கொடி – விமர்சனம்

தி.மு.க – அ.தி.மு.க மாதிரி, காங்கிரஸ் – பா.ஜ.க. மாதிரி, எதிரெதிரான இரண்டு கட்சிகளைச் சேர்ந்த இருவர் காதலர்களானால், என்னென்ன பிரச்சனைகளெல்லாம் ஏற்படும் என்பதை, விஷத்தன்மை கொண்ட பாதரச ஆலை மற்றும் அதன் அபாயகரமான கழிவுகளை மையமாகக்கொண்டு சொல்ல வந்திருக்கிறது ‘கொடி’.

அரசியலில் பெரிய ஆளாக உயர வேண்டும் என்ற ஆசை கருணாஸூக்கு. ஆனால் காது கேட்காத, வாய் பேச முடியாத அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. தன்னால் முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் கருணாஸுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றன. அதில், மூத்த மகனை அரசியலில் ஈடுபடுத்த விரும்புகிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான கட்சியில் இருக்கும் கருணாஸ், சுற்றுச்சூழலையும், மனித ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும் பாதரச தொழிற்சாலையை மூடக் கோரி நடத்தப்படும் போராட்டத்தின்போது, தனது மூத்த மகனின் கண்ணெதிரிலேயே தீக்குளித்து இறந்து போகிறார். சிறு வயதிலிருந்தே அப்பாவுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவரும் மூத்த மகன் தனுஷ் (கொடி),  பெரிய ஆளாய் வளர்ந்த பிறகு, தனது அப்பா கருணாஸ் இருந்த கட்சியிலேயே மாவட்ட இளைஞரணி தலைவராகிறார். அவரது தம்பியான இன்னொரு தனுஷ் (அன்பு), ஒழுங்காகப் படித்து, ஒழுக்கமாய் வளர்ந்து கல்லூரி பேராசிரியர் ஆகிறார்.

தனுஷ் இருக்கும் கட்சிக்கு எதிரான கட்சியில் சிறுவயது முதலே இருந்துவருபவர் திரிஷா. அவருக்கும் அரசியல்வாதியான தனுஷூக்கும் பால்ய பருவத்திலிருந்தே காதல். மேடைகளில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டாலும், “அது அரசியல்; ஆனால் காதல் என்பது பெர்சனல்” என்ற புரிதலுடன், ரகசிய இடங்களில் அவ்வப்போது சந்தித்து, கட்டிப்பிடித்து, காதலை வளர்த்து வருகிறார்கள்.

அடிதடிக்கு அஞ்சாத அண்ணனைப் போல் இல்லாமல், சண்டை சச்சரவில் ஈடுபடாமல் “சிவனே…” என்றிருக்கும் பேராசிரியரான தம்பி தனுஷூக்கும், லெக்கான் கோழி முட்டையை டீத்தூளில் நனைத்து “நாட்டுக் கோழி முட்டை” என்று ஏமாற்றி விற்றுவரும் அனுபமா பரமேஸ்வரனுக்கும் காதல். முதலில் மோதலில் தொடங்கும் இவர்களது சந்திப்பு, மூடப்பட்ட பாதரச ஆலைக்குள் இருந்து கசியும் விஷவாயுவால் சுற்றுச்சூழல் மாசடைந்து, உடல்நலம் கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களின் சிகிச்சைக்குத் தேவையான பணம் சம்பாதிப்பதற்காகவே ‘முட்டை விற்பனை மோசடி’யில் அனுபமா பரமேஸ்வரன் ஈடுபடுகிறார் என தெரிந்ததும் காதலாகிறது.

மூடப்பட்ட பாதரச ஆலைக்குள் இருந்து விஷவாயு வெளியேறுவது குறித்து தனது அண்ணனிடம் சொல்கிறார் பேராசிரியர் தனுஷ். “அந்த தொழிற்சாலையை மூடுவதற்காகத்தானே என் அப்பா உயிரை விட்டார். அப்படியிருக்கையில், மூடப்பட்ட அந்த தொழிற்சாலையில் இருந்து எப்படி விஷவாயு வெளியே வருகிறது?” என தனது கட்சித் தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சென்று நியாயம் கேட்கிறார் அரசியல்வாதி தனுஷ். அப்போதுதான், கட்சித் தலைமை, பல கோடிகளை லஞ்சமாக வாங்கிக் கொண்டு அந்த தொழிற்சாலையில் உளள பாதரசக் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் விட்டதற்கு உடந்தையாக இருப்பது தனுஷுக்கு தெரிய வருகிறது.

