காவிரி: “தத்துவஞானி” சமஸ் சாப்பிடுவது சோறா? கழிவா?

சமஸ் ஒரு தத்துவ ஞானி. சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். “ஏம்பா கொஞ்சம் உப்பு கொண்டு வா” என்று எளிமையான முறையில் அதற்குத் தீர்வு கண்டுவிடுவீர்கள். அவரைப் பொருத்தவரை அப்படி தீர்வு காண்பது அவரது தகுதிக்கு குறைவானது. உப்பு ஏன் குறைந்தது? இது தமிழ்ச் சமூகம் சொரணை மரத்துப் போனதன் குறியீடா? அன்றி உப்புக்கே உவர்த்தன்மை குறைந்து வருகிறதா – என்பன போன்ற அறவியல், அறிவியல் சார்ந்த வினாக்களை எழுப்பி, குறைந்தபட்சம் அரைப்பக்க அளவிலாவது ஒரு கட்டுரை எழுதாமல், அவரால் சாம்பாரில் கை நனைக்க முடியாது.

உப்புப் பெறாத விசயங்களுக்கே அப்படி என்றால், காவிரி பிரச்சினையின்பால் அவர் தனது கவனத்தைத் திருப்பினால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். “காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது சரி, உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா” என்று தமிழ் இந்துவில் அக். 21, 2016 அன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

கட்டுரையின் முதல் பத்தி பாரதிராஜா படம் மாதிரி காவிரியில் புதுப்புனல் வரும் சீனுடன் தொடங்குகிறது. அப்புறம் தஞ்சை விவசாயிகளின் வியர்வை மணத்தை உலகுக்கு காட்டிய கும்பகோணம் தி.ஜானகிராமனுக்கு ஒரு துதி. அடுத்த பாராவில் அப்படியே காமெராவைத் திருப்பி மணற்கொள்ளை, ரசாயனக்கழிவு, சாக்கடை, புதர்கள் மண்டிய காவிரியைக் காட்டுகிறார். ‘’எந்தச் சமூகமாவது சாப்பாட்டுத் தட்டின் ஓரத்தில் கழிவுகளை வலிய எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுமா? நாம் சாப்பிடுகிறோம்! உரிமை குறித்து முழங்குவதற்கான தகுதி தமிழர்களுக்கு இருக்கிறதா?’’ என்று டெர்ரராக உறுமுகிறார்.

நாம் என்பது யார் சமஸ் அவர்களே!

ரொம்ப நியாயமான கோபம்தான். ஆனால் “நாம், நாம்” என்று சொல்கிறாரே சமஸ், அந்த “நாம்” யார்? அவரா, நீங்களா, நானா?

பொத்தேரியை ஆக்கிரமித்தது யார்? ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போரூர் ஏரியை தாரை வார்த்தது யார்? மணற்கொள்ளை ஆறுமுகசாமியும், பாஸ்கரும், கரூர் பழனிச்சாமியும் யார்?  நீங்களா, நானா, நாமா?

தலைமைச் செயலர் முதல் தாசில்தார் வரை இவற்றுக்கு ஒத்துழைக்கும் அதிகாரிகள் யார்? நாமா?

மணற் கொள்ளைகளை ஆசீர்வதித்து அனுமதி வழங்கிய நீதிபதிகள் யார், நாமா?

மணற் கொள்ளை உள்ளிட்ட சகல விதமான கொள்ளைகளையும் தலைமை தாங்கி நடத்தும் அம்மா யார்? நாமா?

மேற்படி சமூக விரோதிகளின் பெயர்கள் சமஸுக்கு தெரியாதா? அல்லது அவர்களுடைய புனிதத் திருநாமங்களை உச்சரிக்கக் கூடாது என்பதற்காக “நாம்” என்று தமிழ்ச் சமூகத்தின் மீது பழி போடுகிறாரா? யாருடைய நலனுக்காக அவர்களை மறைக்கிறார் சமஸ்?

அவர்களுடைய பெயர்களை தமிழ் இந்துவில் சமஸ் வெளியிடுவாரா? அல்லது கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் அவை ஏரி குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவையா என்று விசாரித்து, அவ்வாறாயின் அத்தகைய சமூக விரோதிகளின் விளம்பரங்களை நிராகரிக்க வேண்டும் என்று தனது நிர்வாகத்திடம் கோருவாரா?

