கருணாநிதியை நேரில் பார்த்து கண்ணீர் விட்டார் வைகோ: கருணாநிதியும் கண் கலங்கினார்!
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செவ்வாய் இரவு 8.15 மணிக்கு சென்றார். அவருடன் ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
வைகோ உள்ளிட்ட நிர்வாகிகளை, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றனர்.
கருணாநிதி மற்றும் அவருடைய மனைவி தயாளு அம்மாள் ஆகியோரை நேரில் சந்தித்து வைகோ உடல்நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.யும் உடன் இருந்தார். சுமார் 35 நிமிடம் சந்திப்பை நிறைவு செய்துவிட்டு, 8.50 மணி அளவில் வைகோ வெளியே வந்தார்.
கருணாநிதி உடனான சந்திப்பு குறித்து வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசியலில் என்னை வார்த்தவர் கருணாநிதி. அந்த நன்றியை நான் மறக்கவில்லை. அவருடைய உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து மனவேதனை அடைந்தேன். கருணாநிதி, திருப்பூர் துரைசாமியை அடையாளம் கண்டு புன்முறுவல் பூத்தார். எனது கையை கருணாநிதி பற்றிக்கொண்டார். அவர் விடவே இல்லை. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் விட்டேன்.
கருணாநிதி கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. கடந்த 2 மாதமாக என்னுடைய கனவில் கருணாநிதி வந்தார். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. கருணாநிதி என்னிடம் பேச முயற்சித்தார். தொண்டையில் பொருத்தப்பட்ட குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. நான் அவரிடம் ‘போய் வருகிறேன்’ என்று கூறியதும், அவர் சிரித்தார். அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள், செய்திகள் இருக்கிறது.
அவர் முழுமையான உடல்நலம் பெறுவார். மீண்டும் அந்த கம்பீரமான காந்த குரலில் பேசுவார். நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார். நிச்சயம் அவருடைய காந்த குரலில் உரையாற்றுவார். முரசொலி பவளவிழா வருகிற 5-ந்தேதி சென்னையில் நடக்கிறது. அந்த விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் என்னை அழைத்தார். அதை கருணாநிதியிடமும் தெரிவித்தார். நான் அதை ஏற்று விழாவில் பங்கேற்பேன் என்று கூறினேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.