கமல்ஹாசன் விதைத்துள்ள முற்போக்கு விதைகள்!

சில திரை ஆளுமைகள், பார்ப்பவர்களின் குணங்கள் மீது செல்வாக்கு செலுத்தி நற்குணங்களை விளைவிக்கவோ நீட்டிக்கவோ செய்வார்கள். நிஜத்தில் எப்படி என்பதை காட்டிலும் அவர் போதிக்க விரும்புவதை திரையில், கதாபாத்திரங்களின் வழி பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பார்கள்.

எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் போன்றவர்கள் இந்த கணக்கில் சொல்லலாம். எம்.ஜி.ஆரின் ஒழுக்கம், ரஜினியின் எளிமை, அஜித்தின் தயாள குணம் போன்றவை. இந்த குணங்களில் இருந்து வழுவும் சம்பவங்கள் பல அவர்தம் வாழ்க்கைகளில் இருந்தாலும் சிரத்தையோடு அவர்கள் கட்டிக்கொண்ட பிம்பங்கள்தான் அவர்களை எப்போதும் அடையாளப்படுத்தி இருக்கின்றன.

மிகச்சிலரால் மட்டுமே தான் கட்டிய பிம்பத்தை ஒட்டி ஓரளவுக்கேனும் வாழ்க்கையை அமைக்க முடிந்தது. அல்லது தன் வாழ்க்கை ஒட்டிய அந்த பிம்பத்தை அமைத்து காட்டி வணிக வெற்றி எட்ட முடிந்தது.

அந்த வரிசையில் குறிப்பிட தகுந்தவர் கமல்ஹாசன்.

காதல் மன்னனாக பெருவெற்றிகளை ஈட்டிக் கொண்டிருந்தவர், வயது ஏறுவதையும் காலம் மாறுவதையும் சரியாக புரிந்து, இருக்கும் பிம்பத்தை உடைத்து, புது பிம்பத்தை கட்ட துவங்கினார். அந்த அவருக்கான பிம்பத்தில் பெரும்பாலும் அவர் தேர்ந்தெடுத்து கொண்டது முற்போக்கையும் அநீதிகளை கண்டு கொள்ளும் கோபமும்!

‘அநீதி-கோபம்’ என்பதை கூட ஹிந்தி அமிதாப்பின் ‘ஆத்திரக்கார இளைஞன்’ பிம்பத்தில் இருந்து எடுத்திருக்கலாம். ஆனால் அந்த ‘முற்போக்கு’ பிம்பத்துக்கு தமிழ்நாட்டு சமூகநீதி அரசியல் மட்டுமே காரணம். முற்போக்கு குடும்பத்தில் இருந்து வந்ததாலும் இந்த கலப்பு இயல்பாகவே கமலுக்கு நடந்தது.

பெரியாரியவாதிகளுக்கு உரிய எள்ளல், மனிதம் தவிர எதையும் புனிதமாக பார்க்காத யதார்த்தவாதம் போன்றவற்றையும் இன்னும் சிலவைகளையும் காலப்போக்கில் தன் பிம்பத்தோடு சேர்த்திருப்பார் கமல்.

நண்பன் கொல்லப்பட்டதற்கு சாட்சி சொல்லுமாறு டீக்கடைக்காரர், வாத்தியார் என ஏரியாக்காரர்கள் எல்லாரிடமும் சென்று கேட்டும், எவரும் வராது போகவே, கையாலாகாத்தனத்தில் ‘சத்யா’வாக பொருமுவார், “ஓடு.. ஓடிப்போய் கட்டிலுக்கடியில ஒளிஞ்சுக்க. இல்லன்னா நெஜம் வந்து கடிச்சுடும்”. அப்படி சொல்லிவிட்டு நேரே அடுத்த வரியில் அவர் போகும் இடம், “கதை கதையா சொல்லுவீங்களே புராணத்துல… மரம் வந்து சாட்சி சொல்லுச்சு… கெணறு வந்து சாட்சி சொல்லுச்சுன்னு… இப்ப வாங்களேன்” என பகுத்தறிவு எள்ளலுக்கு.