தன்னுடைய ஊதியத்தையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் உள்ளிட்ட எல்ல ரகங்களையும் சார்ந்த சமூக விரோதக் கழிசடைகள் யார் என்று தெரிந்தாலும், அவர்களுக்கு முன்னால் பல்லிளித்து நிற்பதையும் அவர்களை கவுரவப்படுத்துவதையும் தமது தொழில் தருமமாகவே கொண்டிருக்கும் சமஸ் போன்றோர் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிப் பேசுமுன் தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டாமா?

உங்களுக்கும் கருத்துக் கூற உரிமை இருக்கிறது தகுதி இருக்கிறதா?

தனது சாப்பாட்டுத் தட்டின் ஓரத்தில் தமிழ் மக்களா கழிவுகளை எடுத்து வைத்துக்கொண்டார்கள்? எடுத்து வைத்தவர்கள் சமூக விரோதிகள். முதல்வரென்றும், தொழிலதிபரென்றும், வெங்காயமென்றும் போற்றிப் புகழ்ந்து அத்தகைய குற்றவாளிகளை புனிதர்களாக அடையாளம் காட்டி மக்களை மடமையில் ஆழ்த்தி வைக்கிறீர்களே அந்த சமூகவிரோதிகள்தான். அவர்கள் விட்டெறியும் விளம்பரக் காசிலும், இந்த மக்கள் விரோத அரசின் தயவிலும் வயிறு வளர்க்கும் நாளேடுகளுடைய கருத்து கந்தசாமிகள், தங்களுடைய சாப்பாட்டுத் தட்டில் நிரம்பியிருப்பது சோறா, கழிவா என்பதை முதலில் முகர்ந்து பார்க்கட்டும்.

காவிரி உரிமை கிடக்கட்டும். கருத்துரிமை கூட எல்லோருக்கும்தான் இருக்கிறது சமஸ் அவர்களே, அந்த உரிமையைப் பயன்படுத்தும் “தகுதி” உங்களுக்கு இருக்கிறதா என்று முதலில் சிந்தியுங்கள். அப்புறம் பொங்கலாம்.

மணற்கொள்ளையையும் ஆக்கிரமிப்பையும் எதிர்த்துப் போராடும் தமிழ் மக்கள் காவிரி உரிமைக்காகவும் போராடுகிறார்கள். எதற்கும் போராடாமல் தன் பிழைப்பை மட்டும் பார்க்கும் தி.ஜானகிராமனின் ரசிகர்கள்தான் கும்பகோணம் காவேரி ஸ்நானத்தின் வழியாக காவிரியை நினைவு கூர்ந்து சமஸ் கட்டுரையை சிலாகிக்கிறார்கள்.

காவிரியும், தமிழகத்தின் நீராதாரங்களும் இப்படி சீரழிக்கப்படுகின்றனவே என்ற நியாயமான கோபம் தமிழகத்தின் ஒவ்வொரு விவசாயிக்கும் இருக்கிறது. தன்னுடைய கோபமும் அதுதான் என்பதைப் போல ஒரு தோற்றம் காட்டிவிட்டு, நைச்சியமாக நஞ்சைக் கக்கத் தொடங்குகிறார் சமஸ்.

காவிரி தமிழகத்துக்கு இரவல் நதியா?

“எனக்குத் தனிப்பட்ட வகையில் ஒரு கருத்து உண்டு; ரொம்பக் காலத்துக்கு இப்படி நீதிமன்றங்களில் வழக்காடி தண்ணீர் தேவையைத் தீர்த்துக்கொள்ளும் உத்தியை நாம் கையாள முடியாது – தமிழகத்துக்குள்ளான நீராதாரங்களைக் கொண்டே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையிலான கட்டமைப்புக்கு நாம் மாற வேண்டும் என்பதே அது.”

“தமிழகத்துக்குள்ளான நீராதாரங்களைக் கொண்டே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது” என்று சமஸ் கூறுவதன் பொருள் என்ன? காவிரி “தமிழகத்துக்குள்ளான” நீராதாரம் இல்லையா? கர்நாடகத்துக்கு சொந்தமான காவிரி நீரை அடித்துப் பிடுங்குவதற்காகத்தான் நாம் நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டிருக்கிறோமா?

