ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தவிர்த்து அரூபமான குற்றவாளிகளும் இருக்கிறார்கள்!

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா தான் ‘தண்டனை’ அறிவித்து தீர்ப்பை வழங்குகிறார். அதற்குப் பிறகான அப்பீலில் தடாலடியாக மற்றொரு நீதிபதி குமாரசாமி எல்லாரையும் நிரபராதிகள் என்று விடுவிக்க, இப்போது குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறவர்கள் தேர்தலை சந்தித்து ஆட்சியும் அமைக்கிறார்கள். இப்போது சுப்ரீம் கோர்ட், அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தள்ளுபடி செய்து குன்ஹாவின் தீர்ப்பையே உறுதி செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில், ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட வெளிப்படையான குற்றவாளிகளைத் தவிர்த்து அரூபமான குற்றவாளிகளும் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று பருந்துப் பார்வையாகப் பார்ப்போம்.

முதலில் நீதித்துறை. ‘சமூகத்தில் ஊழல் என்ற பிரச்சினை தலை விரித்தாடுவது எங்களுக்குக் கவலையளிக்கிறது’ என்று பினாத்தும் நீதிபதிகள் முதலில் ஒத்துக்கொள்ள வேண்டியது ‘நீதித்துறை செல்லரித்துப் போயிருக்கிறது’ என்கிற எதார்த்தத்தைதான். இந்த வழக்கின் ஆரம்பம் முதல் ஆராய்ந்தால், இது பதினேழு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்றமே பல வகையிலும் உதவியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ‘ஜெயலலலிதா & கோ-வைப் போல நீதித்துறையைக் கேலிக்குள்ளாக்கிய, அவமதித்த வேறொரு அரசியல் பகுதியினரைக் காண்பது அரிது. அதற்காக நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும். நீதிமன்றங்களின் ஊதிப் பெருக்கப்பட்ட புனிதத்தின் மீது தங்களது இடது காலை வைத்துக் கடந்து வந்த வகையில் அவர்கள் பொது சமூகத்துக்கு நடத்தியது ஒரு அரசியல் பாடம்.

இந்த வழக்கை சட்டக்கல்லூரியில் பாடமாக வைத்தால், ‘படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கவுன்சிலர் ஆகிவிடுவது உத்தமம்’ என்று மாணவர்கள் நினைக்கக் கூடும். அவ்வளவு காமெடி. இந்த வழக்கு விசாரணையில் இருந்து பாதியில் மனம் நொந்து வெளியேறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, உயர்நீதிமன்றத்திலேயே இந்த தண்டனையை உறுதி செய்திருக்க முடியும்; குமாரசாமி செய்த ‘arithmetical error’ தான் அவர்கள் விடுதலை ஆனதற்குக் காரணம் என்று சொல்கிறார். நீதிபதி அந்த ‘error’ ஐச் செய்வதற்கு எது காரணம் என்பது எல்லாருக்கும் தெரியும். அது நீதிமன்றத்துக்கும் தெரியும். ‘இன்னா.. இப்ப…?’ என்று நம்மை நோக்கித் தோரணையாக ஒரு பார்வை பார்க்கிறாரே சசிகலா, அந்த தைரியத்தை அவருக்கு வழங்குவது இவ்வாறு error செய்யும் நீதிபதிகள்தான். மட்டுமல்லாது சசிகலா போன்ற ‘வாடிக்கையாளர்களைத்தான்’ நீதிமன்றம் தண்டிக்க முடியுமே தவிர நீதி வழுவும் நீதிமான்களை அல்ல. ஏனெனில் அவர்கள் செய்வது வெறும் error மட்டுமேதான். அதில் மேற்கொண்டு கவனம் செலுத்த யாருக்கும் உரிமை இல்லை. சோதனை முயற்சியாக யாராவது ஒருவர், வேண்டுமானால் குமாரசாமி மீது வழக்கு தொடர முயலட்டுமே. இதே நீதிபதிகள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பாருங்கள். அப்போது தெரியும்.

இரண்டாவதாக சிவில் சமூகம். இப்போது வரை, கொள்ளையடிக்கப்பட்டது தங்களது சொத்து என்றோ, ஆள்பவர்கள் அவ்வாறு அத்துமீறுவது தங்கள் மீது செலுத்தும் வன்முறை என்றோ, ஒரு ஜனநாயக சமூகத்தில் அதற்கான எதிர்வினையை ஆற்றும் வாய்ப்பு தேர்தலின்போது கிடைக்கிறது; அதைப் பயன்படுத்த வேண்டும் என்றோ பரந்துபட்ட புரிதலுக்கு அது இன்னும் வரவே இல்லை. அவ்வாறு வர முடியாமல் போவதற்கு மிக முக்கியமான ஒரு காரணம், ‘தகுதியான மாற்றுகள்’ இல்லை என்பதே. அதைக் கடந்து தனிப்பட்ட வகையில் தனிமனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் நிறைய சீரழிந்திருக்கிறோம் என்பதும் முக்கியம். சசிகலாவின் கைதுக்கு குதூகலிக்கிற, குமாரசாமியின் மீது உமிழ முயல்கிற எல்லா தனி மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் இந்த அபத்தத்தின் ஒரு கூறாகவே இருக்கிறோம். இதிலிருந்து ஓரளவுக்காவது வெளியேறுவதன் வழி நமது சுயவிமர்சனத்தில் இருந்துதான் தொடங்க முடியும்.

