்துக்கடே.. எங்களுக்கும் ஆள் இருக்கு..’ என்று சுற்றத்துக்கு உணர்த்தும் பொருட்டே நடிகர்களை போஸ்டர்களில் சிரிக்க விடுகின்றனர்.

இது போஸ்டர்களோடு நிற்பதில்லை. சினிமா தியேட்டர்களின் கழிப்பறை சுவர்களில் ‘நாடார் குல சிங்கம்’ என்று கரிக்கட்டையால் கிறுக்கி வைக்கும் அளவுக்கு முத்திப்போகிறது. நெல்லைக்கு வந்துபோகும் ரயில்களின் கழிப்பறைகளிலும் இந்த வீர வசனம் காணக்கிடைக்கிறது. பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் படிந்திருக்கும் தூசி படலத்தில் எழுதி வைக்கிறார்கள் ‘வீர மறவன்’ என்று. தென்பகுதி கிராமங்கள் பலவற்றில் உள்ளே நுழைந்தாலே, ‘தேவர் கோட்டை உங்களை வரவேற்கிறது’ என்றோ, ‘தேவேந்திரன் கோட்டை உங்களை வரவேற்கிறது’ என்றோதான் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஆசிரியரை மாணவனே கொன்றுவிட்டான் என்றொரு செய்திக்காக ஏழாயிரம்பண்ணை என்ற ஊருக்குப் போயிருந்தேன். அந்த மாணவனுடன் படிக்கும் இன்னொருவனை விசாரித்தபோது கொஞ்சமும் தயக்கமின்றி அந்த பதிமூன்று வயது சிறுவன் சொல்கிறான்.. ”வாத்தியாரும் நாடாக்கமாரு. இவனும் நாடாக்கமாரு. அப்படி இருந்தும் குத்திபுட்டான்ணே.” மிக இயல்பாக அந்த சிறுவன் சொன்ன கணத்தில், எந்த அளவுக்கு சாதியின் தாக்கம் நிறைந்திருக்கிறது என்பது புரிந்தது.

மெத்தப்படித்த பொறியியல் நண்பன் ஒருவன், தான் ஏன் விஜய் ரசிகராக இல்லை; ஏன் அஜித் ரசிகராக இருக்கிறேன்… என்பதற்கு சொன்ன காரணம், “விஜய் ஒரு தலித்.”

சாதி என்பது நெல்லைக்கு மட்டுமான பிரச்னை இல்லைதான். ஆனால், இங்குதான் அது இவ்வளவு வெளிப்படையாக எல்லா செய்கைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

                                              # # #

பாரதி தம்பி அம்பலப்படுத்தும் இந்த “சாதிப்பெருமிதம்” இன்று எங்கே சென்று சேர்ந்திருக்கிறது என்றால், இசைக்கச்சேரியில் குத்துப்பாட்டு பாடிக்கொண்டும், சினிமாவில் சின்னச் சின்னதாய் காமெடி பண்ணிக்கொண்டும் இருந்த கருணாஸ் என்ற நடிகனை, ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்ற பெயரில் ஒரு கட்சி தொடங்க வைத்து, தென்மாவட்டங்களில் தலித் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வைத்து, அதிமுக கூட்டணியில் இணைய வைத்து, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைத்து, சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக்கி வைத்திருக்கிறது.

“சாதிப்பெருமிதம்” என்பது பெருமை அல்ல, இழிவு என்பதை உணர்ந்து, நடிகர்களை அவர்களது சாதிக்காக அல்ல, அவர்கள் ஏற்கும் கதாபாத்திரங்களுக்காக, அவர்கள் வெளிப்படுத்தும் நடிப்புத் திறமைக்காக கொண்டாடும் நிலை வரும்போது, சாதி தீயில் குளிர் காயும் ‘கருணாஸ்’கள் காணாமல் போவார்கள் என்பது திண்ணம்.

அந்த நிலை விரைவில் வர ஒன்றுபட்டு உழைப்போம்.

– அமரகீதன்