ஓபிஎஸ்ஸா, இபிஎஸ்ஸா?: முதல்வர் பதவி யாருக்கு?

ஆட்சி அமைக்க உரிமை கோரி அதிமுகவின் சசிகலா அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை அணுகியிருப்பதால், ஆளுநர் தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5ஆம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டப் பேரவை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், 7ஆம் தேதி இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென தியானம் செய்த ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து அதிமுகவில் சர்ச்சை வெடித்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இரு தரப்பினரும் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ஆட்சி அமைக்கும் உரிமையை தங்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தினர்.

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமையும் என்று நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட் டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று கூறிய உச்சநீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் சசிகலாவால் இனி முதல்வர் பதவி போட்டியில் தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தீர்ப்பு வந்தவுடன் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை சசிகலா கூட்டினார். அதில் அதிமுகவின் சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநர் அழைப்பின் பேரில் கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்களுடன் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுநரை சந்தித்து அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும் ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் கட்சியின் அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், டிடிவி தினகரன் உள்ளிட்ட 13 பேர் வந்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் இரவு 7 மணியளவில் ஆளுநரைச் சந்தித்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சூழலில், பெரும்பான்மை பலம் உள்ளதாக தான் கருதும் ஏதேனும் ஒரு அணியை ஆட்சி அமைக்கவோ அல்லது யாருக்கு பெரும்பான்மை பலம் என்பதை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்டுவது பற்றியோ ஆளுநர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.