‘18-05-2009’ விமர்சனம்

தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிப்போரின்போது, சிங்கள ராணுவத்தினரால் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஓர் ஈழத்தமிழ்ப் பெண்ணின் நிஜ வாழ்க்கையைத் தழுவிய உருக்கமான கதை இது.

சிறுவயது முதலே பாடகியாக வேண்டும், தொலைக்காட்சியில் தோன்ற வேண்டும் என்ற கனவுடன் வளருகிறார் நாயகி தன்யா. ஈழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தும் தமிழீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. முதலில் அவரது தங்கை அந்த இயக்கத்தில் சேர்ந்து போராளியாகிறார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு இயக்கத்துக்கு வரும் தன்யாவுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால் அவரை களப் போராளியாக ஆக்குவதற்குப் பதிலாக, தங்களது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆக்குகிறது இயக்கம்.

இயக்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் தன்யா. அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. இந்த சமயத்தில் சிங்கள ராணுவம் இனஅழிப்புத் திட்டத்துடன் ஈழத்தமிழ் மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்துகிறது. இதனால், தன்யாவின் வாழ்க்கைச் சூழல் அடியோடு மாறுகிறது. சிங்கள இனவெறி ராணுவத்தினரின் பிடியில் சிக்கும் தன்யா, எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தப்பட்டு, சீரழிக்கப்பட்டு, கொல்லப்படுகிறார் என்பது நெஞ்சைப் பதற வைக்கும் மீதிக்கதை.

கதையின் நாயகியாக வரும் தன்யா, தன் பாத்திரத்தின் கனத்தையும், அதன்வழியே சொல்லப்படும் செய்தியையும் உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

ஒருகாலத்தில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவை இப்படத்துக்கு இசையமைக்க வைத்திருக்கிறார்கள். பாடலிசையோ, பின்னணி இசையோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இல்லை.

இறுதிப்போரின்போது ஈழத்தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை திரையில் கொண்டுவர துணிச்சலுடன் முயன்றிருக்கிறார் கர்நாடக தமிழரான இயக்குனர் கு.கணேசன். அவரது தமிழின உணர்வைப் பாராட்டும் அதேவேளை, அமெச்சூர்த்தனமாக திரைக்கதை அமைத்து, சலிப்பை ஏற்படுத்திவிட்டார் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். குறிப்பாக, தன்யாவை நிர்வாணமாக்கி, கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கும் இறுதிக் காட்சிகளை சஜஸ்டிவாக, வேறுவிதமாக காட்சிப்படுத்த தவறிவிட்டார் இயக்குனர்.

 ‘18.05.2009’ – இயக்குனரின் தமிழின உணர்வுக்காக ஒருமுறை பார்க்கலாம்!