கள்ளாட்டம் – விமர்சனம்

பகல் கொள்ளை அடிப்பதற்கு தான் தனியார் மருத்துவமனை, சட்டவிரோதமாக கொடுமைகள் செய்வதற்கு தான் காவல்துறை என்ற கசப்பான யதார்த்தம் பல்லிளித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், யதார்த்தத்துக்கு புறம்பாய் தனியார் மருத்துவமனை மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் போலியான படம் ‘கள்ளாட்டம்’.

நடுத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ரிச்சர்டும், சரிகாவும் கணவன்-மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஒருநாள் ரிச்சர்டு தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அந்த குழந்தை மீது மோதிவிட்டு தப்பிச் செல்கிறது. ரத்த வெள்ளத்தில் சரியும் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார் ரிச்சர்டு.

குழந்தையின் தலையில் அடிபட்டிருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதற்கு ரூ.20 லட்சம் செலவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்காக தனது வீட்டுப் பத்திரம், மனைவியின் நகை என அனைத்தையும் சேட்டு கடையில் விற்று பணம் பெறுகிறார் ரிச்சர்டு. ஆனால் அந்த சேட்டு, ரிச்சர்டு பின்னாலேயே  ஆள் அனுப்பி அந்த பணத்தை களவாடுகிறார்.

பணம் களவுபோனது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் ரிச்சர்டு. போலீஸ் அதிகாரியான நந்தாவும், அவருடன் பணிபுரியும் இளவரசுவும் களவு போன பணத்தை எப்படி மீட்பது என்று திட்டம் தீட்டுகிறார்கள். அதேவேளையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்..

ஆனால், ரிச்சர்டால் பணத்தை தயார் செய்ய முடியாத நிலை. எனவே, போலீஸ் அதிகாரியான நந்தாவும் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு வேண்டிய பணத்தை தயார் செய்ய முடிவு செய்கிறார். ஆனால், அறுவை சிகிச்சைக்கான நாள் நெருங்கும்போது, லஞ்சம் வாங்கியதாக நந்தாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு வேண்டிய பணம் தயார் ஆனதா? சிறையில் இருந்து நந்தா வெளியே வந்தாரா? குழந்தையின் உயிருடன் கள்ளாட்டம் ஆடிய அந்த நபர் யார்? என்பது மீதிக்கதை.

நந்தா ஏற்கெனவே போலீஸ் அதிகாரியாக நடித்து வெளிவந்த ‘வேலூர் மாவட்டம்’ பயங்கர ஃபிளாப். அப்படியிருந்தும், அந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், அசட்டுத் துணிச்சலுடன் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரி வேடம் அவருக்கு செட்டாகவில்லை. ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நடுத்தட்டு வர்க்க குடும்பத்தவராக வரும் ரிச்சர்டு, அவரது மனைவியாக வரும் சரிகா, வில்லனாக வரும் ஏழுமலை, போலீசாக வரும் இளவரசு, மருத்துவராக வரும் குமார் நடராஜன் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ரித்விகா, வயலா, அதினா ஆகிய மூன்று சிறுமிகளும் அட்டகாசமாய் நடித்துள்ளனர்

படக்கதை அரதப்பழசு. கொள்ளைச் சம்பவம், அதை சுற்றி நடக்கும் ஒரு விசாரணை என ஏற்கெனவே பார்த்துப் பார்த்து சலித்துப்போன பழசு. இயக்குனர் ஜி.ரமேஷ் திரைக்கதையிலும், காட்சியமைப்பிலுமாவது புதுமையை புகுத்தியிருப்பாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை. எரிச்சலூட்டியிருக்கிறார்.

கதை, திரைக்கதை, காட்சியமைப்பு என எதுவும் சரியில்லாதபோது, “பாடலிசை, பின்னணி இசை சூப்பர்”, “ஒளிப்பதிவு சிறப்பு” என சொல்லி என்ன பயன்? லாபவெறியில் சட்டவிரோதமாக ஆடுவதும், உண்மையாக இல்லாமல் பாவனையாக ஆடுவதும் கள்ளாட்டம் எனில்,

‘கள்ளாட்டம்’ – படக்குழுவின் கள்ளாட்டம்!