“மூடு டாஸ்மாக்கை”: தமிழகம் போர்க்களமானது – வீடியோ!

தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மது கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். .

போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதில் சிறுவர் – சிறுமியர், பெண்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர்.

போலீசார் தடியால் அடித்ததில் பல பெண்களின் மண்டை உடைந்தது. போலீசார் காக்கி உடையில் இல்லாமல் சாதாரண உடையிலும் வந்து தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலைமுடியை பிடித்து போலீசார் இழுத்தச் சென்ற கொடூரமும் அரங்கேறியது.

போராடிய பெண்களை ஈவு இரக்கமற்ற முறையில் தாக்கிய காவல்துறையினருக்கு பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் மீதும் போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் நிலைகுலைந்த சிறுவன் மயங்கியதை கண்டு அவனது உறவினர்கள் கதறியழுத சம்பவம் பல்வேறு தரப்பினரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. அச்சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்ய ஆண் போலீசாரை ஈடுபடுத்தி, ஜெயலலிதா அரசு அநாகரீக செயலில் ஈடுபட்டுள்ளது பலரையும் கொதிப்படையச் செய்துள்ளது.

https://youtu.be/WFbwpyPP3TU

https://youtu.be/pdrRAkEoua0

போராட்டக்காரர்கள் மீது போலீசார் கொடூரத் தாக்குதல் நடத்தியதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,  ‘’டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பெண்களும் தமிழகம் முழுவதும் இன்று முற்றுகை அறப்போராட்டம் நடத்தினர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஜெயலலிதா அரசின் காவல்துறை ரத்தம் சொட்ட சொட்ட கொடூரத் தாக்குதல் நடத்தி, மிருகத்தனமாக இழுத்துச் சென்று கைது செய்துள்ளது.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என்று பசப்பு வார்த்தைகளை வீசி வரும் ஜெயலலிதாவின் உண்மையான கோர முகம் இதன்மூலம் அம்பலமாகிவிட்டது.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த பாடகர் கோவன் “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருச்சியில் நள்ளிரவில் தீவிரவாதியைப் போல கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கோவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ  பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து, ஜெயலலிதா அரசு அவர் குரலை ஒடுக்க முயன்றது.

கோவன் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன. அவரைக் காவலில் வைத்து விசாரிக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதற்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த பிப்ரவரி 14, 2016 அன்று திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு நடத்தியது. மாநாடு நடந்த ஒன்றரை மாதத்துக்குப் பின், மாநாட்டை நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன், வாஞ்சிநாதன், தனசேகரன், ஆனந்தியம்மாள், வாள் வீச்சு வீரர் டேவிட் ராஜா ஆகியோர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ, 504, 505(1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெயலலிதா அரசு வழக்குப் பதிவு செய்தது.

மேலும் இதைவிடக் கொடுமையாக மாநாட்டு மேடையில் மதுவிலக்கு குறித்து பேசிய ஒன்றாம் வகுப்பு மாணவி பாரதி, ஐந்தாம் வகுப்பு மாணவி காவியஸ்ரீ ஆகிய சிறுமிகளையும் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர்.

மதுக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நடக்கும் தன்னெழுச்சியான போராட்டங்களை அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்று கருதி, மதுக்கடைகளை மூடக் கோரி அறப்போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை கொடூர தடியடி நடத்தி, கைது செய்து சிறையில் வைத்துள்ளதை வன்மையாகக் கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்டுள்ள மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

ஜெயலலிதாவினுடைய அரசியல் அதிகாரம் அஸ்தமனத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் ஏற்படுத்தி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணி ஆட்சி அமையும் என்று உறுதி அளிக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.