இந்த பாணியிலான வசனம் ஒன்றைத்தான் ‘மகாநதி’யிலும் “ராமரையும் காந்தியையும் காட்டி இவர் மாதிரி இருன்னு ஏன் சொன்னாங்க? கடைசில இந்த மாமா பசங்ககிட்ட தோத்துப் போகவா” என வைத்திருப்பார்.

‘சத்யா’ படத்தின் ஆரம்பத்தில் ஒரு சண்டை காட்சிக்கு பின், ‘ஏன் இப்படி எல்லாத்துக்கும் கோபப்படறே’ என நண்பர்கள் கேட்பார்கள். அதற்கு கமல், “என்னை சுத்தி நடக்குற அசிங்கம், அவமானம், exploitation எல்லாத்தையும் என்னால தாங்க முடியாது. I’m gonna fight it and I want you to fight it” என்பார்.

இப்படித்தான் கமலின் பிம்பம் துவங்கப்பட்டது. எண்பதுகளின் லட்சிய வேகத்தின் மிச்சமாக அவர் இருப்பார். மாறியிருக்கும் சூழலுக்கு ஒப்பு கொடுக்க முடியாமல் போராடி கடைசியில் பலி ஆவார்.

புது பொருளாதார சூழல் (உலக மயமாக்கல்) கொடுத்த குழப்பம், அழுத்தம், நிலையாமை ஆகியவற்றை எதிர்த்து போராடி பலி ஆவதாகத்தான் கதைகள் அமைத்து கொள்வார்.

‘பேசும் படம்’ படத்திலும், வேலை இல்லா இளைஞன் ஒருவன் பணத்தையும் பணம் கொடுக்கும் வாழ்க்கையையும் அணுகும் முறை மாறி இருப்பதை காட்டிவிட்டு, ஒரு பிச்சைக்காரன் சேர்த்து வைத்திருந்த பணம் காற்றில் பறக்கும் வழியில் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பார்.

‘தேவர் மகன்’ படத்தில், படித்து முடித்து, ரெஸ்டாரண்ட் வைக்கும் கனவுடனும், காதலியுடனும் ஊருக்கு வரும் ஒரு முதலாளித்துவ பிரதிநிதியை எப்படி சாதியும் நிலப்பிரபுத்துவமும் காயடிக்கிறது என காட்டி இருப்பார். என்னதான் நவீனத்தை போர்த்தி இருந்தாலும் சாதி மிருகம் உள்ளே தூங்கிக் கொண்டுதான் இருக்கும், அழிந்திருக்காது என பொருள்படும் வசனமே படத்தில் இருக்கும்.

‘குணா’ படம் எல்லாவற்றுக்கும் உச்சம். எந்த சமூக நிலைக்கும் ஒப்பாமல் “ஹூம் மனுஷங்க” என அருவருப்புடன், ஒரு கனவு வாழ்க்கையின் ஒய்யாரத்தில் நிற்கும் ஒருவனை கொண்டு, இச்சமூகத்தில் platonic love, உறவுகள் எல்லாம் எத்தனை போலி என காண்பித்து நடைமுறையில் சாத்தியம் இல்லாததால்தான் அவை காவியங்களாக எழுத்தில் மட்டும் இருக்கின்றன என்பதாக உணர்த்தி முடியும் அப்படம்.

கற்று கொடுக்கப்படுபவை, படிப்பவை ஆகியவற்றிலிருந்து யதார்த்தம் எத்தனை வேறாக இருக்கிறது என்பதை பல படங்களில், பல இடங்களில் கமல் தொட்டு சென்றிருப்பார். மேற்கூறிய ‘காந்தி, ராமர்’ வசனமும் ‘மரம், கிணறு சாட்சி’ வசனமும் இதற்கான உதாரணங்கள்.

