இடியட் – விமர்சனம்

நடிப்பு: சிவா, நிக்கி கல்ராணி, அக்சரா கவுடா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி மற்றும் பலர்

இயக்கம்: ராம் பாலா

தயாரிப்பு: ஸ்கிரீன் சீன் நிறுவனம்

இசை: விக்ரம் செல்வா

ஒளிப்பதிவு: ராஜா பட்டாசார்ஜி

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

பேய்களை மையமாக வைத்து ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’ ஆகிய காமெடி வெற்றிப்படங்களை இயக்கி தனி கவனம் பெற்ற ராம் பாலா இயக்கியுள்ள படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இது.

ஒரு கிராமத்தின் ஊர்த்தலைவராக இருக்கிறார் ராசு (ஆனந்தராஜ்). அவரது மகன் கதையின் நாயகன் சின்னராசு (சிவா). ஒரு விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்படும் சின்னராசு, சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கு மனநல மருத்துவராக கதையின் நாயகி ஸ்மிதா (நிக்கி கல்ராணி) இருக்கிறார். அவர் மன்னராட்சிக் காலத்தில் மன்னர்களை ஏமாற்றி சொத்துக்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டவர்களின் வம்சத்தில் தோன்றியவர். அவர் மீது சின்னராசு காதல் வயப்படுகிறார்.

அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நீலகண்டி (அக்சரா கவுடா) என்ற சூனியக்காரி, தன் காதலனை உயிர்ப்பித்து அவனுடன் ஒன்று சேருவதற்காக மருத்துவர் ஸ்மிதாவின் உயிரை எடுக்க முயற்சிக்கிறார். மறுபுறம், மருத்துவர் ஸ்மிதாவின் அப்பாவிடமிருந்து பணம் பறிப்பதற்காக, ஸ்மிதாவை கடத்த நான்கு அடியாட்களுடன் முயற்சிக்கிறார் வில்லன் ரவிமரியா.

இவர்கள் அனைவரும் பாழடைந்த பேய் பங்களா ஒன்றுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் என்ன? சூன்யக்காரி நீலகண்டி தன் நோக்கத்தை அடைய மருத்துவர் ஸ்மிதாவின் உயிரை எடுத்தாரா? நாயகன் சின்னராசு நாயகி ஸ்மிதாவின் கரம் பிடித்தாரா? என்பவை மீதிக்கதை.

நாயகனாக வரும் சிவா, காமெடி கலந்த யதார்த்த நடிப்பை வழக்கம்போல் இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் தெறிக்கவிடும் ’ஒன்லைன்’ காமெடிகளால் திரையரங்கமே சிரிப்பில் அதிருகிறது. சிவாவும் ஆனந்தராஜூம் சேர்ந்து வரும் காட்சிகளில் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிப்பலைகள் ஏற்படுகிறது.  இரண்டாம் பாதியில் சிவாவும், ரெடின் கிங்ஸ்லியும் இணைந்து எலி, பூனையை கண்டுபிடிக்கும் காட்சி மிக பிரமாதம்.  ”குனிந்து இருந்தால் மந்திரி ஆகிவிடலாம், காலை பிடித்தால் கட்சியில் பதவி” போன்ற அரசியல் சார்ந்த வசனங்களுக்கும் விசில் பறக்கிறது.

கதாநாயகிகளாக வரும் நிக்கி கல்ராணி, அக்சரா கவுடா இருவரும் தத்தமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்துள்ளனர். ஆனந்தராஜ், ஊர்வசி, ரவிமரியா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முதிர்ச்சியான நடிப்பை தேவைக்கேற்ப அளவாய் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

திரையரங்கிற்கு வரும் அனைவரும் லாஜிக்கை மறந்து  2 மணி நேரம் சிரித்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் ராம்பாலா இப்படத்தை உருவாக்கியுள்ளார். அவர் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து மெனக்கெட்டிருந்தால் அவரது எண்ணம் நிறைவேறியிருக்கும்.

ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவும், விக்ரம் செல்வாவின் இசையும் படத்திற்கு பலம்.

’இடியட்’ – ஒரு முறை பார்க்கலாம்!