உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் உயரும் அபாயம்!

தமிழகத்தில் திரையரங்கு கட்டணத்தை உயர்த்தக் கோரிய மனுவை நிராகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் பரிசீலித்து ஒரு மாதத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் திரையரங்கு கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் திரையரங்குகளுக்கு குளிரூட்டப்பட்டவையாக இருந்தால் ரூ.50-ம், இதர திரையரங்குகளுக்கு ரூ.30-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

2000ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2,339 திரையரங்குகள் இருந்தன. இது 2014-ல் 995-ஆக குறைந்துவிட்டது.

கேளிக்கை வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. திரையரங்கு ஊழியர்களின் அகவிலைப்படியும் 2006 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 771 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2009-ல் யூனிட்டுக்கு ரூ.3.50 பைசாவாக இருந்த மின்கட்டணம், தற்போது ரூ.7 ஆக உயர்ந்துள்ளது. இதனால், செலவுகளை ஈடுகட்டுவதற்காக திரையரங்குகளின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தக் கோரி 2006 முதல் 2013 வரை 15 முறை மனு கொடுத்துள்ளோம். இறுதியாக 2013 டிசம்பர் 19-ல் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி மனு கொடுத்துள்ளோம்.

எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வாரத்துக்குள் எங்கள் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே திரையரங்கு நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதியைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து தமிழக உள்துறைச் செயலர் அபூர்வ வர்மா கடந்த 21ம் தேதி பிறப்பித்த அரசாணையை தாக்கல் செய்தார்.

அதை படித்துப் பார்த்த நீதிபதிகள், ‘‘இந்த அரசாணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்கிறோம். மனுதாரரின் கோரிக்கையை மீண்டும் பரிசீலித்து ஒரு மாதத்துக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், திரையரங்கு கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துவிடும் என அஞ்சப்படுகிறது.

Read previous post:
0a1e
Kodi – Tamil Song Teaser

Close