‘குருதிப்புனலி’லும், தேசிய உணர்வு, தீவிரவாதம், நேர்மை போன்ற கற்பிதங்களை தனக்கேற்ப அரசு ஊட்டி, ஆதி போன்ற முட்டாள்களை உருவாக்கி, பத்ரி போன்ற சமூக போராளிக்கு எதிராக, எப்படி சாமர்த்தியமாக கொண்டு போய் நிறுத்துகிறது என சொல்லியிருப்பார். படம் துவங்கும் கடிதத்திலேயே இது பூடகமாக புரியும்.

போலி பெண்ணியவாதிகளை அல்லது நுனி புல் மேயும் பெண்ணியவாதிகளை தலையில் தட்டும் வசனங்கள் இருக்கும் அதே நேரத்தில் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பாத்திரங்களை படைப்பதும் கமல்தான்.

“ரோட்டுல நடக்கும்போது வேர்த்ததுன்னா, நான் சட்டைய கழட்டிட்டு நடப்பேன்… நீங்க எப்படி” என ‘விக்ரம்’ படத்திலும் ‘உங்க பாடி சைஸ் என்ன’ என ‘விருமாண்டி’ படத்திலும் கமல் கேட்பதில் ஆணாதிக்கம் தொனிக்கலாம். ஆனால் அதே பாத்திரங்களுடன் தான், படத்தில் தொடர்ச்சியாக அதற்கு பின்னும் பயணித்திருப்பார். ரஜினி போல் வில்லி ஆக்கியிருக்க மாட்டார் என்பதை கவனிக்க வேண்டும்.

‘தேவர் மகன்’ படத்தில் நாயகனாகவே இருந்து, ஒரு சந்தர்ப்பத்தில் காதலி அல்லாத வேறு ஒருத்தியை மணம் முடித்திருப்பார் (சினிமாவில் லவ்வரை கழற்றிவிட்டு வேறு ஒருவனை மணம் முடிப்பது பெண்களின் மரபு என அறிக). ஊர் வரும் காதலி, உண்மை தெரிந்து கத்தும்போது கமல் அமைதியாக அமர்ந்து இருப்பார். அதிலும் ஏமாற்றப்பட்டுவிட்ட கோபத்தில் “Fu…” என கெட்ட வார்த்தை சொல்ல வந்து கவுதமி நிறுத்த, “திட்டிடு… பரவால்ல” என தலைகுனிந்து இருப்பதெல்லாம் தமிழ் சினிமாவின் நாயக மரபுக்கு, ஏன், ஆணின் மரபுக்கே கூட ஒப்பாதது. ஆனாலும் செய்திருப்பார்.

‘நம்மவர்’ படத்தில், ஆண்-பெண் பாகுபாடு இன்றி கலந்து, மாணவர்களை கமல் உட்கார அனுமதித்திருப்பதாக கல்லூரி முதல்வரிடம் தமிழாசிரியர் ஒருவரும் கவுதமியும் புகார் சொல்லி கொண்டிருப்பார்கள். ‘இன்னைக்கு கலந்து உட்கார சொல்றவரு, நாளைக்கு செக்ஸ் கூட சொல்லி கொடுப்பார்’ என கவுதமி சொல்லி கொண்டிருக்கும்போது, ‘ஒய் நாட்’ என்றபடி கமல் உள்ளே நுழைவார். “எய்ட்ஸ் பரவிக்கிட்டு இருக்குற இந்த காலத்துல, செக்ஸ பத்தியும் சொல்லிக் கொடுக்கனும். அதில் இருக்குற நல்லது கெட்டதையும் சொல்லிக் கொடுக்கனும்” என சொல்லும் கமலுக்கு, கண்டனம் தெரிவிக்கும் தமிழ் ஆசிரியரிடம், “நீங்க தமிழ மட்டும் சொல்லிக் கொடுங்க. தமிழ் பண்பாட்ட நாங்க பாத்துக்குறோம்” என்றபடி தொடர்ந்து பேசுகையில் “நாயுடு” என பெயர் சொல்லி அந்த தமிழாசிரியரை அடையாளம் காட்டுவார் கமல். அங்கு தெறிக்கும் அந்த நுண்ணிய அரசியல் எல்லாம் கமலுக்கே உரித்தானது.