ரொம்பக் காலத்துக்கு வழக்காடும் உத்தியைக் கையாள முடியாதாம். உத்தியை கையாள்கிறோமா, வழக்காடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோமா? சர்வதேச நதிநீர்ச் சட்டங்கள் முதல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வரையிலான எதற்கும் கட்டுப்பட முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருவதால் வழக்காடுகிறோம். மத்திய அரசு இந்த அயோக்கியத்தனத்துக்கு உடந்தையாக இருப்பதால் வழக்காடுகிறோம். தனது தீர்ப்புகள் அவமதிக்கப்பட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உச்சநீதிமன்றமே பித்தலாட்டம் செய்வதால் வழக்காடுகிறோம்.

ஆனால் சமஸின் பார்வை வேறு. தமிழகம் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று மிகவும் பொறுப்புடன் பேசுவது போன்ற தோரணையில் அவர் கூறும் கருத்தின் உட்பொருள், “தமிழகத்துக்கு காவிரி இரவல் நதி” என்பதுதான். அதை வெளிப்படையாக சொல்லாமல் சூசகமாக சொல்கிறார். சமஸ் சொல்வதைத்தான் கர்நாடக அரசும் சொல்கிறது. “காவிரி எங்கள் ஆறு, எங்களுக்கு மிஞ்சித்தான் தான தருமம்” என்று பேசுகிறது.

துரதிருஷ்டவசமாக சர்வதேச சட்டமோ, மரபுகளோ சமஸின் கருத்துக்கு ஆதரவாக இல்லை. காவிரியில் தமிழகத்துக்கு சம உரிமை இருக்கத்தான் செய்கிறது.

முன்னாள் நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர் சமஸுக்கு பதிலளிக்கிறார்!

தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழகத்துக்கு சார்பாக பேசாதவரான முன்னாள் மத்திய நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர் இது பற்றி என்ன கூறுகிறார்?

“சம உரிமை (சம பங்கு அல்ல) என்ற ஹெல்சிங்கி கோட்பாட்டையும், சமத்துவமான பயன்பாடு என்ற ஐ.நா தீர்மானத்தையும் கர்நாடகம் ஏற்க மறுப்பதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்றன. தமிழகத்துடன் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது என்ற சொற்றொடரைப் பயன்படுத்தவே கர்நாடகம் மறுக்கிறது. எங்களுக்குப் போக எவ்வளவு தர முடியும் என்றுதான் பேசுகிறது. அதையும் தாங்கள்தான் தீர்மானிப்போம் என்று கூறுகிறது. அதனால்தான் மேலே உள்ள பகுதிகள் ஒரு ஆற்றின் இயல்பான நீரோட்டத்தை தடுப்பதாக (அணை) இருந்தால், கீழே உள்ள பகுதிகளின் ஒப்புதல் இன்றி செய்யக்கூடாது என்ற சர்வதேச நெறியை அது மீறுகிறது. கர்நாடக நீர்ப்பாசனத்துறை செயலரும் சரி, கர்நாடக முதலமைச்சரும் சரி வெளிப்படையாகவே இந்த நெறியை மீறிப் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. இதன்படி பார்த்தால் இந்தியாவைக் கேட்காமலேயே பிரம்மபுத்திராவுக்கு குறுக்கே சீனா அணை கட்டிக்கொள்ளலாம் என்று ஆகிவிடும்.”

கர்நாடக அரசின் நிலையை மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறையையும் விமரிசனம் செய்திருக்கிறார்.

“நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்தான். ஆனால் நடுவர் மன்றத்தில் தமிழகம் இடைக்கால நிவாரணம் கோரியபோதும் சரி, ஆணையத்தின் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகம் மறுத்தபோதும் சரி, தமிழகம் எழுப்பிய சட்டரீதியான கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்காமல் நழுவியது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிராக 2007-ல் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 262 இன் படி தனக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். மாறாக, மேல்முறையீட்டை அனுமதித்து அதனைக் கிடப்பில் போட்டிருக்கிறது” என்று சாடியிருக்கிறார்.

