“புதிதாக கட்சி தொடங்குவோர் கூட ’திமுக அழிய வேண்டும்’ என்கிறார்கள்”: முதல்வர் ஸ்டாலின் சாடல்!

புதிதாக ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், சமீபத்தில் விக்கிரவாண்டி அருகில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பேசுகையில், திமுக தனது அரசியல் எதிரி என்று குறிப்பிட்டு சாடினார். அதன்பின் நடைபெற்ற அவரது கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்தில் திமுக அரசு மீது குற்றம் சாட்டியும், கண்டித்தும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய்யை, பெயர் குறிப்பிடாமல், மறைமுகமாக சாடும் வகையில் பேசினார். அவர் கூறுகையில்,

“திமுக அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது சிலருக்குப் பிடிக்கவில்லை. இன்று புதிது புதிதாகக் கட்சி தொடங்குவோர் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என்று பேசி வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தேவையில்லாமல் பதில் சொல்ல வேண்டிய தேவையும் அவசியமும் எங்களுக்கு இல்லை. பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை. அண்ணா பாணியில் சொல்கிறேன்… வாழ்க வசவாளர்கள். இவர்கள் பேசுவதைக் கேட்டு நான் கவலைப்படவில்லை. மக்களுக்குச் சேவை செய்ய எங்களுக்கு நேரம் போதவில்லை. பொதுமக்கள் எந்த நம்பிக்கையில் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்” என்றார்.