‘குணா’வின் ‘பார்த்த விழி’ பாடலின் இறுதியில் பார்வதியை, சிவன் இடுப்போடு கால் போட்டு, இறுக்கி அணைத்ததும், இருவரும் மறைந்து லிங்கம் எழுவது, ‘குருதிப்புனலி’ல் மகன் முன்னாடியே மனைவிக்கு ஸ்மூச் செய்வதை கண்டிக்கும் மனைவியிடம் “நம்ம சொல்லி கொடுக்கலன்னா சேட்டிலைட் சானல்ஸ் சொல்லி கொடுக்கும்” என்பதெல்லாம் வெளிப்படைத்தன்மை எத்தனை அவசியம் என்பதற்கான அறைகூவல்கள்.

அதனால்தான் அவரால் மட்டும் வசூல்ராஜா நடிக்க முடிகிறது. அந்த பாத்திரம் அவராகவே இருப்பதால்தான் நம்மாலும் அந்த படத்துடன் இயல்பாக இணைக முடிகிறது. “காதல் ஒரு கடல் மாதிரிடா… அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா” என வேறோரு நடிகர் பாடியிருந்தால் நம்மால் ஏற்றுக் கொண்டிருக்க முடியுமா?

‘தேவர் மகன்’ படத்தில் மகன், கணவனுக்கு இடையேயான பாச சுயநலத்தில் அல்லாடும் மாயனின் தாய், ஆணின் கயமை உறவுக்கு ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ மனிஷா, ‘மகளிர் மட்டும்’ நாயகிகள், ‘நம்மவர்’ ஸ்ரீவித்யா, கவுதமி, ‘விருமாண்டி’ படத்தின் தைரிய அபிராமி, கமல் அழுது அரற்றுவதை ஆற்ற வழி தெரியாமல் நெஞ்சில் சாய்க்கும் ‘மகாநதி’ சுகன்யா என இவரின் பெண் பாத்திர வடிவமைப்புகளும் சரி, பெரிய நெஞ்சுரம் எல்லாம் பேசிவிட்டு ஆண் அகங்காரம் நொறுங்கி விழ பெண்ணிடம் விழுந்து அழும் ஆண் கதாபாத்திரங்களும் சரி, அத்தனையும் அவ்வளவு ரசனையாக இருக்கும். முழுமையாகவும் இருக்கும்.

பெரும்பாலான படங்களில் தன் துயர் மாளாமல் நாயகியிடம் அழுகும் காட்சி ஒன்றாவது கமல் வைத்திருப்பார். அவற்றில் எல்லாம் அந்த பெண்கள்தான் அத்தனை வலிமையாக இருப்பார்கள்.

இப்படி கமல் உருவாக்கிக் கொண்ட முற்போக்கு, பகுத்தறிவு, கோபம், வெளிப்படைத்தன்மை என்ற பிம்பம் காலத்தின் தேவையாக இருக்கிறது. அறம் காணா வாழ்க்கை சூழலில் இப்படிப்பட்ட பிம்பங்கள் கூட பற்றி கொள்ள இல்லாமல் போனால் நரகத்தை மட்டுமே நாம் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருப்போம்.

இந்த பிம்பத்திலிருந்து கமலே வழுவிய பல சமயங்கள் ‘விஸ்வரூபம்’ படம் போல இருப்பினும், இறுதி முடிவாக அவர் விட்டு செல்லவிருப்பது இந்த பிம்பத்தைத்தான். லட்சியத்துக்கும் யதார்த்ததுக்கும் இடையே உள்ள வேறுபாடு என இந்த வழுவும் தருணங்களை கொள்ளலாம்.