இரு மாநில விவசாயிகளையும் இணைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியாக, சென்னை மிட்ஸ் (MIDS) அமைப்பின் பேரா.ஜனகராஜனுடன் இணைந்து “காவிரி குடும்பம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதைப் பாராட்டுகிறார். அதன் முன்னோடியாக இருந்த கர்நாடக விவசாயி புட்டண்ணையா என்பவரும், பின்னாளில் “தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது” என்று போராடத் தொடங்கிவிட்டதை விமரிசிக்கிறார். கடைசியில் கோமாளித்தனமானது என்று கூறிக்கொண்டே வேறொரு தீர்வையும் முன்வைக்கிறார்.

“கர்நாடகம் செய்வது சரியல்ல. இருந்த போதிலும் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக கர்நாடகம் கருதுவதால், அவர்களுடைய மனப்போக்கை மாற்றும் பொருட்டு, 192 டி.எம்சி யில், 20 டி.எம்.சி தண்ணீரை குறைத்துக் கொள்வதாக தமிழகம் தானே முன்வந்து கூறலாம். இதன் மூலம், இதற்குத் நிரந்தரத் தீர்வு காண முயற்சிக்கலாம். மாதம் தோறும் முறையாக தண்ணீர் திறந்து விடக் கோரலாம்” என்கிறார்.

கிட்டத்தட்ட பிச்சையெடுக்கும் நிலை அது. ராமசாமி ஐயர் கூறிய நிலையைக் காட்டிலும் தாழ்ந்த, நாயினும் தாழ்ந்த நிலைக்குத் தற்போது தமிழகத்தை தள்ளியிருக்கிறது உச்சநீதிமன்றம். அதற்குப் பின்னரும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனைத் தெரிந்துகொள்ள ராமசாமி ஐயர் இல்லை. அவர் சென்ற ஆண்டே இறந்துவிட்டார்.

மேற்கண்ட விவரங்கள் பலருக்குத் தெரிந்திருக்க கூடியவைதான் இருந்த போதிலும் பூ என்றோ, புட்பம் என்றோ நாம் சொல்வதைக் காட்டிலும், ஐயர் சொல்றா மாதிரி அதைச் சொல்லும்போதுதானே உலகம் அதை நம்புகிறது! எனினும் ராமசாமி ஐயர் கூறும் விசயங்கள் குறித்த அறிவு இருப்பதற்கான அறிகுறி எதுவும் சமஸின் எழுத்தில் தென்படவில்லை. ஆனாலும் தமிழ் சமூகத்துக்கு அறிவுரை கூறும் “தகுதி” தனக்கு இருப்பதாகவே அவர் கருதுகிறார்.

தமிழகம் கர்நாடகத்தை ஆதிக்கம் செய்கிறதாம் சொல்கிறார் சமஸ்!

“இன்றைக்கு வரலாற்று நியாயங்களின் அடிப்படையிலேயே நமக்கான தண்ணீரைத் தர வேண்டும் என்று பேசுகிறோம். அந்த வரலாற்றின் அடிப்படை என்ன? அந்த நியாயத்தின் அடிப்படை என்ன? ஒருவகையில் அது ஆதிக்க வரலாறு; ஆதிக்க நியாயம்!” என்கிறார்.

ஆதிக்க வரலாறு, ஆதிக்க நியாயம் என்ற சொற்றொடர்களைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். பிரிட்டிஷ் அரசுக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் போடப்பட்ட ஒப்பந்தத்தைத்தான் அப்படி மிரட்டலான மொழியில் சொல்கிறார் சமஸ்.

இப்படி ஒரு கருத்து கர்நாடக மாநிலத்தில் பரவலாக நிலவுகிறது என்ற போதிலும், 1924 ஒப்பந்தத்தைப் படித்துப் பார்க்கும்போது அது ஒரு நியாயமற்ற ஆவணமாகத் தெரியவில்லை. ஒப்பந்தத்தில் மைசூர் அரசின் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு காரணம் பிரிட்டிஷாரின் வலிமை அல்ல. மாறாக, ஆற்றின் தலைக்கட்டுப் பகுதியில் உள்ளவர்கள் மீதுதான் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சிந்து நதி விசயத்தில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியா மீது கட்டுப்பாடு அதிகம். அதேபோல கங்கை விசயத்தில் வங்கதேசத்தைக் காட்டிலும் இந்தியா மீதுதான் கட்டுப்பாடு அதிகம். 1924-ல் கர்நாடகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அதற்குப் பின் காவிரியில் வரிசையாக அணைகளைக் கட்டி விட்டனர். இப்போது தமிழகம்தான் பாதிக்கப்பட்ட மாநிலம்.!” என்கிறார் ராமசாமி ஐயர்.

