பிங்க் – விமர்சனம்

‘குணக்கேடு”… எது குணக்கேடு? மது அருந்துவதால், புகை பிடிப்பதால்  ஒருவர் குணக்கேடு உள்ளவராக கூற முடியுமா? விருப்பப்பட்டு ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு உறவு கொள்வதால் ஒருவர் குணக்கேடு உள்ளவராக ஆகி விடுவாரா?

மேற்கேட்ட கேள்விகளுக்கு, “அவ்வாறெல்லாம் இல்லை; இதுவெல்லாம் குணத்தை தீர்மானிக்கும் காரணிகள் இல்லை” என நீங்கள் கூறினால், சபாஷ்!! மிக விசாலமான இதயம் படைத்தவர் நீங்கள், முற்ப்போக்கானவர்,  பகுத்தறிவுவாதி .

நிற்க, மேலே ஒவ்வொரு முறையும் “ஒருவர்” என  குறிப்பிடும்போது உங்கள் மனதில் தோன்றிய பிம்பம் ஆணா, பெண்ணா?

முக்கால்வாசி ஆணாகத்தான் இருக்கும். அவ்வாறெனில் இப்போது மாற்றி யோசித்துப் பாருங்கள்? இப்போது உங்கள் பதிலென்ன? சொல்வதில் தயக்கமா?? வேறு விதமான பதில்களா?? அவ்வாறெனில், ‘பிங்க்’ உங்களை  கண்டிப்பாக யோசிக்க வைக்கும் திரைப்படமாக இருக்கும்.

பெண்களின் பிரச்சனைகளையும், பெண்ணிய சிந்தனைகளையும் முன்னிறுத்தி தமிழிலும்  பிற மொழிகளிலும் பல படங்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் அந்தந்த காலத்திற்கு ஏற்றார்போலும், ஏன், காலத்தை தாண்டியும் வந்ததுண்டு. பிற இந்திய மொழிகளை விட  சற்று அதிகமாக இந்தி, வங்காளம், தமிழ், மலையாளம், மராத்தி மொழிகளில் இதுபோல் திரைப்படங்கள் வருவதுண்டு.

‘பிங்க்’ படத்தை கண்டிப்பாக இவ்வகையில் சேர்க்கலாம். ஆனால் இதுவரை வந்த திரைப்படங்களை விட சற்றே இது வேறுபடுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. எவ்வாறு வேறுபடுகிறது என்பதைச் சொல்வதே இத்திரைப்படத்தை பற்றிய பார்வையை ஒருவர் சரியாக வெளிப்படுத்துவதாக இருக்கும்.

முதலில், சொல்ல வந்ததை மிகத் தெளிவாகக் கூறிய   கதாசிரியர் ரித்தேஷ் ஷா, இயக்குனர் அணிருத் ராய் இருவருக்கும் பாராட்டுகள்.

சரி, கதைக்கு வருவோம். டெல்லியில் பணி புரியும் மூன்று இளம்பெண்களின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவம் தான் கதையின் பிண்னனி. மீனல் அரரோரா (டாப்சி) ஒரு தொழில் முறை மேற்கத்திய  நாட்டியக்காரர். அவரது தோழிகள் ஃபலக், ஆண்ட்ரியா. அவர்களும் வெவ்வேறு நிறுவனங்களில்  மாத சம்பளம் பெறும் ஊழியர்கள். டெல்லியில் வீடு எடுத்து தங்கி வேலை பார்க்கிறார்கள்.

நண்பர்களுடன் ஒருநாள் இரவு உணவு அருந்த ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு எதிர்பாராத விதமாக நடக்கும்  ஒரு சம்பவம், அதன் தொடர்ச்சியாக இப்பெண்களுக்கு ஏற்ப்படும் தொல்லைகள்… சட்டமும், காவல்துறையும் கூட சேர்ந்துகொண்டு  இப்பெண்களை பாடாய்படுத்துகிறது.  அதிலிருந்து எவ்வாறு வெளி வருகிறார்கள், என்னென்ன நடக்கிறது என்பதுதான் கதை.

