சிந்துவெளி தொடங்கி கீழடி வழியாக முசிறிப்பட்டணம் வரை…

இரண்டு நாட்களுக்கு முன் கேரளத்தில் முதல்வர் ஸ்டாலினும் முதல்வர் பினராயி விஜயனும் ஒன்றாக வைக்கம் தெருவில் நடந்து ஒரு முக்கியமான அரசியல் செய்தியை இந்தியாவுக்கு அளித்தார்கள். அடுத்த நாளான நேற்று ‘இந்து’ நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது:

‘No idols, no arms: the Pattanam mystery’ என்கிற தலைப்பிட்ட அந்த செய்திக் கட்டுரையின் உள்ளடக்க சுருக்கத்தை தருகிறேன்.

கேரளாவின் பட்டணம் என்கிற கிராமத்தில் முக்கியமான அகழ்வு பணி நடக்கிறது. நகர நாகரிகத்துக்கான தன்மைகள் வெளிப்பட்டிருப்பதால், அக்காலத்தில் முசிறிப்பட்டணம் என அழைக்கப்பட்ட பகுதியின் பகுதியாக அக்கிராமம் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுவரை வெறும் 1% அகழ்வுதான் நடந்திருக்கிறது. ஆனால் நிறுவனமயப்பட்ட மத அடையாளங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், சாதி போன்ற படிநிலை அசமத்துவத்துக்கான தன்மையும் அங்கு வெளிப்படவில்லை.

உலகளாவிய நாடுகளுடன் வணிகப் பரிவர்த்தனை செய்ததற்கான அடையாளங்கள் கிடைக்கப் பெறுகின்றன. மத்தியதரைக் கடல், நைல் ஆறு, செங்கடல், தென்சீனக் கடல் போன்ற இடங்களை சேர்ந்த நாடுகளின் பண்பாடுகளை பிரதிபலிக்கும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

கிமு 5-ம் நூற்றாண்டிலிருந்து கிபி ஐந்தாம் நூற்றாண்டு வரை இந்த நகரம் இயங்கியிருக்கிறது. உச்சக்கட்ட செயல்பாடு கிமு 1-ம் நூற்றாண்டிலிருந்து கிபி 3-ம் நூற்றாண்டு வரை இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. போராயுதங்களுக்கான வாய்ப்பும் தென்படவில்லை. மக்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். குறிப்பாக வெளிநாட்டவர் மசாலா (Spice) பொருட்களை தேடி வந்ததில் அதற்கான வணிகத்தின் வழியாக இந்த நகரம் தழைத்திருக்கலாம். தமிழ்மொழியின் சங்க இலக்கிய நிபுணர்களும் இப்பகுதியில் இத்தகைய வணிகம் இங்கு மேற்கொள்ளப்பட்டதற்கான குறிப்புகள் இருப்பதாக உறுதிபடுத்தி இருக்கின்றனர்.

உள்ளடக்கம் இதுதான். 2007-ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் அகழாய்வு இது. எட்டு பகுதிகளாக நடத்தப்பட்டிருக்கிறது. 61 குழிகளில் அகழ்வு இதுவரை நடந்திருக்கிறது. செங்கற்கள் கட்டுமானம், களிமண் தரைகள், கழிவறை வசதிகள், உறைகிணறுகள், பானைகள் முதலியவை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு கண்டிபிடிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியாக அங்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது புரோகித தலைமை இன்றி, (ஒருவேளை மூத்தார் வழிபாடு இருந்திருக்கலாம்) மதமின்றி, ராணுவம் இன்றி ஒரு நாகரிகம் இயங்கியிருக்கிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் கிட்டத்தட்ட கீழடி நாகரிக காலக்கட்டத்தில் இதுவும் இயங்கியிருக்கிறது என்பதுதான். சிந்துவெளி தொடங்கி கீழடி வரை நீளும் அதே ரக கண்டுபிடிப்புகளும் வாழ்க்கைமுறையும் நகர அமைப்பும்தான் பட்டணத்திலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அத்தகைய ஒரு சூழலுக்கு பின்னான வரலாறு என்னவாக இருந்திருக்கும்? அரசு உருவாக்கமின்றி எப்படி ஒரு நாகரிகம் இயங்கியிருக்க முடியும்? வேளாண்மையின் பங்கு அந்த காலக்கட்டத்தில் குறைவாக இருந்ததா? பொருட்கள் சேகரிப்பு மட்டுமே வணிகத்தை பெருக்கி நகரத்தை கட்டியெழுப்ப உதவிட முடியுமா?

நமக்கு இத்தகைய ஆர்வமூட்டும் கேள்விகள் எழுகின்றன. அப்படியே ஆர்எஸ்எஸ்ஸின் தளமான ஆர்கனைசர் தளத்தை சென்று பாருங்கள். ’இந்த அகழாய்வை நடத்துவது ஒரு கிறித்துவர். தேவாலயத்தின் ஆதரவு பெற்றவர். ஆய்வுப்படிப்பில் கம்யூனிசம் பற்றி ஆய்வு செய்து தேர்ச்சி அடைந்தவர். இன்னொரு பாதிரியாருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது. இந்தியாவையே இந்த கூட்டம் உடைக்கவிருக்கிறது’ என்றெல்லாம் பதறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எரிகிறது என்றால் நாம் சரியான திசையில்தான் செல்கிறோம் என அர்த்தம்!

மதச்சார்பின்மையும் வைதிக எதிர்ப்பும் சுரண்டல் மறுப்பும் இந்தியாவின் இந்தப் பக்கத்தின் அரசியல் மட்டுமல்ல, வாழ்க்கையும் பண்பாடும் நாகரிக வரலாறும் கூட!

-RAJASANGEETHAN

(Photo: THEHINDU.COM)

 

Read previous post:
0a1j
‘விடுதலை பாகம்1’ திரைப்படத்தில் ’ஆகச் சிறந்த லவ் புரொபோசல்’!

பவானிஸ்ரீயின் பாட்டியை கரடி கடித்து விடும். உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பாட்டியை சிலர் துணியில் மடக்கி தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அப்போது, அன்றைக்குத்தான் போலீஸ் பணியில் சேர்ந்து இருக்கும்

Close