தமிழகத்தின் “ஆதிக்க நியாயத்துக்கு” எதிராக சமஸ் வெளிப்படுத்தும் ஆவேசம் கண்டு நிலை குலையாமல் இருக்க வேண்டுமானால் நமக்கு கொஞ்சம் புவியியல் ஞானம் தேவைப்படுகிறது. பல்வேறு ஆறுகள் உற்பத்தியாகின்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் கணிசமான பகுதி கர்நாடகத்தில் இருப்பதால், தமிழகத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிக நீர்வளமிக்கது கர்நாடக மாநிலம்.

தமிழகத்தைப் போல மூன்று மடங்கு நீர்வளம் கொண்டது கர்நாடகம்!

தமிழகத்தின் ஆறுகள் ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட மொத்த நீராதாரங்களுக்கு ஓராண்டில் சராசரியாக கிடைக்கும் நீரின் அளவு – 853 டி.எம்.சி. இதில் வெளி மாநிலங்களிலிருந்து (காவிரி உள்ளிட்ட) ஆறுகள் மூலம் கிடைக்கும் நீரின் அளவு 243 டி.எம்.சி. வங்கக் கடலில் கலக்கும் நீரின் அளவு 177 டி.எம்.சி.

கர்நாடகத்துக்கு ஆறுகள் அளிக்கும் நீராதாரத்தின் அளவு 3,475 டி.எம்.சி. இவற்றில் மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கும் 13 ஆறுகளிலிருந்து ஓடும் நீரின் அளவு மட்டும் 2,000 டி.எம்.சி. இதில் கடலில் கலக்கும் நீரின் அளவு சுமார் 1,500 டி.எம்.சி.  3,475 டி.எம்.சியில் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரின் அளவு 1,872 டி.எம்.சி.

கர்நாடகத்தின் பதினொரு பெரிய அணைகளின் கொள்ளளவு 705 டி.எம்.சி. தமிழகத்தின் பதினொரு பெரிய அணைகளின் கொள்ளளவு 190 டி.எம்.சி.

கர்நாடகத்தில் மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் காவிரிப் பாசனப்பகுதிக்கு மிக அருகாமையில் ஓடும் ஆறுகள் தரும் நீரின் அளவு மட்டும் 923 டி.எம்சி. காவிரிப் பாசனப்பகுதி மாவட்டங்கள் பலவற்றுக்கு இவற்றைத் திருப்பி விட முடியுமென்று கூறுகிறார் தமிழக பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.எஸ்.சுப்புராஜ்.

இவ்வாறு அந்த ஆறுகள் சிலவற்றை கிழக்கு நோக்கி திருப்புவதன் மூலம் சுமார் 142 டி.எம்.சி நீரை காவிரிப் பாசனப்பகுதிக்கு கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டத்தை 2002 இல் எஸ்.எம்.கிருஷ்ணா அரசு உருவாக்கியிருந்ததாக கூறுகிறார் முன்னாள் கண்காணிப்புப் பொறியாளர் நடராசன்.

கர்நாடகத்தின் மக்கட்தொகை சுமார் 6.1 கோடி என்பதையும், தமிழகத்தின் மக்கட்தொகை சுமார் 7.21 கோடி என்பதையும் இந்த இடத்தில் நினைவிற் கொள்ள வேண்டும்.

எனவே கர்நாடகம் தனது பாசனப்பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கான நீராதாரத்தை வழங்காமல் தமிழகம் பறித்துக் கொள்வதைப் போல சமஸ் உருவாக்கும் சித்திரம் உண்மைக்கு மாறானது. பெங்களூருவைச் சேர்ந்த சமூகப் பொருளாதார ஆய்வுக்கழகம் 2013 இல் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்காக நாளொன்றுக்கு 140 கோடி லிட்டர் காவிரி நீர் எடுக்கப்படுகிறது. அதில் 48% நீர் வீணடிக்கப்படுகிறது. குடிநீரை வீணடிப்பதில் நாட்டிலேயே கல்கத்தாவுக்கு முதலிடம் (50%). பெங்களூருவுக்கு இரண்டாமிடம்.