மிகக் கொடிய சமூக அவலங்களை பிரதிபலிக்கும் வாதப் பிரதிவாதங்கள், பல சாட்டையடிக்கு ஒப்பான  விஷயங்கள் ஆகியவற்றை  படம் முழுக்க  காட்டும் விதம்  குறிப்பிட வேண்டியவை. நீதிமன்ற வளாகத்துக்குள்  கதை செல்கையில் தான் விறுவிறுப்பு அதிகமாகிறது.

ஒரு கட்டத்தில் டாப்சியை பார்த்து அமிதாப், “நீங்கள் கண்னித் தன்மையுடன் இருக்கிறீர்களா?” என கேட்கிறார். அதற்கு டாப்சி, “இல்லை” என்று சற்று தயக்கத்துடன் கூறுகிறார். “யாருடன் உறவு வைத்துக்கொண்டீர்கள்?” என்ற கேள்விக்கு, “எனது ஆண் நண்பர்” என பதில் கூறுகிறார் டாப்சி.  “அதற்கு பணம் வாங்கினீர்களா?” என்று அமிதாப் பதிலுக்கு கேட்கையில், “விருப்பப்பட்டு இருவர் கொள்ளும் உறவில் பணம் என்ற பேச்சுக்கு இடமேது?”  என டாப்சி கூறும் பதில், கிட்டத்தட்ட  பெண்மையின்  மீது இருக்கும்  கற்பிதங்கள் பலவற்றையும் தவிடு பொடியாக்குகிறது.

இதுமட்டுல்ல, மது அருந்துதல், புகைப்பழக்கம்  என இவை யாவையும்  பெண்ணை குணக்கேடு உள்ளவளாக சித்தரிக்க பயன்படும் அளவிற்க்கு ஆண்கள் மீது பயன்படுத்தப்படுவதில்லை என்பதை பல இடங்களில் சுளீரென்று உரைக்கும்படி பதிவு  செய்கிறது பிங்க்.  (விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில்,  “குடிப்பதில் என்ன குணக்கேடு?” என்று வினவிய பெண்ணின் மீது சமூகத்தின் கூட்டு மனசாட்சி காட்டிய வண்மத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்து விடமுடியாது).

படத்தின் பல காட்சிகளில் இவ்வாறு பெண்மையின் மீது இருக்கும் கற்பிதங்களும், ஆண்களின் புரிதலில் இருக்கும் பலவீனமும் வெளிக்கொண்டு வரப்படுகிறது. முக்கியமாக, பெண்களின் மீது இருக்கும் புரிதலில்  இருக்கும் பலவீனத்தை ராஜ்வீரின் ஒப்புதலாகவே கூற வைக்கும் காட்சி அருமை.

வழக்கு நடந்துகொண்டிருக்கையில், ஃபலக்கின் காதலர் அவரை விட்டு விலகிக்கொள்வது, இரவுநேர  நடனத் தொழிலில் இருப்பதால் பெற்றோர்களுடன் இருக்க முடியாத நிலை, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் பெண்களை மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் இழிமனோநிலை என பல விஷயங்கள் கூர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடவே   பெண் மீது “சமூகம்” செலுத்தும் வன்முறை என்று ஒவ்வொரு முறை கூறும்போதும் , “சமூகம்” என்ற வரையறைக்கு இங்கு பாலின பாகுபாடில்லை என்பதையும்  பதிவு செய்திருக்கிறது ‘பிங்க்’.