ஒரு தொகுதியில் இரண்டு லட்சம் ஓட்டு என்றால், மிகவும் நேரடியாக இருபது கோடி ரூபாய் பணம் அந்தத் தொகுதியில் புழங்குகிறது. தேர்தல் என்பது திருவிழா இங்கு. பணத்தை வைத்து அரசியல் கட்சிகள் ஆடும் சூதாட்டம். அதில் பணயம் வைக்கப்படுவது வாக்காளர்களின் கண்ணியமும், சுயமரியாதையும். படித்தவன் முதல், படிக்காதவன் வரை எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி கைநீட்டி ஓட்டுக்குப் பணம் வாங்கும் வேசைத்தனத்தைக் கைவிடாத வரை இதற்கு விடிவு இல்லை. நமது பணத்தைத்தானே அவன் தருகிறான் என்கிற சப்பைக்கட்டு ஒரு வகையில் முகத்தை மூடிக்கொண்டு கூட்டிக்கொடுக்கும் செயல்தான். இந்தத் தவறில் பெரும் மக்கள் திரள் ஈடுபடுகிறபோது, ஒரு பக்கம் மாற்று அரசியலுக்கான வழிகள் அடைபட்டுப் போகின்றன. மறுபக்கம் ‘அரசியல் என்றால் என்ன…?’ என்பதன் புரிதலே மாறிவிடுகின்றன. உரிமை என்பதை விடுத்து அபிமானம் என்பதில் போய் நமது அரசியல் பார்வை முடிந்துவிடுவது அதனால்தான். அதன் அடுத்த கட்டம் வசீகரத்துக்கு பலியாவது. இந்த இடத்தில்தான் ஊடகங்கள் வருகின்றன.

இந்த சீரழிவில் முக்கியப் பங்கு ஊடகங்களுக்கும் இருக்கிறது. செய்திகளைச் சொல்வதிலேயே அரசியல் இருக்கிறது. அதாவது எதைச் சொல்வது, எதை இருட்டடிப்பு செய்வது என்பதில் தொடங்குகிறது அதன் அரசியல். வெளிப்படையாக தங்களது அரசியல் பார்வையுடன் இயங்கும் ஊடகங்களை அவை எவ்வளவு தவறாக இருந்தபோதும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மிவும் தந்திரமாக தமது அரசியல் சாய்வை மறைத்துக் கொள்ளும் ஊடகங்களே ஆபத்தானவை. அத்தகையவை பெருகியிருக்கின்றன. எப்போதும் உண்மையைச் சுற்றி பூஞ்சையான பொய்களைக் கட்டியமைத்தபடியே வருகின்றன செய்திகள். எவ்வளவு வதந்திகள் இருந்தாலும் சமூக ஊடகங்கள் மட்டும் இல்லையென்றால், இவர்கள் நமக்கு என்ன உண்மையைச் சொல்லியிருப்பார்கள்…? என்று கற்பனை செய்து பாருங்கள். எப்போதும் அவர்களுடன் இருப்பது வெளிப்படையான நிலைய வித்துவான்கள். இல்லையென்றால் அவ்வப்போது துண்டை மாற்றிக்கொள்ளும் தேங்காய் மூடிகள். மக்களின் அரசியல் சொரனையை திட்டமிட்ட அளவில் காயடித்துவிட்டதில் இத்தகைய ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. உதாரணத்துக்கு, இந்த வழக்கு விவகாரத்தில் காத்திரமான விமர்சனங்களை முன்னெடுத்த, மக்களுக்கு உண்மையை அறிவிக்கிற வகையில் செயல்ப்பட்ட ஊடகங்கள் எவை என்று பாருங்கள். உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். சொன்னதையே சொல்லிச் சொல்லி நம்மைச் சோர்வூட்டிய அற்ப ஊடகங்களே அதில் பெரும்பான்மை.

இந்தத் தீர்ப்பின் மூலமும், தண்டனையின் மூலமும் என்ன நடந்துவிடும் என்று கேட்கலாம். எல்லா லௌகீக நலன்களையும் தாண்டி நடந்திருப்பது கருத்தியல் ரீதியான ஒரு ஆசுவாசம். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள் எனும் எளிய மக்களின் எதிர்பார்ப்பின் மீது பாய்ச்சப்படும் சிறிய வெளிச்சம். இதன் பின்னுள்ள எல்லா அரசியல் கணக்குகளையும் மீறி, விழுமியங்களின் பாற்பட்ட லட்சியவாதத்தின் வெற்றி அது. வேறு எதற்குப் பயன்படுகிறதோ இல்லையோ, இன்னும் நிறைய ஊழல்களைக் சகித்துக்கொள்ளும் மனவலிமையைப் பெற நமக்கு இது பயன்படும். இந்த சமரச சமூகத்தில் குன்ஹாக்களும் தொடர்ந்து உருவாக முடியும் என்று நாம் நம்புவதற்கான அடிப்படையையும் இவைதான் வழங்குகின்றன. அந்த வகையில் இது முக்கியமான தீர்ப்பு!

KARL MAX GANAPATHY