காஷ்மோரா – விமர்சனம்

பூமியில் அலைந்து திரிந்து தொல்லைகள் கொடுக்கும் பேய்களை சாந்தப்படுத்தி, அவற்றை பேயுலகுக்கு அனுப்புவதாக “சீன்” போட்டு லட்சம் லட்சமாக சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஒரு போலி பேயோட்டியிடம், “என்னை சாந்தப்படுத்தி பேயுலகுக்கு அனுப்பு. இல்லையென்றால், உன்னைக் கொன்று மேலே அனுப்பி விடுவேன்” என்று பயங்கரமான கொடூர பேய் ஒன்று வந்து நின்றால் அந்த போலி பேயோட்டியின் கதி என்ன ஆகும்? என்பதை நகைச்சுவையும் திகிலும் கலந்து சொல்ல வந்திருக்கிறது ‘காஷ்மோரா’.

‘பிரபல கார்ப்பரேட் சாமியார்’ என்பது போல ‘பிரபல கார்ப்பரேட் பேயோட்டி’ கார்த்தி (காஷ்மோரா). தனது அப்பா விவேக், அம்மா, தங்கை உள்ளிட்டோரை வைத்து செட்டப் செய்து, பேய் இருப்பதாகவும், அதை ஓட்டுவதாகவும் காட்டி, மக்களை ஏமாற்றி நம்ப வைத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள் எம்.எல்.ஏ சரத் லோகித்சவா வீட்டுக்கு பேய் ஓட்டச் செல்லும் கார்த்தி, அங்கு அவர் சாம்ர்த்தியமாகச் செய்யும் ஏமாற்று வேலைகள் அவருக்கு சாதகமாக அமைந்துவிட, எம்.எல்.ஏ.வின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார் கார்த்தி.

மறுநாளே எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வர, தன்னிடம் இருக்கிற கருப்புப் பணத்தையெல்லாம் கார்த்தியின் வீட்டில் கொண்டுபோய் வைக்க தனது ஆட்களுக்கு கட்டளையிடுகிறார் எம்.எல்.ஏ.

அந்த சமயம் கார்த்தி, ஆந்திராவில் உள்ள ஒரு பழைய அரண்மனைக்குள் இருக்கும் பேயை ஓட்டச் செல்கிறார். அங்கு இருக்கும் பேய், அந்த அரண்மனையைவிட்டு அவர் வெளியே செல்லவிடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில், கார்த்தி ‘போலி பேயோட்டி’ என்பதை அறியும் எம்.எல்.ஏ. தனது ஆட்களை அனுப்பி, கார்த்தியையும், தன்னுடைய பணத்தையும் கொண்டு வர கட்டளையிடுகிறார். ஆனால், கார்த்தியின் வீட்டுக்கு செல்லும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்நிலையில், கார்த்தி ஆந்திராவில் இருப்பதை அறியும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் அங்கு பயணமாகிறார்கள். அதேநேரத்தில், கார்த்தி மாட்டிக்கொண்ட அரண்மனைக்குள் விவேக் மற்றும் அவரது குடும்பமும் வந்து மாட்டிக்கொள்கிறது.

கார்த்தியை அரண்மனைக்குள் அடைத்து வைத்திருக்கும் அந்த பேய் யார்? அவரை எதற்காக அரண்மனையை விட்டுச் செல்லவிடாமல் தடுக்கிறது? என்பது மீதிக்கதை.

கார்த்தி இப்படத்தில் இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஷ்மோரா கதாபாத்திரத்தில் ரொம்பவும் அழகாக இருக்கிறார். விவேக்குடன் இணைந்து இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. முதல் பாதியை இவரது கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறது.

பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராஜுநாயக் என்ற கார்த்தியின் இரண்டாவது கதாபாத்திரம் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. பெண்கள் மீது மோகம் கொள்ளும் படைத்தளபதியாக வரும் ராஜு நாயக் கதாபாத்திரத்தில் கார்த்திக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் கார்த்திக் செய்யும் ஆக்சன் எல்லாம் ரசிக்க வைக்கிறது. இதற்காக கார்த்தி கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. அவருடைய கடின உழைப்புக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.

மன்னரின் மகளாக, ரத்னமகாதேவியாக வரும் நயன்தாரா இளவரசியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார். நடை, உடை, கத்தி வீசும் தோரணை என அனைத்திலும் அசர வைக்கிறார்.

பில்லி சூனியம், பேய் – பிசாசு பற்றி ஆராய்ச்சி செய்யும் கதாபாத்திரத்தில் வரும் ஸ்ரீதிவ்யா அழகாக இருக்கிறார். அளவான நடிப்பால் மனதில் எளிதில் பதிந்துவிடுகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விவேக்கின் காமெடியை ரசிக்க முடிகிறது. இவர் பேசும் கவுண்ட்டர் டயலாக் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலையை வரவழைத்திருககிறது.

எம்.எல்.ஏ.வாக வரும் சரத் லோகித்சவா, சாமியாராக வரும் மதுசூதனன் ராவ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் கோகுல், மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை கொடுத்திருக்கிறார். சரித்திரப் பின்னணியில் வரும் காட்சிகள் நம்பக்கூடியதாக இல்லாவிட்டாலும், அவற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. முதல் பாதியை காமெடியாகவும், இரண்டாம் பாதியை ஆக்ஷன், போர் காட்சிகள் என பிரமாண்டமாகவும் நகர்த்திச் சென்றிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தமிழ் திக்கு திக்கு சார்’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ‘ஓயா ஓயா’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, காட்சிகள் ஒவ்வொன்றையும் தெளிவாக படமாக்கியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் இவருடைய ஒளிப்பதிவு பிரமாண்டம் கூட்டியிருக்கிறது.

‘காஷ்மோரா’ – பேய்ப்பட பிரியர்களுக்கு விருந்து!