“காரி காரி…” எனும் பாடல் ஆண்திமிர் பிடித்த உலகில் பெண் படும் வேதனையை வெளிக்கொண்டு வருகிறதென்றால், இறுதியில் அமிதாப்பின் கம்பீரக் குரலில் வரும் “து குத் கி கோஜ் “மே நிகல்…” எனும் பாடல் இந்த தடைகளை உடைத்து, எவ்வித தயக்கமுமின்றி பெண்ணை வெளியில் வர அறைகூவி அழைக்கிறது. பாடல் வரிகள் மிக அருமை. பாடல்களை பற்றி மட்டுமே தனியாக ஒரு கட்டுரை எழுதலாம் போல.

இவ்வளவும் எழுதிய பிறகு, நடிப்பைப் பற்றி  எழுதாமல் விட்டால் அது பெரும் பிழை. முதலில் டாப்சி. ஒரே வார்த்தையில் கூறுவதானால் அற்புதம்!!! இவரை பல சினிமாக்களில் வெறும்  அழகு பொம்மையாக பயன்படுத்த்துவதை நினைக்கும்போது எரிச்சலும் ஏக்கமும்தான் மிஞ்சுகிறது. இவரது நேர்காணல்கள் சில பார்த்ததுண்டு. சமூகத்தின் பெண்ணின் நிலை பற்றியும், ஆண்  புரிதலில் உள்ள குறைபாடு பற்றியும் தெளிவான கருத்துக்களை முன்வைத்து பேசியதை நீங்களும் கவனித்திருக்கக் கூடும்.

அடுத்தது அமிதாப். அவரது நடிப்பைப் பற்றி இனி புதிதாக கூற வேண்டியதில்லை.  நிஜ வாழ்க்கையில் அவரின் பல கருத்துகளையும் பார்க்கையில், உண்மையிலேயே மிக அற்புதமான நடிப்பு என்பதை  யாரும் மறுப்பதற்கில்லை.  அதுவும் ஒரு வகை ஆஸ்த்துமா நோயளியாக இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார்.

அங்காட் பேடி தனது பங்கிற்கு அற்புதமாக நடித்துள்ளார். படத்தை பார்க்கும் யாவருக்கும் இவர் மீதும், இவரின் நண்பர்களின் மீதும் கோபம் வருவது நிச்சயம். கீர்த்தி குல்ஹாரி, ஆண்டிரியா ஆகியோரிலிருந்து, நீதிபதியாக நடிப்பவர், அமிதாப்பின் இறுதி வாதத்தை  கண்கலங்கியபடி கேட்டு கை குலுக்கும் பெண் போலிஸ் அதிகாரி என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.

இறுதி வாதத்தை வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து   அமிதாப், “நோ” என்று ஒற்றை வார்த்தையை மட்டும் கூறுகிறார். பின் “அது ஒரு வார்த்தையல்ல, ஒரு வாக்கியம்” என  கூறியபின் அவர் தரும் விளக்கம்தான் படத்தின் அடிநாதம்.  “முடியாது’ என்று ஒரு பெண் கூறுவாளாயின் அது ‘முடியாது’ என்றுதான் கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி,  முகம் தெரியாதவளாக, நண்பர்களாக, பெண் தோழியாக , காதலியாக , பாலியல் தொழிலாளியாக , அல்லது மனைவியாக என யாராக இருந்தாலும் , அவளுடைய விருப்பமில்லாமல் அணுகுவது பெருங்குற்றம்” என தெளிவாக அமிதாப்பின் கம்பீரமான குரலில் வரும்  வசனமே ‘பிங்க்’ நிறத்தின் மீது இருக்கும் போலி கற்பிதங்களை தகர்க்கும் இடம்.

பிங்க் பார்க்க வேண்டிய, பேச வேண்டிய படம்.

– சீத்தாராமன்

Courtesy: Maattru.com

Read previous post:
0a1k
“உன் உயிரை மனுநீதி தின்றது; உடலை மண் தின்னட்டும்! போய் வா, ராம்குமார்…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், அங்கு செப்டம்பர் 18ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். நீண்ட சட்டப்

Close