இதைப்பற்றி கேள்வி எழுப்புவதற்கான தகுதி தமிழகத்துக்கு உண்டா, அல்லது “கர்நாடகத்துக்குள்ளான” நீராதாரம் பற்றி நாம் கேள்வி எழுப்பக் கூடாது என்று சமஸ் கூறுவாரா? மகாராட்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் ஆந்திரம் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கும் கிருஷ்ணா நதி, எந்த “மாநிலத்துக்குள்ளான” நீராதாரம்? மகாராஷ்டிரத்துக்கு 666 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 911 டிஎம்சி, ஆந்திரத்துக்கு  1,001 டிஎம்சி  என்று கிருஷ்ணா நதி தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருப்பதை சமஸ் அறிவாரா?

காலையில் பெங்களூருவின் கழிவுநீர், மதியம் தமிழகத்தின் குடிநீர்!

“காவிரி குடும்பம்” என்ற முயற்சியின் அங்கமாக பல முறை கர்நாடகத்துக்கு சென்று வந்துள்ள ரங்கநாதன், அங்கே புன்செய் நிலங்களில் கரும்பு போன்ற நன்செய் பயிர்களை வலியப் பயிர் செய்து, கோடையில் கூட ஏராளமான தண்ணீரை வீணடிப்பதாக கூறுகிறார். அங்கே பாசனப்பரப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில், காவிரி டெல்டாவின் நெல் உற்பத்தி 38 லட்சம் டன்னிலிருந்து 18 லட்சம் டன்னாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. கூலி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 80 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. இவை 2013-ல் ரங்கநாதன் கூறியவை. இன்று அதற்கும் வழியில்லாத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

நெல் விளைவதற்கு மட்டுமே ஏற்ற பகுதியான டெல்டாவில் மாற்றுப் பயிர்களைப் பற்றி யோசிக்குமாறும் நீர் மேலாண்மை சரியில்லை என்றும் அறிவுரை சொல்கிறார் சமஸ். பெங்களூருவின் கழிவு நீர் ஆண்டொன்றுக்கு 20 டி.எம்.சி, விருஷபாவதி ஆற்றில் விடப்பட்டு, காவிரி நீராக கணக்கிடப்பட்டு மேட்டூருக்கு அனுப்பப்படுகிறது. பெங்களூருவின் கழிவறைகளிலிருந்து காலையில் வெளியேற்றப்படும் கழிவு நீர், அன்று மதியம் நமக்கு குடிநீராக வந்து சேருகிறது என்று எழுதுகிறார் சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்.

“விருஷபாவதி ஆற்றங்கரையில் புளியஞ்சாதம் சாப்பிட்ட சுகானுபவம்” பற்றி தி.ஜானகிராமன் யாருக்காவது “லட்டர்” எழுதியிருந்தால், அந்த இலக்கியத்தை உடனே சமஸுக்கு அனுப்பி வையுங்கள். அப்புறமாவது கர்நாடகத்தின் தகுதி குறித்த்து அவர் கேள்வி எழுப்புகிறாரா பார்ப்போம்.

தமிழகம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அணை கட்டி விட்டதாம், அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால்தான் அணை கட்டியிருக்கிறார்களாம். “காலத்தால் முன்னேறிய மாநிலம், தங்களுடைய முன்னுரிமை தொடரவேண்டும் என்று பேசுவதுதான் சமூக நீதியா?” என்று வருண சாதி ஆதிக்கம் செய்வோரின் இடத்தில் தமிழகத்தையும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் இடத்தில் கர்நாடகத்தையும் வைத்து சமூக நீதி அரசியலை தாக்குகிறார் சமஸ்.

புல்லரிக்கிறது! எச்.ராஜா, நாராயணன், ராகவன், சுமந்த் சி ராமன், மாத்ருபூதம்,  பெருமாள்மணி, பானு கோம்ஸ் உள்ளிட்ட அறிஞர்கள் அனைவரும் ரூம் போட்டு யோசித்திருந்தாலும் திராவிட இயக்கத்தை மடக்குவதற்கு இப்படி ஒரு கேள்வி அவர்களுடைய மூளையில் உதித்திருக்குமா?

