அர்னாப், ஸ்மிருதி இரானி உடனான விவாதத்தில் பரிதாபமாக இருந்த கமல்!

அர்னாப், ஸ்மிருதி இரானி நிகழ்வில் கமல் அவர்களை பார்ப்பதற்கு அத்தனை பாவமாய் இருந்தது.

ஒரு கேள்விக்குக் கூட நேரடியான, உருப்படியான பதில் வரவில்லை. அதைவிட பரிதாபம், ஸ்மிரிதி இரானியை அர்னாப் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போது கூட அவருடன் சேர்ந்து பா.ஜ.க செயல்பாடுகளையோ அல்லது அந்த குறிப்பிட்ட பிரச்சினை குறித்தோ எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை.

கமலின் இந்த மய்யமான மௌனத்தை பார்த்து அர்னாப்பே ஒரு கட்டத்தில் ஆச்சர்யப்பட்டு, ‘Pls Unrestrain yourself. ஓப்பனா பேசுங்க. கேள்வி கேளுங்க. ஏன் எதுவும் கேட்க மாட்றீங்க’ என்று கேட்கும் அளவுக்கு வந்தது கொடுமை.

ஸ்மிரிதியும் அர்னாப்பும் ஒரு தலைப்பிற்குள் ஆழமாக சென்று பேசிக்கொண்டிருக்கும்போது, அதன் தலைப்புச் செய்திகளைத் தாண்டி ஒரு இன்ச் கூட கமலால் நகர முடியவில்லை. விமர்சனம் உண்டென்றாலும் தன் கட்சியின் அரசியல், கொள்கைகளில் ஸ்மிரிதி இரானிக்கு இருக்கும் தெளிவும் ஆழமும் ஆச்சரியப்படுத்தியது.

அந்த விஷயங்களைப் பற்றிய ஆழமான அறிமுகம் கமலுக்கு இல்லையா அல்லது பா.ஜ.கவை தீவிரமாக விமர்சிக்கக் கூடாது என்று அமைதியாக இருந்தாரா தெரியவில்லை. ஆனால் பா.ஜ.க பற்றி கமல் எழுப்பிய கேள்விகள் எல்லாம் ‘மெல்ல மெல்ல… சுவத்துக்கு வலிக்கும்ல’ என்ற தொனியிலேயே இருந்தன.

பொதுவாக தமிழ்நாட்டில் நடக்கும் விவாதங்களில், கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், மக்களை பார்த்து ‘அது அவர்களுக்குத் தெரியும்’ ‘என்னைப் பற்றி என் மக்கள் அறிவர்’ ‘என் நேர்மையை சோதிக்காதீர்கள்’ ‘நான் பூணூலை கழட்டி எறிந்தவன்’ போன்ற பஞ்ச் டயலாக்குகளை அள்ளித் தெறிப்பார். அதற்கு கூடியிருக்கும் மக்கள் ஆரவாரமாக கைத்தட்ட, அப்படியே அடுத்த கேள்விக்கு தாவிவிடுவார்கள்.

அதே டெக்னிக்கை இந்த நிகழ்ச்சியிலும் முயன்று பார்த்தார் கமல். பூணூல் மேட்டரை கூட பயன்படுத்தினார். ஒருத்தன் கூட கைத்தட்டல. பத்தாததுக்கு அர்னாப் வேற ‘நீங்க கேள்விய விட்டு எங்கயோ போறீங்க. நேரடியா பதில் சொல்லுங்க’ னு மறுபடியும் உள்ள இழுத்து விட்டுட்டு இருந்தாப்டி.

கமல் ஆவேசமாக பேச ஆரம்பித்தது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைப் பற்றித்தான். அதுவும் நேரடியாக தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. சரி இதைப் பற்றியாவது எதாவது வெளிப்படையாக பேசுவார் என்று பார்த்தால், அர்னாப் இது வெளியிலிருந்து யாரோ இயக்கிய போராட்டம், கூடங்குளம் வெளிநாடுகளில் பணம் பெற்று நடந்த போராட்டம் என்று சொன்னதற்கு கூட பதில் சொல்ல முடியாமல் திணறினார். ஒட்டுமொத்தமாக, இது அர்னாப், ஸ்மிருதி இரானி இருவரும் நடத்திய விவாதமாக மட்டுமே இருந்தது.

தமிழ்நாட்டில் பெரும் அறிவாளியாக பார்க்கப்படும் கமல், ஒரு தேசிய அரங்கில் இப்படி உட்கார்ந்திருந்ததை பார்க்க நிஜமாய் அத்தனை பரிதாபமாய் இருந்தது. கமல் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால் இன்னும் அரசியல்வாதியாக ஆகவில்லை. அதற்கு எத்தனை பிரயத்தணப்பட வேண்டுமென்பதற்கு கமலுக்கு இந்த விவாதம் ஒரு சோறு பதம்!!

JEYACHANDRA HASHMI