இடைத் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தனுஷை, கட்சித் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானப்படுத்துகிறார். வருகிற இடைத்தேர்தலில் போட்டியிட தனுஷுக்கு வாய்ப்பு கொடுப்பதாகவும், அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகி, அந்த தொழிற்சாலையில் உள்ள பாதரசக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறுகிறார்.

ஆனால், அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாத தனுஷ் இந்த விஷயத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த தனது காதலி திரிஷாவிடம் கூறி வேதனைப்படுகிறார். ஆனால், அரசியல் வேறு, காதல் வேறு என்று இருக்கும் திரிஷாவோ இந்த விஷயத்தை பொதுமேடையில் போட்டு உடைக்கிறார். இதனால் கட்சி தலைமைக்கு தனுஷ் மீது கோபம் ஏற்படுகிறது.

இந்நிலையில், இடைத்தேர்தலில் தனுஷூம், அவரை எதிர்த்து அவரது காதலியான திரிஷாவும் களமிறக்கப்படுகிறார்கள். அதேநேரத்தில், பேராசிரியர் தனுஷை கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் ஒன்று கிளம்புகிறது.

கோபம் கொண்ட கட்சித் தலைமை தனுஷுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க உண்மையில் என்ன காரணம் ? தனது காதலியை எதிர்த்து தனுஷ் வெற்றி பெற்று, பாதரசக் கழிவுகளை அப்புறப்படுத்தினாரா? தம்பி தனுஷை கொலை செய்யக் கிளம்பும் ரவுடி கும்பலை ஏவிவிட்டது யார்? தனது தம்பியை அரசியல்வாதி தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.

தனுஷ் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு விதமான நடிப்பையும், தனது உடல்மொழியையும் மாற்றி நடித்திருக்கிறார். அரசியல்வாதி கெட்டப்பில் ரொம்பவும் ‘மாஸாக’ தெரிகிறார். அப்பாவியான கெட்டப்பில் தனக்கே உரிய சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ் என இரண்டிலும் அவரது தனித்தன்மை இந்த படத்திலும் பளிச்சிடுகிறது.

அரசியல்வாதி தனுஷின் காதலியாக வரும் திரிஷாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். மேடைப் பேச்சாளராக தனது நடிப்பை ரொம்பவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அரசியலில் பெரிய இடத்துக்கு வரவேண்டுமானால் எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் கொடூரமான பாத்திரத்தை அலட்டாமல் செய்து பளிச்சிடுகிறார்.

தனுஷ் சார்ந்த கட்சியின் தலைவராக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒரு அரசியல் தலைவருக்கு உரிய மிடுக்கை வெளிப்படுத்தியிருக்கிறார். காட்டுக்கத்து கத்தாமல், ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் மென்மையான அரசியல்வாதியாக மனதில் பதிந்திருக்கிறார்.

மற்றொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பில் மென்மை கலந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தனுஷ்களின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

’எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் தனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அரசியல் பற்றிய கதை என்றாலும், பிரச்சனைக்குள் ஆழமாகச் செல்லாமல் தன்னுடைய எல்லை எதுவரை என்பதை புரிந்துகொண்டு அதை நேர்த்தியாக செய்திருக்கிறார். திரைக்கதை விறுவிறுப்பாக செல்வது ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்கிறது. மேலும், வசனங்களும் படத்திற்கு பக்கதுணையாக நிற்கிறது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்தை சுவாரஸ்யமாக கொண்டுசெல்ல உதவியிருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. ‘ஏய் சுழலி’ பாடல் கேட்பதற்கு மட்டுமில்லாமல் காட்சியப்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் வழக்கம்போல மிரட்டியிருக்கிறார்.

‘கொடி’ – ஜெயக்கொடி!

Read previous post:
0a
காஷ்மோரா – விமர்சனம்

பூமியில் அலைந்து திரிந்து தொல்லைகள் கொடுக்கும் பேய்களை சாந்தப்படுத்தி, அவற்றை பேயுலகுக்கு அனுப்புவதாக “சீன்” போட்டு லட்சம் லட்சமாக சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஒரு போலி பேயோட்டியிடம், “என்னை சாந்தப்படுத்தி

Close