கட்டுரையின் முடிவில் சமஸுடைய தத்துவஞானத்தின் ஒளி குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி பரவத் தொடங்குகிறது.

“இன்றைக்கு சிந்து நதி உடன்பாட்டில், பாகிஸ்தானுடனான பகிர்வை ஏன் மாற்றிப் பரிசீலிக்கிறோம்? வளரும் காஷ்மீரின் தேவைகளுக்கு ஏற்ப நமக்கான நீரை அதிகம் எடுத்துக்கொண்டு, பாகிஸ்தானுக்கான பகிர்வைக் குறைக்க வேண்டும் என்று எந்த நியாயத்தின் அடிப்படையில் பேசுகிறோம்? இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு இந்த நியாயமே கோலோச்சும்” என்கிறார் சமஸ்.

துருக்கி யூப்ரடிஸ் நதியைத் தடுத்து இராக் மக்களைத் தவிக்க விட்டது போல, ஜோர்டான் நதியைத் தடுத்த இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைத் தவிக்கச் செய்ததைப் போல,  சிந்து நதியைத் தடுப்பதும் நியாயமாம். ஆனால் அது பாகிஸ்தானை தண்டிப்பதற்காக இல்லையாம். காஷ்மீரை முன்னேற்றுவதற்காம்!

பாருங்கள்! மோடிக்கும் ராஜ்நாத் சிங்குக்கும் தெரியாத இரகசியம் சமஸுக்குத் தெரிந்திருக்கிறது.

“இந்தியா சிந்து நதியைத் தடுப்பது எப்படி நியாயமோ, அப்படி கர்நாடகம் காவிரியை தடுப்பதும் நியாயம்” என்று விளக்குகிறார் சமஸ். எப்படியோ பாகிஸ்தானின் இடத்துக்கு தமிழ்நாட்டைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். சென்ற இதழ் (அக்டோபர் 2016) புதிய ஜனநாயகத்தின் தலையங்கம், “பாஜக-வின் பாகிஸ்தானா தமிழ்நாடு?” என்று கேள்வி எழுப்பியிருந்தது. “ஆமாம்” என்று அதற்கு பதிலளித்திருக்கிறார் சமஸ்.

அவருடைய கட்டுரையின் கடைசிப் பத்தி இப்படி முடிகிறது.

“அது காவிரியோ, கிருஷ்ணாவோ, முல்லைப்பெரியாறோ நதிநீர்ப் பகிர்வில் நமக்குள்ள உரிமைகள் தனி. அவற்றை நாம் பறிகொடுப்பதற்கில்லை. ஆனால் உரிமைகளைப் பேசுவதற்கான தார்மீகத்தகுதி தமிழினத்துக்கு இருக்கிறதா?”

இந்த வரிதான், சமஸ் யாரென்பதை அனைவருக்கும் அடையாளம் காட்டும் முத்திரை வாக்கியம். தொலைக்காட்சி விவாதத்தில் “அக்லக்கை கொன்றது சரியா” என்று நெறியாளர் பா.ஜ.க நாராயணனிடம் கேட்டால், “யாரைக் கொலை செய்தாலும் அதை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று அவர் பதில் சொல்வார். ஒரு சிறிய இடைவெளி விட்டு அக்லக் பசுமாட்டைக் கொன்றிருக்கிறாரே அதை கண்டிக்காத உங்களுக்கு என்னைக் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறதா?” என்று திருப்பிக் கேட்பார். இதுதான் சங்க பரிவார மூளை.

“எந்தச் சமூகமாவது சாப்பாட்டுத் தட்டின் ஓரத்தில் கழிவுகளை வலிய எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுமா?” என்று சமஸ் எழுப்பியிருக்கும் கேள்விக்கு நமது பதில் – சாப்பிடும், சமஸ் அவர்களே, சாப்பிடும். “சிந்து நதியைப் போல காவிரியைத் தடுப்பதும் நியாயமே” என்று கூறும் உங்கள் எழுத்தை மூக்கைப் பிடித்துக் கொள்ளாமல் படிக்க முடிந்த தமிழ்ச் சமூகம், தனது தட்டின் ஓரத்தில் கழிவை வைத்துக்கொண்டு சாப்பிடுவதற்கா கூச்சப்படப் போகிறது?

சூரியன்

Courtesy: vinavu.com