குழந்தையுடன் பைக்கில் சென்ற ஒருவனை இடித்தது மட்டும் அல்லாமல், போலீஸ் வந்ததும், இடிபட்டவன் மீதே பழியை திருப்பி விட்ட கார் ஓட்டுநருக்கு எதிராக இறங்கி, போலீஸிடம் தைரியமாக என்னை சாட்சி சொல்ல வைப்பது இந்த பிம்பம்தான். பிறந்த சாதி, மதத்தை விமர்சிக்க வைப்பதும் இதுதான். கைகொள்ளா காதலையும், பிரிந்து போய் பிற்போக்குகளின் கூட்டோடு விவாகரத்து தராது வஞ்சம் தீர்க்கும் திருமணத்தையும் தாண்டி குலையாமல் இருக்க வைப்பதும் இப்பிம்பமே. பெண்களை வெறும் உடலங்களாக அன்றி, சிந்தனை ஓட்டங்களாக பார்க்க வைப்பதும் இதுதான். எதற்கும் சளைக்காமல் தொடர்ந்து ஓட வைப்பதும் சுயவிமர்சனம் செய்ய சொல்வதும் இந்த பிம்பம்தான்.

இதுபோன்ற பல பிம்பங்களை நான் என் வாழ்வில் பிடித்திருக்கிறேன். என்னை பின் தொடர்பவர்கள் அறிந்திருக்கலாம். பெரியார், சே, சாப்ளின் போன்ற பிம்பங்கள். இவர்களை மற்றவர்கள் எப்படியும் பார்க்கலாம். ஆனால் நான் பல கோணங்களில் எனக்கான பிம்பங்களாக இவர்களை வரித்திருக்கிறேன். அவை வெறும் பொது வாழ்க்கையால் மட்டும் அல்ல. தனி வாழ்க்கையாலும் அல்ல. அவற்றை எல்லாம் தாண்டி நீண்டு செல்லும் ஓர் ஆன்ம முழு வெளிக்கான அந்தரங்க சரடுதான் என்னை இவர்களோடு கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அப்படித்தான் கமலுடனும்.

மற்ற பிம்பங்கள்தான் இருக்கின்றனவே, பின் ஏன் கமல் பிம்பமும் என கேட்கலாம். நம் நிலைக்கும் நம்பிக்கைக்கும் சரியாகத்தான் செல்கிறோம் என்ற உந்துதலுக்கும் ஒரு சமகால பிம்பம் தேவைப்படுகிறது. அந்த பிம்பத்தை போலவே லட்சிய வேகத்துடனும், அப்படி இருப்பதாலேயே நக்கலடிக்கப்படவும் செய்யப்படுகிற பலருக்கு, அந்த பிம்பம்தான் துணை நிற்கிறது. அடுத்தவரின் நலன் பொருட்படுத்தப்படாமல் வாழ்வதே சிறந்த பாணியாக முன்னிறுத்தப்படும் சமூகச்சூழலில் லட்சியம் பேசுபவர்களுக்கு, முற்போக்கு பேசி, முன்னோடி, தனித்து நிற்பவர்களுக்கும் கமலின் பிம்பம்தான் வெண்ட்டிலேட்டர். இந்த சமூகச்சூழலை எப்படி பலியாகாமல் தொடர்ந்து கொண்டே ‘அன்பே சிவம்’ நல்லான் போல கடப்பது என இப்பிம்பம் தொடர்ந்து பாடம் எடுத்துக் கொண்டே இருக்கிறது.

அதனால்தான் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் கமலுடன் நான் தொடர்ந்து நடக்கிறேன். அவர் மேற்கோள் காட்டும் ஆல்பெர் காம்யுவின் பாணியில் சொல்வதானால், “I’m not walking behind you. You may not lead me. I’m just walking beside you, being your friend. பிசிராந்தையார் போல்!

“நாம நல்லா இருக்கணும்னா, யார வேணும்னா எதுக்கு வேணும்னா கொல்லலாம்” என வசனம் பேசப்படும் காலத்தில், “நல்லவனுக்கு கெடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் கெட்டவனுக்கே கிடைக்குதே… அது ஏன்” என ஆராயும் கும்பலுக்கு கமலின் பிம்பம்தான் அடையாளமாகி போனது.

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கமல்!

Rajasangeethan John