“இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால் மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்!” – வைரமுத்து

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 20ஆம் ஆளுமையாக சங்கப் பெரும்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார். செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் விழாவுக்குத் தலைமை தாங்கினார். முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

இயற்கை என்ற பெரும்பொருளை மனித வாழ்க்கை என்ற அரும்பொருளோடு ஈராயிரமாண்டுகளுக்கு முன்பே இணைத்தவர் என்று கபிலரைக் கருதலாம். இயற்கை என்பது மனிதனுக்குத் துணைப்பொருளன்று, முதற்பொருள் என்ற இலக்கணத்திற்கு இலக்கியம் படைத்தவர் கபிலர்.

இன்று உலகம் முழுக்க உச்சரிக்கப்படுகிறது சுற்றுச்சூழல் என்ற கருதுகோள். ஒரு நாட்டின் மொத்தப் பரப்பில் 33 விழுக்காடு காடு வேண்டும் என்று கதறுகிறது ஐ.நா. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் 160கோடியில் இருந்து 650கோடிக்குத் தாவியிருக்கிறது உலக மக்கள்தொகை. ஆனால் அதே காலவெளியில் உலகம் தன் சதுப்புநிலக் காடுகளில் பாதியை இழந்திருக்கிறது. மனிதா இயற்கையை விட்டு எட்டிச் செல்லாதே என்று எச்சரிக்கிறது கபிலர் பாட்டு.

இயற்கைக்கு எதிரான மனிதனின் யுத்தம்தான் உலகத்தை வெப்பமயமாக்கி ஓசோன் கூரையைக் கிழித்திருக்கிறது. புவி வெப்பத்தால் ஒருமணி நேரத்திற்கு ஒரு உயிரினம் அழிந்துகொண்டிருக்கிறது. இன்னும் மூன்று டிகிரி வெப்பம் கூடினால் உலகில் 33 விழுக்காட்டு உயிரினம் அழிந்துபோகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால், மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும். விண்ணும் மண்ணும் தங்கள் சமநிலையை இழந்துவிடும்; பருவங்கள் மாறிப்போகும்; துருவங்கள் உருகிப்போகும். காடுகள் அழிந்தால் மலைவளம் குன்றும்; மலைவளம் அழிந்தால் மழைவளம் குன்றும்; மழைவளம் அழிந்தால் நிலவளம் குன்றும்; நிலவளம் அழிந்தால் விளைநிலம் குன்றும். பிறகு வேளாண்மை என்ற நாகரிகத்தை விளைநிலங்களில் புதைக்க வேண்டியிருக்கும்.

விலங்குகளையும் பறவைகளையும் தாவரக் கூட்டங்களையும் மனித வாழ்வோடு கட்டுவிக்கும் ஊடுசரடாகக் கபிலர் இலக்கியம் விளங்குகிறது. கபிலர் இலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்க மாட்டான்; புல்லை வணங்குவான்.

கபிலர் பாட்டுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இருவர் படத்தில் நறுமுகையே பாடலில் இடம்பெற்ற ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ என்ற தொடர் கபிலரிடம் நான் கடன்பெற்றது. கபிலரை இணையதள உலகத்தோடு இணைக்கும் முயற்சிதான் அது.

தமிழர்கள் மத்தியில் பக்தி இலக்கியம் பரவிய அளவுக்குச் சங்க இலக்கியம் பரவவில்லை. பக்தி இலக்கியம் மறுமையோடு தொடர்புடையது; சங்க இலக்கியம் இம்மையோடு தொடர்புடையது. சங்க இலக்கியம் கடினச் சொற்களால் ஆனது என்று கழித்துவிட வேண்டாம். பாறைகளின் இடுக்கில் தேன்கூடு தெரிவதுபோல, கெட்டிப்பட்ட சொற்களுக்கு மத்தியில்தான் கொட்டிக்கிடக்கிறது தமிழர் பண்பாடு.

இளைஞர்களே! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதையர் வாழ்ந்த வாழ்வின் முகவரி தேடி நகருங்கள். நல்லன கொள்ளுங்கள்; அல்லன தள்ளுங்கள். பாரியின் மரணத்திற்குப் பிறகும் பாரிமகளிரை ஆதரித்தவர் கபிலர். ஒரு தோழனின் வாழ்வோடும் தாழ்வோடும் உடனிருப்பதே உயர்ந்த அறம் என்பதைக் கபிலர் பெருமான் வாழ்வில் கற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.